புதன், 5 ஜனவரி, 2022

கேள்வி : லிங்க்ட் இன் என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி? பயன்கள் என்ன?


என் பதில் : 


முதலில் அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்த சில ருசிகரமான விஷயங்களைப் பார்க்கலாம்:


நீங்கள் புது ஊருக்குப் போகிறீர்கள். வீட்டு வேலை செய்ய ஒருவர் வேண்டும். என்ன செய்வீர்கள்? அக்கம் பக்கத்தில் விசாரிப்பீர்கள். பின்னர் பரிந்துரைகளை ஏற்று, ஒருவரை வேலைக்கு சேர்ப்பீர்கள். இந்த முறையைத்தான் மளிகைக் கடை, பால் / பேப்பர் போடும் பையன், தண்ணீர் கேன் என்று அனைத்துக்கும் பின்பற்றுவீர்கள்.


கோவில், மற்றும் பொது இடங்களில் கீழ்க்கண்ட உரையாடல்களைக் கேட்டிருக்கலாம்:


பெண்மணி 1: நேத்திக்கி எங்க வீட்டில பட்சணம் செஞ்சோம். காமாட்சி அம்மா  செஞ்ச ஐட்டங்களெல்லாம் அவ்வளவு சூப்பர். உங்க வீட்டில ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.


பெண்மணி 2: போன வாரம் எங்க வீட்டில இறப்பு நிகழ்வுக்கு  சமைக்க வந்திருந்த அகல்யா காரியம் அவ்வளவு நேர்த்தியாக்கும்.


ஆண் 1: போன வாரம் வண்டி சர்வீஸுக்கு பாலன் கிட்ட விட்டேன். சொதப்பிட்டான். அவன் பண்ணின கோளாறுகளை சரி செய்ய தனியா செலவு செய்ய வேண்டியிருந்தது.


ஆண் 2: சார், என் கம்பெனியை கூடிய சீக்கிரம் மூடப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். உங்களுக்கு நிறைய பேரைத் தெரியுமே. எனக்கு எங்காவது ஒரு வேலை வாங்கித் தாங்களேன்.


ஆண் 3: என் காரை விக்காலம்னு இருக்கேன்.


ஆண் 4: நம்ம ஆரிய  பவன் நெய் தோசை கட்டாயம் சாப்பிட்டே ஆக வேண்டும்.


லிங்க்ட்இன் கிட்டத்தட்ட இந்த மாதிரி ஒரு பெரிய தகவல் பரிமாற்று முறை என்று வைத்துக் கொள்ளலாம்.


மேலே குறிப்பிட்ட உதாரணங்கள் ஒரு “வாய்வழி லிங்க்ட்இன்” என்று சும்மனாக்காச்சியும் வைத்துக் கொள்ளலாம்.


லிங்க்ட்இன் இணையத்தில் உலகின் மிகப்பெரிய தொழில்முறை நெட்வொர்க் ஆகும். சரியான வேலை அல்லது இன்டர்ன்ஷிப் கண்டுபிடிக்க, தொழில்முறை உறவுகளை இணைக்கவும் மற்றும் வலுப்படுத்தவும், உங்கள் வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்ளவும் நீங்கள் லிங்க்ட்இன் ஐப் பயன்படுத்தலாம். டெஸ்க்டாப், லிங்க்ட்இன் மொபைல் ஆப், மொபைல் இணைய அனுபவம் அல்லது லிங்க்ட்இன் லைட் ஆண்ட்ராய்டு மொபைல் செயலியில் இருந்து நீங்கள் லிங்க்ட்இன் ஐ அணுகலாம்.


அனுபவம், திறன்கள் மற்றும் கல்வி மூலம் உங்கள் தனிப்பட்ட தொழில்முறை “கதை”யை காண்பிப்பதன் மூலம் ஒரு முழுமையான லிங்க்ட்இன் சுயவிவரம் வாய்ப்புகளுடன் இணைக்க உதவும்.


ஆஃப்லைன் நிகழ்வுகளை ஒழுங்கமைக்கவும், குழுக்களில் சேரவும், கட்டுரைகள் எழுதவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இடுகையிடவும் மேலும் பலவற்றிற்கும் நீங்கள் லிங்க்ட்இன் ஐப் பயன்படுத்தலாம்.


நிறைய பேர் லிங்க்ட்இன் என்பது சாஃப்ட்வேர் (IT) இல் மட்டும் வேலை பார்ப்பவர்களுக்கானது என்றும், அது ஒரு வேலை வாய்ப்பு தளம் என்றும் (தவறாக) நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


லிங்க்ட்இன் ஐ எவ்வாறு பயன் படுத்த வேண்டும்?


1. உங்கள் தொழில்முறை விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதனைப் படிப்பவர்களுக்கு உங்கள் திறன் என்னென்ன என்று தெளிவாக விளங்க வேண்டும்.


2. உங்கள் தொழில்முறையில் சம்பந்தப்பட்ட (கிட்டத்தட்ட உங்கள் ஸ்கில்செட்) கொண்டவர்களை உங்கள் “குழு” வில் லிங்க்ட்இன் சேர்த்து விடும்.


3. இதனால், உங்கள் தொழில்முறை ஞானம் வேண்டும் என்று யாராவது தேடினால் உங்கள் பெயரும் தேடியவருக்கு காணக்கிடைக்கும்.


4. உங்களைப் பற்றி நீங்களே ஒசத்தியாகக் கூறிக் கொள்வதை விட ஒரு மூன்றாம் மனிதர் உங்களைப் புகழ்ந்து அறிமுகம் செய்தால் உபயோகமாயிருக்குமல்லவா - கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் ரூ10 கொடுத்து அவரை “தில்லானா மோகனாம்பாள் சிவாஜி மாதிரி வாசிக்கிறார்” என்று விளம்பரம் செய்வதைப்போல? உங்கள் மேலாளர் வகையறாக்களை “வேண்டி”, உங்களைப் பற்றி recommendation எழுதி வாங்கி லிங்க்ட்இன் தளத்தில் வைத்துக் கொள்ளலாம்.


கடைசியாக ஒரு வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால் – லிங்க்ட்இன் ஒரு நபரின் தொழில் முறை திறமைகளயும், தொழில்முறை சாதனைகளையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவும் சுய விளம்பரத் தளம்.


நன்றி ..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக