செவ்வாய், 30 ஜூலை, 2019

தொழிலோ வியாபாரமோ தொடங்குபவரா ?
பெரிய வெற்றித்தான் உங்கள் இலக்கா ?
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதில் சில முக்கியமானவை இங்கு உங்களுக்காக
1) நம்பிக்கை – ( CONFIDENCE )
உங்கள் தொழிலில் நீங்கள் வெற்றி பெற மிகவும் முக்கியமான ஒன்று நம்பிக்கை. அதாவது உங்கள் மேலும் உங்கள் தொழிலின் மீதும் இது மிகவும் அவசியம். நம்பிக்கை வையுங்கள் பெரிய வெற்றி ஓரு நாள் உங்களை தேடி வரும்
2) சின்ன சின்ன வெற்றிகளை புறந்தள்ளாதீர்கள். பெரிய வெற்றிகளை அடைவதே நம் லட்சியம் அதற்கான வழியில் சிறிய சிறிய வெற்றிகளும் தோல்விகளும் தேடி வரும் அவற்றை குறைத்து மதிப்பிடாதீர்கள் அவையே உங்களுக்கு வழிகாட்டி
3) தொழிலோ வியாபாரமோ பெரிய பயணம், அதில் கடக்க வேண்டிய தூரம் மிகவும் அதிகம். அதனை ஒரே நாளிலோ தொடங்கிய சில நாட்களிலோ அடைந்து விட முடியாது அதற்கான பொறுமையும் அவசியம்
4) தோல்விகள் நிச்சியம் வரும் அதனை நாம் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறோம் என்பதே இங்கு முக்கியம் இன்று தோல்விகளை கண்டு நாம் பின்வாங்கினால் 2 அடி தூரத்தில் உள்ள வெற்றியை நாம் இழந்து விடுவோம் அதனால் அஞ்ச வேண்டாம் வெற்றி நிச்சியம் ஒரு நாள் நமக்கு
5) தோல்விக்கான காரணத்தினை ஆராயுங்கள் நாம் செய்த தவறு என்ன அதனை எப்படி மாற்றிக்கொண்டால் வெற்றி என்பதனைப் பற்றி சிந்திப்போம்
6) மதிப்பளிங்கள் – நீங்கள் செய்யும் வேலையை நீங்களே மதிக்கவில்லை என்றால் ? கெளரவக்குறைச்சலாக நீங்களே உங்கள் தொழிலை நினைத்தால் மற்றவர் எப்படி மதிப்பார்கள் உங்களை
7) அதிகம் பேசுவதை தவிருங்கள். அடுத்தவர் பேசுவதனைக் காது கொடுத்து கேளுங்கள் அதில் உங்களுக்கு ஒரு விஷயமிருக்கலாம் அதனை பயன்படுத்தி நீங்கள் முன்னேறலாம்
8) குழப்ப வேண்டாம், திட்டமோ செயல்முறைகளோ எளிதாக இருக்கட்டும். பக்கம் பக்கமாக திட்டம் போட்டால்தான் நமது வேலை பெரிய வேலை என்றும் மற்றவர்கள் மதிப்பார்கள் என்பது சுத்த பேத்தல்
9) எப்போதும் உம்மென்று இறுக்கமாக இருக்கவேண்டாம். சிரித்த முகத்துடன் தொடங்குகள் எல்லாம் வெற்றித் தான்
10) இவற்றை விட மிகவும் முக்கியமானது நிங்கள் செய்யும் தொழிலில் ஞானம், அதில் எதுவும் முடிவடைவது இல்லை. தினம் தினம் புது புது விஷயங்கள் நிறைய வருகிறது அதனை தேடி தேடி கண்டுபிடியுங்கள் உங்கள் வசமாக்குங்கள் வெற்றி உங்கள் வீடு தேடி ஓடி வரும்.
பிரபலம் என்றால் என்ன ? (நான் அறிந்துக் கொண்ட விதத்தில்)
ஒரு முறை ஆசிய அளவிலான சப்-ஜூனியர் - Under15 (ஆண்கள் ) சதுரங்கப் போட்டி மும்பையில் நடந்து .. கடைசி நாளன்று .. எல்லோருக்கும் அறிந்த முகமான "கபில் தேவ் " பரிசளிப்பு விழாவிற்கு தலைமைத் தாங்குவதாய் இருந்தது.. காலையில் போட்டி நடக்கும் நேரத்தில் அந்த இடத்திற்கு அவர் வந்தார்... பத்துநிமிடம் சுற்றிப் பார்த்துவிட்டு உடனே சென்று விட்டார்..
மாலையில் அவர் பரிசளிப்பு விழாவிற்கு வந்தபோது பேசினார்... அப்போட்டியில் ஒரு  மாணவன்  9/9 புள்ளிகள் எடுத்து தங்கப் பதக்கத்தையும் .. இன்னொரு மாணவன்  7/9 எடுத்து வெண்கலத்தையும் வென்றனர் ... அப்போது அவர் குறிப்பிட்டது :
" காலையில் இங்கு வந்தேன் .. சதுரங்க வீரர்கள் தலைக்கனம் பிடித்தவர்கள் என்று முடிவு செய்து கோபத்தில் சென்று விட்டேன்... ஆம் .. நான் ..என்தலை மைதானத்தில் தென்பட்டால் ..ஆரவாரத்தையும் கூச்சலையும் கண்டு பழகியவன்.. ஆனால் இங்கு வந்தபோது ஒருவரும் புருவத்தைக்கூட உயர்த்திப் பார்க்காமல் என்னை அவமதித்து விட்டார்கள் ... என்றே நான் நினைத்தேன்.. பின்னர் யோசிக்கையில் எனக்கு புரிந்தது... அத்தனை பேருக்கும் என்னைத் தெரியும்... ஆயினும் இவர்கள் என்னைக் கண்டுக் கொள்ளவில்லை.. அத்தனை மும்முரமாக தன் கவனம் முழுவதையும் தங்கள் செயலில் ஒருமுகப் படுத்தி அவர்கள் விளையாடியதில் ஓர் கர்ப்பகிரகத்தின் தூய்மை.. அமைதி இருந்ததை உணர்ந்தேன்... காலையில் நான் உங்கள் மீது கோபமாய் சென்றதற்கு மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன் .. அதுவரையில் அவர் கோபமாய்த் தான் சீக்கிரமா போனார் என்பது யாருக்கும் தெரியாது ).. இவர் பிரபலம் ஆனதில் தவறுள்ளதா... ?

நான் குறிப்பிடும் பிரபலம் நீங்கள் அல்ல என்று ஒருவரிடம் சொன்னால் ..அப்போ வேறு யார் தான் பிரபலம் .. பிரபலத்திற்கான அளவுகோல் என்ன என்று கேட்டால் .. என்ன சொல்வது... ஷகீலாவும் பிரபலம்... நித்யஸ்ரீ யும் ..அனுஷ்காவும் பிரபலம் .. ஆனால் இவை எல்லாம் ஒரே விதமான பிரபலமா ? இதற்கான வரைமுறைகளை எங்கே வரைய முடியும் ?
எனில் நீங்கள் பிரபலம் என்று சொல்வது யாரை... சிலர் தங்கள் பெயருக்குப் பின்னாலோ முன்னாலோ கவிஞன், எழுத்தாளன் என்ற அடைமொழியை சேர்த்து தானே அறிமுகப் படுத்திக் கொள்கிறான்.. முன்னர் கவிஞன் ..எழுத்தாளன் என்பவன் தனது எழுத்துக்களினால் பிரபலம் ஆனான்... இங்கு முகநூலில் தனது பெயரினால் பிரபலப் படுத்திக் கொள்கிறான்.. சிலரின் பெயர்கள் கூட புனைப் பெயராக .. அவர்களின் அறிமுக அடையாளம்கூட .. உயிரற்ற அக்றிணைப் பொருளாய் இருக்கையில்...
அவன் பிரபலம் என்றால்.. நான் எந்த அளவுக்கு குறைந்து போனேன்.. என்னை ஏன் பிரபலம் எனக் குறிப்பிடாது இருக்கிறீர்கள் .. என்று கேட்டால்... நான் சொல்லவில்லையே உங்களை பிரபலம் என.. நீங்கள் சொல்வதற்கு நீங்கள் தானே விளக்கம் தர வேண்டும் .. அதையும் மீறி .. "பிரபலம்" என அழைத்திருந்தால் ...... "பேபி" என்று பெயருடைய மூதாட்டி இருப்பதில்லையா... அதுபோலவே தான் ... இதில் இன்னார் தான் அடங்குவர்.. இப்படித் தான் ஆகவேண்டும் என்று சொல்வதற்கில்லை ... அந்த நேரத்தில் எங்கு இருக்கிறோமோ அதைப் பொறுத்து பிரபலம் என்பது பொருள்படும்.. சில நேரங்களில் வஞ்சப் புகழ்ச்சி அணியாய் கூட நான் பயன் படுத்துவேன் ....
யாரோ யாரையோ பிரபலம் என்று சொன்னால் அது தவறு சரி என்று நிரண்யம் செய்ய நமக்கந்த அதிகாரம் தந்தது யார்? நாம் எதற்காய் இதைக் குறிதது விவாதித்து சண்டை இடவேண்டும் ..
எனவே இதைப்படிப்போர் யாரும் தங்களைத் தான் நான் குறிப்பிட்டேன் என்று எடுத்துக் கொள்ளாமல் .. ஒரு மாணவன் எழுதிய கட்டுரையாய் இதனை எடுத்துக் கொண்டு .. திருத்தங்கள் செய்ய வேண்டிய இடங்களைக் குறிப்பிட்டு இதற்கான மதிப்பெண்ணையும் தந்தால் "ஆத்தா ... நான் பாசாயிட்டேன் " என்று சொல்லி இன்றைய தினத்தில் சந்தோஷமாய் இங்கு வலம் வருவேன் ..
(மதிப்பெண் இடுகையில் நீங்கள் ஆப்பிரிக்க தேசத்து அன்னபூரணியாய் கஞ்சனாய் இருக்காமல் மலை நாட்டு மங்கையைப் படைத்த பிரும்மனாய் ..வள்ளலாய் இருக்கவும் ..)
சபையோர் யாவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம் ..

புதன், 24 ஜூலை, 2019


தேதியில்லா குறிப்புகள்.....பாரதியின் .வீடு..
ஊரில் சொந்தமாக வீடு இருந்தாலும், தூத்துக்குடியில் வேலைக்கு சேர்ந்த பின்னர் நிறுவனத்திற்கு சொந்தமான வீடுகளில் இடம் கிடைக்க பல வருடங்கள் ஆகக்கூடும் என்பதால் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டலாம் என்று யோசனை பல நண்பர்களால் எனக்கு வழங்கப்பட்டது. 
ஊரிலேயே வீடு கட்டலாமா...? அல்லது மதுரையில் வீடு கட்டலாமா என்ற எண்ணமும் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் பின்னர் அதை நிராகரித்து விட்டேன். நண்பர்கள் சந்தானம், செவ்வேள் ஆகியோரின் ஆலோசனை பேரில் தூத்துக்குடி நகரத்தில் வீடு கட்ட இடம் பார்த்தேன். சில இடங்கள் வாங்கலாம் போல இருந்தாலும் விலை அதிகமாக இருந்தது.
அப்போது சுந்தரம் நகரில் நண்பர்களுடன் வசித்து வந்தேன். அப்போதுதான் அத்திமரப்பட்டி ரோட்டில் புதிதாக அமைத்திருக்கும் மனையடியில் ஒன்றை வாங்கலாம் என்று யாரோ சொன்னார்கள். சில மாதங்களுக்கு முன்பாக கருவேலி மரங்களாக இருந்தது அந்த இடம். அதே இடத்தை சில மாதங்கள் முன்னர் "இந்த இடத்தை எவனாவது செண்ட் மூவாயிரம் கொடுத்து வாங்குவானா..?" என்று எண்ணிய அதே என்னுடைய எண்ணம் இப்போது என்னைப்பார்த்து நகைத்தது.
நான் பணி புரிந்த நிறுவனத்தின் உணவகத்தில் தளவாய் என்பவர் பணி செய்து வந்தார். அவரும் அவருடைய உதவியாளராக அங்கே இருந்த முருகன் என்பவரும் சேர்ந்து காலி இடத்தை வாங்கி மனையடியாக மாற்றி விற்பனை செய்து வந்தனர்.
அந்த இடத்தில் விற்காமல் இருந்த கடைசி மனையடி அதுதான் என தளவாய் சொன்னார். பெரும்பாலும் நிறுவனத்திலேயே பணிபுரியும் நண்பர்களே மற்ற இடங்களை வாங்கி இருந்தனர். 
அந்த மனையடி கடைசியாக இருந்தது. மனையடியின் பின்பக்கம் பனைத்தோப்பு. வலதுபுறம் ஒரு பழைய வீடு. எதிரே பத்தடி தெரு. இடது பக்கம் கண்ணன் வாங்கியிருந்த இடம். அந்த இடம் கிட்டத்தட்ட ஒரு "ப" வடிவத்தில் அமைந்த காலனி போல் அமைந்திருந்தது. கிட்டத்தட்ட சதுரம் போல ஐந்து செண்டில் அமைந்த அந்த மனை ஓரளவுக்கு மனதுக்கும் பிடித்திருந்தது. காற்றோட்டம், பாதுகாப்பு வசதி போன்றவை பரவாயில்லை என்பதாகவும் தோன்றியது.
ஒரு வழியாக பேரம் பேசி, நிறுவனத்தில் வருங்கால வைப்பு நிதியில் இருந்து சுமார் இருபத்தி எட்டாயிரம் பி.எப் கடன் பெற்று, பத்திரம் முடிக்க கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் ரூபாய் ஆனதாக நினைவு. வீடு கட்ட நிறுவனத்தில் கடனுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். வீடுகட்ட பிரபலமாக இருந்த மலர் கன்ஸ்ட்ரக்ஷனை அணுக கண்ணன் வலியுறுத்தினான். பிரதீப்பும் நானும் அங்கே சென்று பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து கொண்டோம். 
வீடு எப்படி இருக்க வேண்டும் என்று நானும் பிரதீப்பும் யோசனை செய்து ஒரு உத்தேச திட்டத்தை சொன்னோம். கீழ் வீட்டின் ஒரே தளத்திலேயே இரண்டு படுக்கை அறைகள் அமைவதாக - அதாவது ஒரு படுக்கையறை தரை மட்டத்திலும், மற்ற படுக்கையறை அதற்கு மேலாகவும் - திட்டம் போட்டிருந்தோம். அதனால் கீழ் வீட்டின் ஹால் கூரை சுமார் 17 அடி உயரத்தில் வருவதாக ஆனது. இதை எழுத்தில் விளக்குவது சற்று சிரமம் தரக்கூடியது. அதாவது வீட்டினுள்ளேயே படிக்கட்டுகள் மூலமாக படுக்கையறைக்கு செல்வதாக அமைந்திருக்கும். 16 * 12 அடி என்கிற அளவில் வரவேற்பறையும், 12*12 அடி என்கிற அளவில் படுக்கையறைகளும், 16* 9 அடி என்கிற அளவில் சமையலறையும் இருப்பதாக திட்டம் போட்டோம். ஒரு படுக்கையறை குளியல் மற்றும் கழிப்பறை இணைந்ததாக இருந்தது. ஒரு பரண், தேவையான இடங்களில் பொருட்களை வைக்க இடம்... இப்படி எல்லாவற்றையும் யோசித்து யோசித்து அமைத்தோம். ஆனால் இங்கு ஒன்றை சொல்லியாக வேண்டும். வாஸ்து போன்றவற்றில் நம்பிக்கை கிடையாது என்பதால் வசதியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு திட்டம் அமைத்தோம். பின்புறம் தோட்டத்திற்கு செல்ல ஒரு வாசலும் அடங்கி இருந்தது. உத்தேச வரைபடமும் தயாரானது. கீழே பெரிய வீடாகவும், மேலே ஒரு சிறிய குடித்தனம் இருக்கக்கூடியதாகவும் வரைபடம் அமைந்திருந்தது. தோற்றமும் பிடித்திருந்தது. 
விரைவில் வேலை ஆரம்பித்து விடலாம் என்று பொறியாளர் சொன்னார். ஒரு பிப்ரவரி மாதத்தின் நல்ல நாளில் ( ? ) பூமிபூஜை போடப்பட்டதாகவும் நினைவு. முதலில் வீடு கட்ட ஒரு தண்ணீர் தொட்டி தேவைப்படும் என்பதால், வீட்டின் பின் மூலையில் ஒரு பெரிய கிடங்கு தோண்டி, அதையே பின்னர் "செப்டிங்" தொட்டியாக மாற்றிக்கொள்ளலாம் என்று திட்டம்.
இதே நேரத்தில் வீட்டில் மரக்கன்றுகளை ஆரம்பத்திலேயே நட்டால் நல்லது என்பது பிரதீப்பின் ஆலோசனை. ஒரு மாதுளை கன்று, மூன்று தென்னங்கன்றுகள், ஒரு அரைநெல்லி மரக்கன்று , இரண்டு வேப்பமரக்கன்றுகள் ஆகியவற்றை நர்சரியில் இருந்து வாங்கி வந்தோம். தேவையான ஆழம் தோண்டி, உரங்கள் இட்டு மரங்களை நட்டோம். வீட்டு முகப்பில் இரண்டு வேப்பமரக்கன்றுகள் நடப்பட்டன.
தண்ணீர் தொட்டி கட்டும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு கட்டிடத்தொழிலாளர்கள் மட்டும் வேலை பார்த்தனர். சில நாட்களில் ஆழமாக கிடங்கு தோண்டப்பட்டு அதில் தொட்டியும் கட்டப்பட்டது. குறிப்பிட்ட நாட்கள் கழித்து தண்ணீர் ஊற்றப்பட்டது. அடுத்த நாள் காலையில் சென்று பார்த்தால், தண்ணீர் ஊற்றப்பட்ட தொட்டியில் பெரிய விரிசல்.!! 
கவனக்குறைவான அல்லது தரக்குறைவான கட்டுமான பணி என்று எனக்கு தோன்றியது. முதலில் ஆரம்பித்த இது போன்ற சாதாரண வேலையிலேயே பிரச்சினை என்றால் கட்டிடப்பணி எப்படி இருக்கும் என்கிற எண்ணம் எனக்கு வந்தது. எனவே பொறியாளரிடம் நேரடியாக பேசினேன். "இது போன்ற சாதாரண வேலையில் பிரச்சினை என்றாலும், பின்பு வீடு கட்டும் போது ஏற்படும் பிரச்சினைகள் வேண்டுமென்றே கவனக்குறைவாக செய்வதாக எனக்கு தோன்றும். வீணான சச்சரவு உண்டாகும். எனவே இது வரை நடந்த வேலைக்கான பணத்தை தந்து விடுகிறேன். அநாவசியமாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல்.. வேறு நபரிடம் வீடு கட்டும் பணியை ஒப்படைத்து விடுகிறேன்" என்று சொன்னேன்.
பொறியாளரும் மிகவும் நாகரீகமாக சொன்னதை ஒப்புக்கொண்டார். தர வேண்டிய பணத்தை கொடுத்து முடித்தேன். மறுபடியும் யாரிடம் வீடு கட்ட கேட்கலாம் என்ற போது நண்பர்கள் "சேகரன்" என்கிற நபரை பரிந்துரைத்தார்கள்.
அவர் கட்டிடக்கலையில் பட்டம் பெற்றவரல்ல... ஆனால் அதில் அதிகம் அனுபவ அறிவு இருப்பவர். மிகவும் நல்லவர் - இப்படியெல்லாம் சொன்னார்கள். நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி அவர் கட்டிய வீடுகள் சிலவற்றை பார்வையிடச் சொன்னார்கள். நானும் பார்த்தேன். பார்வையிட்டதில் எனக்கு பெரிதாக ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் வீடுகளெல்லாம் நன்றாக இருப்பது போலதான் எனக்கு தோன்றியது.
அவரிடம் பேசிய பின்னர் மறுபடியும் வீட்டுத்திட்டத்தில் மேலும் சில மாற்றங்களை செய்யலாம் என்று சொன்னார். சற்று யோசித்த பின்னர் அதன்படியே செய்யலாம் என்று ஒப்புக்கொண்டு, புது வரைப்பட திட்டம் தயாரித்து, பஞ்சாயத்தில் ஒப்புதல் பெற்று, நிறுவனத்தில் காண்பித்து வீடு ஆரம்பித்து விடலாம் என்கிற நிலை வந்தது.
சந்தானம் அண்ணாச்சி, செவ்வேள் முன்னிலையில் அவருடைய வீட்டில் சேகரனிடம் புதிதாக வீடு கட்டுவதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டோம்.
வீடு கட்டும் வேலை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, ஒரு சிறிய ஓலைக்குடிசை ஒன்றை போட்டால் நல்லது என்று சேகரன் சொன்னார். அதன் படியே வீட்டுக்கு முன்பாக ஒரு சிறிய குடிசை போடப்பட்டது. ஆரம்பத்தில் வீடு கட்ட தேவையான சில கருவிகள், சிமெண்ட் போன்றவற்றை வைக்க அது உபயோகிக்கப்பட்டது.
அவர் வீடு கட்டும் போது ஒரு பகுதியை கிழக்கு பக்கமாக ஒரு இஞ்சாவது இழுத்து ( ! ) கட்ட வேண்டும் என்று சொன்னார். பின்பு அஸ்திவாரத்திற்கும், செங்கல் கட்டடத்திற்கும் வித்தியாசம் தெரியாதபடி புதுமுறையில் அமைக்கப் போவதாகவும் சொன்னார்.
வீடு கட்டும் போது, முழுவதும் உடனிருந்து பார்த்துக்கொள்ள, விளாத்திகுளத்திற்கு அருகில் இருக்கும் ஒரு இடத்தில் இருந்து ஒருவரை அவரே அழைத்து வந்தார். அவர் ஒரு இளைஞர். கடினமான உழைப்பாளியாக தென்பட்டார். அவர் நல்ல முறையில் அங்கேயே தங்கி இருந்து வேலைகளை கவனித்து வந்தார்.
இந்த குறிப்பிட்ட சில நாட்கள் பழக்கத்திலேயே சேகரனை நான் முழுவதுமாக நம்ப ஆரம்பித்து விட்டேன். ஏற்கனவே விரிசல் விட்டிருந்த தொட்டியை உடனடியாக பழுது பார்த்தார். சுறுசுறுப்பாக அடிக்கடி வீடு சம்பந்தமாக, வீடு கட்டத்தேவையான தண்ணீரை வண்டிகள் மூலமாக எப்படி கொண்டு வருவது சம்பந்தமாக, வீடு கட்டுவதை எப்படி செய்யலாம் என்று... அடிக்கடி ஆலோசனை செய்வது என்று... அவரது நடவடிக்கைகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.
நான் எந்த அளவிற்கு அவரை நம்பினேன் என்றால், அஸ்திவாரம் போடும் போது நான் நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுப்பயணம் செல்லும் அளவுக்கு...! கொடைக்கானலில் இருந்து வரும் போது கிட்டத்தட்ட தரை மட்டத்திற்கு சற்று மேலே கல் கட்டப்பட்டிருந்தது.
வீட்டின் வரைபடத்தின் படி, முன்பகுதி அஸ்திவார கல்கட்டிடம் சற்று குறைவாகவும், பின்பகுதி சற்று உயரமாகவும் கட்டப்பட்டிருந்தது.
வீடு கட்டும் போது மேற்பார்வையிடவும், பொருட்களை வைத்துக்கொள்ள வசதியாகவும், அதே தெருவில் வீடு கட்டி குடியேறியிருந்த நண்பர் விஜயனின் பின் வீட்டில் வாடகைக்கு வந்தேன். அம்மாவையும் உடன் அழைத்து வந்து விட்டேன். அப்பா அவ்வப்போது வந்து செல்வார்.
அஸ்திவாரத்திற்கு, செங்கல் கட்டுக்கு, கான்கிரீட்டுக்கு, சுவர் பூச்சுக்கு... என்று தனித்தனியாக...எவ்வளவு மணலுக்கு எவ்வளவு சிமெண்ட் கலக்க வேண்டும் என்றெல்லாம் ஏற்கனவே ஒப்பந்தத்தில் இருந்தது. அதை அவ்வப்போது கவனிப்பதுதான் பெற்றோர்களின் முக்கிய கடமையாக மாறி விட்டது.
வீடு கட்டும் செங்கல் வாங்க சீவலப்பேரியில் தயார் செய்யப்படும் செங்கற்கள்தான் நன்றாக இருக்கும் என்று அங்கே உள்ள ஒரு செங்கற்சூலைக்கு அழைத்துச் சென்றார் சேகரன். பழையகாயல், ஆத்தூர், ஏரலைக் காட்டிலும் அங்கே தயாரிக்கப்படும் கற்கள்தான் சிறந்ததாம்.. நிறமும் நன்றாக இருக்கும் என்று அவர்தான் சொன்னார். சூலையில் செங்கற்களுக்கும் நன்றாகத்தான் இருந்தன. எத்தனை 'லோடு' (லாரி மூலம் ஒரு முறை கொண்டு வரப்படும் செங்கற்களின் அளவு ஒரு லோடு ) தேவை என்பதை ஏறக்குறைய கணக்கிட்டு முன்பணம் எல்லாம் கொடுத்து விட்டு வந்தோம்.
வீடு கட்ட நல்ல நீர் அத்திமரப்பட்டியில் இருந்து கொண்டு வரப்பட்டது. தேவையான சிமெண்ட் அத்திமரப்பட்டி ரோட்டிலேயே இருந்த ஒரு சிமெண்ட் கடையில் தேவையான போது எல்லாம் வாங்கப்பட்டது. வேலை எல்லாம் நன்றாகவே நடந்ததாகத்தான் நினைவு.
வரைபடம் எல்லாம் முன்னேற்பாடாக இருந்தாலும், வீடு கட்டும் போதுதான் நடைமுறையில் உள்ள சிக்கல்கள் என்ன என்ன என்பதெல்லாம் தெரிய வந்தன. வீட்டினுள்ளேயே இருந்த படுக்கையறைக்கு வீட்டின் உள்ளே இருந்து ஒரே வரிசையில் மாடிப்படி மூலம் செல்வதாக வரைபடம் இருந்தது. ஆனால் நடைமுறையில் அவ்விதம் போட்டால் மாடிப்படி செங்குத்தாக இருப்பதாக அமையும் என்று தோன்றியது. அதற்காக மாடிப்படி முதலில் ஏறி ஒரு இடத்தில் திரும்பி, பின்னர் மறுபடி ஏறி படுக்கையறையை அடைவதாக மாற்ற வேண்டியதாயிற்று. இதனால் ஹாலின் ஒரு குறிப்பிட்ட பகுதி மாடிப்படி அடைத்துக்கொண்டது.
இதே போல வீட்டின் பின் வாசல் நேராக சமையலறையிலிருந்து செல்வதாக அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்விதம் இருந்தால் சமையலறையில் பாதியளவு உபயோகிக்க முடியாததாகி விடும் என்பது தெளிவாக தெரிந்தது. அதனால் குளியலறையில் மாற்றம் செய்து, அதன் பக்கவாட்டில் பின்வாசல் அமைக்கப்பட்டது.
தேவையான இடங்களில் பொருட்களை வைப்பதற்கான தளங்கள் கட்டப்பட்டன. சமைலறையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பரண் அமைந்தது. அதை கட்டிய பின்னர் அதை பூஜையறையாக்க வேண்டும் என்று அப்பா சண்டை போட்டது தனிக்கதை..!
வீட்டின் வாசல் நிலைக்கு தேக்கு மரமும், ஜன்னல்களுக்கு மலேசிய கோங்கு மரமும் உபயோகிக்கப்பட்டது. 
வீட்டை பார்வையிட எப்போது வந்தாலும், எங்கள் வீட்டிலேயே எப்போதும் உணவருந்தும் அளவுக்கு அவருடனான நட்பு இருந்தது. அவ்வப்போது அவருக்கு தரும் பணம் எவ்வளவு என்பதை மட்டும் நாட்குறிப்பில் குறித்து வந்தேன். 
பக்கத்தில் கண்ணன் வீட்டு கட்டிடமும் கட்டப்பட்டு வந்தது. அவன் மாடிக்கு செல்லும் சுவர் தவறுதலாக பொது இடத்தில் கட்டப்பட்டு விட்டது. அதை நான் பெரிது படுத்தவில்லை. இருந்தாலும் சேகரன் விடவில்லை. பிற்பாடு பிரச்சினைகள் வரும் என்று வாதிட்டார். மறுபடியும் வீட்டின் வெளிப்புறத்தில் இருந்து மாடி வீட்டுக்கு செல்ல வேண்டிய மாடிப்படிகளும் மாற்றி அமைக்கப்பட வேண்டியதானது. அப்போது செல்லும் மாடிப்படியை பொதுசுவற்றில் நானும் இணைக்க வேண்டும் என்று வற்புறுத்தி அவ்வாறே செய்தார்.
வீட்டை பார்த்து வந்த நபரும் நல்ல முறையில் தொடர்ந்து கட்டிடத்திற்கு தண்ணீர் தெளிப்பது, கட்டிடத்திற்கு தேவையான பொருட்களை பராமரித்து வருவது போன்றவற்றை சிறப்பாகவே செய்து வந்தார். அவர் சில நேரம் மட்டுமே எங்கள் வீட்டில் உணவருந்தினார். மற்ற நேரங்களில் உணவகத்திலேயே உணவு உட்கொண்டார்.
அப்போது வீடு கட்டும் பணிகளுக்கு தண்ணீர் தெளிக்கவும், பிற்பாடு மேல்நிலை தண்ணீர் தொட்டிக்கு தண்ணீரை ஏற்றவும் வசதியாக இருக்கும் என ஒரு மோட்டாரை சுமார் ஐந்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்தோம். அது ஓரளவுக்கு பயனுள்ளதாகவே இருந்தது.
சமைலறை மேடையில் கடப்பா கற்கள் பதிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால் சேகரன் கான்கிரீட் மூலமே அவ்விதமான மேடை அமைக்க முடியும் என்றும் கடப்பா கற்கள் போன்றே தோற்றம் தரும் விதமாக கருப்பு வண்ணத்தில் நன்றாக செய்து தருவதாகவும் சொன்னார். அவ்விதம் அமைக்கப்பட்ட மேடையில் சமையல் வாயு செல்லும் குழாய்க்கான துளையும் அமைக்கப்பட்டது. பலசரக்கு சாதனங்கள் வைக்க பல சிறிய அடுக்குகளும் அமைக்கப்பட்டன. சமையலறையில் இருந்து புகை வெளியேற ஜன்னல்களும் அமைக்கப்பட்டன.
எல்லா அறைகளும் நல்ல வெளிச்சம் தரக்கூடிய வகையிலும், காற்றோட்டம் இருக்கும் வகையிலும் சன்னல்கள் பெரியதாக அமைக்கப்பட்டன.
இப்படியாக வீடு கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால் அம்மாவும் அப்பாவும் அடிக்கடி வீடு கட்டும் பணியாளர்கள் குறித்து தொடர்ந்து என்னிடம் குறை சொல்லி வந்தனர். கீழே நின்று கொண்டிருக்கும் போது வேண்டுமென்றே சிமெண்ட் கலவையை மேலே போடுவதாகவும், அடிக்கடி சொல்வதைக் கேட்பதில்லை என்றும் குறைப்பட்டனர். ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனினும் இது தொடர்ந்ததால் மிகவும் கவலைப்பட்டேன். சேகரனிடமும் இதைப்பற்றி சொன்னேன். 
கான்கிரீட் அமைக்க தேவையான மரப்பலகைகள் பொருத்துவதை "செண்ட்ரிங்" என்று அழைத்தார்கள். அதை அமைப்பதற்கு முத்தையாபுரம் தோப்பில் இருந்த ஒரு நபர் அமர்த்தப்பட்டார். அவர் சேகரனுக்கு கொஞ்சம் தூரத்து உறவு என்பதைப் போல அவர்களின் பேச்சு புலப்பட்டது.
மரப்பலகைகள் பொருத்த ஆரம்பித்த அந்த நபர் பாதி வேலைக்கு பின் வரவில்லை.. அவரை தேடிப்போகும் நேரம் எல்லாம் வீட்டிலும் இருப்பதில்லை. நிறைய குடிப்பவர் என்றும் அறிந்தேன். ஏற்கனவே ஒரு நபர் ஆரம்பித்த பணி என்பதால் பொதுவாக மற்றவர்கள் வந்து பணி செய்ய மாட்டார்கள் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. விடாமல் அவர் வீட்டுக்கு சென்று ஒரு வழியாக மரப்பலகைகள் அமைக்கும் பணியை அவர் முடித்தார்.
கான்கிரீட் அமைக்கும் முன்னரே எந்த எந்த இடங்களில் மின் விளக்குகள் வர வேண்டும், மின் விசிறிகள் வர வேண்டும் என்பதை எல்லாம் திட்டமிட்டு அதற்கு தேவையான பிளாஸ்டிக் குழாய்கள் தகுந்த முறையில் பொருத்தப்பட்டன. கூடவே தொலைபேசி கம்பி வருவதற்கான குழாயும், மாடியில் இருந்து ஆண்டனாவிலிருந்து தொலைக்காட்சிக்கு வரும் கம்பி வருவதற்கான குழாயும் தனித்தனியே சுவற்றிலும், கான்கிரீட் உள்ளேயும் அமைக்கப்பட்டன. இதே போல் சமைலறை, குளியலறை, கழிவறை ஆகியவற்றிற்கு செல்ல வேண்டிய தண்ணீர்குழாய்களும் அமைக்கப்பட்டன.
கான்கிரீட் தளம் அமைக்கும் போது உடனிருந்து பார்வையிட்டேன். கற்களினிடையில் கொஞ்சம் செங்கல் துண்டுகள், குப்பைகள் தென்பட்டன. அதையெல்லாம் அகற்றும் படி சொன்னேன். அங்கு பணி செய்தவர்கள் பேருக்கு அப்படி செய்வது போல பாவனை மட்டுமே செய்தனர். பின்பு நானே அதையெல்லாம் அகற்ற ஆரம்பித்தேன். அதன்பின்னர் அவர்களும் கொஞ்சம் ஒத்துழைத்தனர்.
கான்கிரீட் பணி நடக்கும் தினம் எத்தனை பேர் வேலை செய்தாலும் அனைவருக்கும் திருப்தியாக உணவும் நாம் வழங்க வேண்டுமாம். உணவகத்தில் சொல்லி தேவையானவற்றை தருவித்தோம். கான்கிரீட் பணி முடிந்த பின்னர் தன் மேல் சிறியதாக "பாத்தி" கட்டி தண்ணீர் தேங்குவதற்கான ( க்யூரிங் )ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 
தினமும் காலையும் மாலையும் கான்க்ரீட்டுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. அப்போது பெய்த சிறு மழையும் நன்றாக உதவியது. வீட்டில் பதிக்க மொஸைக் கற்கள் தூத்துக்குடியில் வாங்கினோம். வீட்டின் பூச்சு ஓரளவுக்கு சொர சொரப்பாக இருந்தால் வர்ணம் பூச்சு நன்றாக இருக்கும் என்று கூறி அவ்விதமே செய்தார்.
வீட்டிற்கான கதவை ( மரத்துகள்கள் நன்றாக அழுத்தப்பட்டு புது முறையில் தயாரிக்கப்படும் கதவுகள் - மிகவும் உறுதியானவை ) இராஜபாளையத்தில் வாங்கலாம் என்று நான் ஆலோசனை சொன்னேன். ஆனால் அவர் அவரிடம் இருக்கும் தச்சரே அவ்விதமான கதவை நன்றாக செய்வார் என்று கூறினார். அவர் கூறியதை நான் முழுவதும் நம்பினேன்.
ஆனால் கதவு தயாரிக்கப்படும் இடத்தில் ஒரு நாள் சென்று பார்த்தேன். சட்டங்களில் பெவிக்காலை தடவி, நடுவில் மரத்துகள்களை கொட்டினர். மரத்துகள்கள் அழுத்தப்படவோ வேதிப்போருட்களால் கெட்டிப்படுத்தப்படவோ இல்லை. சட்டங்களின் மேல் பிளைவுட் அறையப்பட்டு கதவு தயாரிக்கப்பட்டது. சேகரனிடம் சொன்ன போது இவ்விதம் செய்யப்படும் கதவுகள் நன்றாக இருக்கும் என்று சொன்னார். எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது - திருப்தியும் இல்லை. வீட்டின் ஜன்னல்களில் கண்ணாடி மட்டுமே பதிக்கப்பட்டதால் அதில் எந்தப்பிரச்சினையும் வரவில்லை.
வீட்டில் மொஸைக் கற்கள் பதிக்கப்பட்டன. சுத்தப்படுத்த எளிதாக இருக்கும் வகையில் சமையல் மற்றும் கழிவறைகளில் மொஸைக் போன்றே ஒரு கலவை சுவர்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டது.
வீட்டை சுற்றி சுற்றுப்புற சுவரும் கட்டப்பட்டது. வீட்டின் உட்சுவர்களில் பூச்சு வேலை ஆரம்பிக்கப்பட்டது. வீட்டின் பணிகள் முடிவடையப்போகும் தருணத்தில் வேலைகளில் கொஞ்சம் சுணக்கம் தெரிந்தது. வேலைக்கு வரும் ஆட்கள் வெகுவாக குறைந்தனர். வீட்டின் பணிகள் முடிவடைவது தேவையில்லாமல் தள்ளிப்போடப்படுவது போல எனக்கு தோன்றியது.
வீட்டின் முன்புறம் பெரிய அளவில் அலங்கார வேலைகளும் நடந்தன. வீட்டை பார்வையிடுபவர்கள் வீட்டின் முகப்புத்தோற்றத்தைக் கண்டு வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர். அந்த இடத்தில் கட்டப்பட்ட வீடுகளிலேயே மிகவும் உயரமான வீடாக அது திகழ்ந்தது.
மொட்டை மாடியில் மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டி கட்டப்பட்டது. அதில் சில நாட்கள் நீரை நிரப்பி சோதித்தோம். சில தினங்களில் ஒரு இடத்தில் தண்ணீர் கசிவது கண்டுபிடிக்கப்பட்டது. ( இங்குமா...? ) கசிவைத்தடுப்பதாக சொல்லி மேற்கொண்டு கூடுதல் கான்கிரீட் தொட்டியில் போட ஏற்பாடு செய்தார் சேகரன். மீண்டும் சோதனை.. ஆனால் கசிவு நின்ற பாடில்லை. உட்புற சுவர்களை கொத்தி, மீண்டும் நன்றாக பூசி மறுபடியும் நீர் ஊற்றி சோதனை... அப்படியும் பலனில்லை. கசிவு பெரிய அளவில் இல்லையென்றாலும் தொட்டியைப்பார்த்தாலே நீர் கசிவு இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு அது இருந்தது.
நல்ல தண்ணீர் வருவதை சேமிக்க தரைமட்டத்திலேயே ஒரு பெரிய தொட்டியும் கட்டப்பட்டது. மோட்டாரும், தொட்டிகளுக்கு செல்வதற்கான குழாய்களும் நிறுவப்பட்டன.
மின்வேலைகள் முடிவடையும் தருவாயில் தமிழக மின் வாரியத்தில் இருந்து வீட்டிற்கான மின்னிணைப்பு பெறப்பட்டது.
புதுமனையில் பால் காய்ச்சுவதற்கான நாள் குறிப்பதற்காக சேகரனிடம் வேலை முடிய எத்தனை நாட்கள் ஆகும் என்று கேட்டேன். அவர் சொன்ன தேதிக்கு பின்னர் ஒரு நாளில் பால் காய்ச்சலாம் என்று திட்டமிட்டுக் கொண்டோம். 
உட்புறச்சுவர்களில் 'டிஸ்டம்பர்' வர்ணம் தீட்டுவது, மரச்சட்டங்களுக்கு வர்ணம் தீட்டுவது போன்ற வேலைகள் ஆரம்பிக்கப் பட்டன. ஹாலுக்கு வான நீலமும், படுக்கையறைகளுக்கு ஒருவித வெளிர்பச்சை நிறமும், சமையலறைக்கு சந்தன வர்ணமும் தீட்டப்பட்டது. மேற்கூரைகளுக்கு வழக்கம் போல வெள்ளை நிறம் மட்டுமே. கதவுகளுக்கும் சன்னல்களுக்கும் 'லில்லி ஒயிட்' எனப்படும் வெள்ளை நிறம் பூசப்பட்டது.
வீட்டில் மொஸைக் தரை இரண்டு முறை பாலீஷ் போடப்பட்டது. வீடு பால் காய்ச்சியபின் மூன்றாவது முறை பாலீஷ் போடலாம் என்று சொன்னார்கள்.
வீட்டினுள் இருக்கும் மாடிப் படுக்கையறைக்கு செல்ல கைப்பிடி சுவருக்கு பதிலாக, அலுமினியத்தால் ஆன கைப்பிடிகள் வைப்பதாக திட்டம் இருந்தது. அதற்கான வேலையை செய்ய வெளியிலிருந்து ஆட்களைத் தருவித்திருந்தார். எவ்வளவு நேரம் ஆனாலும் சரி... அன்றைக்குள்ளாக வேலையை முடிக்கும்படி அவர்கள் பணிக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்கள் பணி செய்யும் போது ஏற்கனவே பாலீஷ் போடப்பட்ட மொஸைக் தரையில் வைத்து சுத்தியால் கைப்பிடியை அடித்து தயார் செய்வதாகவும், வெளியில் வைத்து வேலை செய்யும் படி சொன்ன போது கேட்கவே இல்லை என்றும், சற்று மரியாதைக்குறைவாக பேசுவதாகவும் அம்மா குறைப்பட்டார்கள்.
எனக்கு ஏற்கனவே வேலை இடத்தில் இருந்த பிரச்சினை.. மன அழுத்தம்.. இருந்தாலும் அம்மா சொன்னதைக் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தேன். ஆனால் அம்மா விடவில்லை.. கண்டிப்பாக நான் அவர்களை ஒரு வார்த்தையாவது கேட்டாக வேண்டும் என்று அடம் பிடித்தார்.
எனக்கு எரிச்சலும் கோபமும் தாளவில்லை. நேரே பணி செய்து கொண்டிருப்பவர்களிடம் சென்றேன். அமைதியாக பேச ஆரம்பித்தாலும் எனக்கிருந்த மன அழுத்தமும் கோபமும் விரைவிலேயே வெளிப்பட்டது. வேலை செய்வதில் பிரச்சினை இருந்தாலோ, வீட்டு உரிமையாளர்கள் சொல்வதை கேட்க மறுத்து மரியாதைக்குறைவாக நடந்தாலோ வீட்டில் வேலை பார்க்கத் தேவையில்லை என்றும் அவர்களுக்கு அது கடினமாக இருந்தால் சென்று விடுமாறும் கடிந்து பேசினேன். நான் பேசியதைப் பார்த்து அம்மாவும், பிரதீப்பும் எதுவும் பேசவில்லை.
அன்று இரவு எனக்கு உறக்கம் வரவில்லை. மனம் மிகவும் சங்கடப்பட்டது. அவ்விதம் நான் என்றுமே பேசியதில்லை. ஏன் அப்படி பேசினோம் என்று நினைத்து மிகவும் வருந்தினேன். இரவு சுமார் பனிரெண்டு மணியளவில் அந்த பணியாளர்கள் வீட்டுக்கு வந்தனர். கைப்பிடி வேலை முடிவடைந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்த நான் மனப்பூர்வமாக நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்து, மனதில் எதையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். அதன் பின்னரே கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அடுத்த தினம் காலையில் சேகரனை சந்தித்து நடந்த விபரங்களை முழுமையாக எடுத்துரைத்தேன். அவரும் அதை கேட்டு விட்டு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று சொன்னார்.
புதிய மோட்டார் பொருத்தப்பட்ட இடத்தில் சிமெண்ட் பூச்சு எதுவும் செய்யப்படவில்லை. அம்மாவிற்கு எப்போதும் ஏதாவது வேலைகள் செய்து கொண்டே இருக்க வேண்டும். அவர் என்ன செய்தார் என்றால் அவ்விதம் சிமெண்ட் பூசப்படாத இடத்தில் அவராகவே சிமெண்ட் கலவையால் நன்றாக பூசி விட்டார். நான் கூட அவரிடம் செய்ய வேண்டாம் என்று கூறினேன்.. ஆனால் அவர் கேட்கவில்லை. செய்து முடித்தார். வீடு பால் காய்ச்சும் நாள் நெருங்கியதால் நானும் பொருட்படுத்தவில்லை.
இந்தச்சூழலில் சில அரைகுறைப்பணிகள் முடிக்கப்படாமல் இருந்தன. பால் காய்ச்சிய பின்னர் எஞ்சிய பணிகளை முடிக்கலாம் என்றும் அப்போதுதான் நல்லது என்றும் சொன்னார்கள். ஆனாலும் பால் காய்ச்சும் தேதிக்கு முன்னதாக அவர் முடித்து விடுவதாக சொன்ன வேலைகளை சேகரன் முடிக்கவில்லை. நான் எவ்வளவோ வலியுறுத்தியும் எந்த பலனுமில்லை. பால் காய்ச்சும் தினம் நெருங்கிக்கொண்டிருந்தது. என்னுடைய பொறுமையை அளவுக்கு அதிகமாக அவர் சோதித்தார். சில தினங்களாக வீட்டு வேலைகள் அப்படியே கிடந்தன. பணி செய்யவோ நிலைமையை விளக்கவோ யாரும் வரவேய் ல்லை. 
அப்படி இருக்கும் சமயத்தில் ஒரு நாள் பொழுது சாயும் நேரம் அவருடைய வீட்டுக்கு சென்றேன். குடிசையாக இருந்த அவரது வீடு அப்போது கான்கிரீட் கட்டிடமாக மாறிக்கொண்டிருந்தது. அவருடன் பணி செய்யும் தொழிலாளர்கள் அனைவரும் அங்கே இருந்தனர். நான் வீட்டு வேலை முடிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொன்னேன். அவர் அதில் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. பார்ப்போம்.. பார்ப்போம்... என்றே பதிலளித்துக்கொண்டிருந்தார். மீண்டும் ஒரு முறை எனது மன அழுத்தம் வெளிப்பட்டது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் மிகவும் கோபத்துடன் தெளிவாக, உரத்த குரலில் என்ன செய்ய வேண்டும் என்பதை கட்டளை போல பிறப்பித்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினேன். அங்கிருந்த அனைவரும் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அதன் காரணமாகவோ என்னவோ அடுத்த தினத்தில் இருந்து வீட்டு வேலைக்கு ஆட்கள் வந்து பணி செய்தனர். ஆனால் ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது நன்றாக தெரிந்தது. பால் காய்ச்சும் விழாவிற்கு சேகரனையும் அவருடன் பணி புரிந்த அனைவரையும் நேரில் சென்று அழைத்தேன்.
ஆடம்பரமாக பால் காய்ச்சுவதை கொண்டாட எனக்கு விருப்பமில்லை. அக்காக்கள் குடும்பத்தினருக்கும், மிகச்சில நண்பர்களுக்கும் மட்டுமே சொல்லி பால் காய்ச்சும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தேன். பால் காய்ச்சும் தினத்தில் வீட்டில் பணியாற்றிய அனைவரையும் வரச்சொல்லி விருந்து வைத்தோம். சேகரன், தச்சர்,மேஸ்திரி ஆகியோருக்கு புத்தாடைகளும் வெகுமதிகளும் வழங்கினோம். ஒரு வழியாக பால்காய்ப்பு விழா முடிவடைந்தது.
இதன்பின்னர் அந்த வீட்டிற்கு குடி போவதற்கு முன்பாக மீதமிருந்த சில பணிகளை முடிக்கும் படி சேகரனிடம் கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் முடித்தபாடில்லை. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. வேலைக்கும் ஆட்கள் வரவில்லை. வீட்டைப்பார்த்துக் கொண்டிருந்த இளைஞரும் வேறு ஒரு வீடு கட்டும் இடத்திற்கு செல்வதாக கூறி சென்று விட்டார்.
பிரச்சினை என்ன என்பதை பேசுவதற்காக நானும் பிரதீப்பும் சந்தானம் அண்ணாச்சி வீட்டில் கூடினோம். செவ்வேளும் வந்தார். சேகரனும் வரவழைக்கப்பட்டார். நான் என்ன வேலைகள் மீதம் உள்ளன என்பதை விளக்கி சொன்னேன். தொடக்கத்தில் அமைதியாக இருந்தது போல காணப்பட்ட சேகரன் திடீரென்று, வீடு கட்டியதால் அவருக்கு மிகுந்த நஷ்டம் என்று கூறினார். அதற்கு காரணம் என்ன என்று கூறவில்லை. ஒப்பந்தத்தின் படி தரவேண்டிய பணம் முழுமையும் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்தது. பேசிக்கொண்டிருக்கும் போதே, அவர் வேலை பார்த்த வீட்டில் வேறு ஆட்களைக்கொண்டு எப்படி நான் வேலை செய்யலாம் என்று கேள்வி எழுப்பினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் புரிந்தது, அவர் மோட்டார் வைத்திருந்த இடம் பூசப்பட்டதைக் குறித்து சொல்கிறார் என்று. நான் அந்த வேலையை செய்தது என் அம்மாதான் என்று தெளிவாக எடுத்துக்கூறியும் அதை ஏற்க மறுத்தார். அதை என் அம்மாதான் செய்தார் என்பதை நிரூபிக்கிறேன் என்று சொல்லும் போது, அப்படி நிரூபிக்கவில்லை என்றால்...? என்று கிண்டலாக சேகரன் கேட்க... கோபம் என் கண்ணை மறைத்தது. உடனே சொன்னேன் கட்டிய அந்த வீடு முழுவதையும் தரைமட்டமாக்கி விடுவதாக. நிரூபித்தால் அவர் என்ன செய்வார் என்ற என் கேள்விக்கு அவர் நேரிடையாக பதில் அளிக்கவில்லை.
வேண்டுமென்றே பணம் கேட்பதற்காக சாக்குகளை சொல்லும் சேகரனைப்பற்றி அப்போதுதான் எனக்கு விளங்கியது. என்னைப்பற்றி நன்றாக தெரிந்த சந்தானம் அண்ணாச்சிக்கும் கோபம் வந்தது. பேச்சுக்கள் வெட்டியாக வளர்ந்து கொண்டே போனது. நான் குறுக்கிட்டு அநாவசியமாக எதுவும் பேசிப் பலனில்லை என்றும், ஒப்பந்தம் போடும் போது சந்தானம் அண்ணாச்சி சொன்னதை அப்படியே ஒப்புக்கொண்டேன் என்பதையும் நினைவூட்டினேன். அதே போல இப்போதும் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் கூறினால் போதும் என்று கூறினேன். அவர் சேகரன் மீது உள்ள குறைகளை கூற முற்பட்ட போது தடுத்து, எவ்வளவு பணம் தரவேண்டும் என்று மட்டும் கேட்டுச்சொல்லுங்கள் என்று கூறினேன். அதுவரை தந்திருந்தது போக கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபாய் வரை தர வேண்டும் என்று சொன்னார். ஒரு வார்த்தைக்கூட பதில் பேசாமல் கையில் கொண்டு போயிருந்த பணத்தை எண்ணிப்பார்த்தோம். பிரதீப்பிடம் இருந்த பணமும் சேர்ந்து அந்தத்தொகை இருந்தது. கையிலிருந்த அந்த பணம் முழுவதையும் அவரிடம் கொடுத்துவிட்டு, அவர் பணம் பெற்றுக்கொண்டதாக கடிதம் தருமாறு கேட்டேன். அவர் அதற்கு தர முடியாதென்று மறுத்தார். அப்போது இன்னும் அவரை நம்புவதாகவும், கடிதம் எதுவும் தரவேண்டாம் என்றும் சொன்னேன். அவர் என் முகத்தை பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டார்.
அதற்கு பின் தூத்துக்குடியில் இருந்து வீட்டுக்கு வருவதற்கான செலவிற்காக செவ்வேளிடமிருந்து ஐம்பது ரூபாய் கடன் வாங்கினேன். அரை மணி நேர பேருந்து பயணத்திற்கு பின் பிரதீப்பும் நானும் வீடு வந்து சேர்ந்தோம். வரும் வழியில் நானும் பிரதீப்பும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அன்றிரவு வீட்டில் மிகவும் நிம்மதியாக உறங்கினேன்.
பின்குறிப்பு:
1. முழுமையான தொகுப்பாக தரவேண்டும் என்று எண்ணினாலும், தேவையின்றி கதை வளர்க்கப்படும் என்கிற தோற்றம் வரும் என்பதால் இப்போதைக்கு வீட்டை நிறைவு செய்கிறேன்.
2. 'வீட்டைக்கட்டிப்பார்' என்னும் அந்த மொழியில் இருந்த உண்மையை உணர வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. 'போதுமடா சாமி' என்கிற நிலைதான் எல்லோருக்கும் ஒரு நிலையில் வருமோ என்று தோன்றுகிறது.
3. மேல்நிலைத் தண்ணீர் தொட்டி கசிவை நிறுத்த பலமுயற்சிகள் செய்தும் பலனில்லை. கடைசியில் சிண்டெக்ஸ் தொட்டி வாங்கி நிறுவினேன்..!
4. மிகவும் நேசித்த அந்த வீட்டை ஆறு வருடங்களுக்கு முன்பாக நாகர்கோவிலை சேர்ந்த ஒருவருக்கு விற்றுவிட்டேன்..



வெள்ளி, 19 ஜூலை, 2019


கம்பள மணமாலை …


Karthic KVT:
கம்பள மணமாங்கல்யம் ....

கம்பள மணமாலை …


இந்து- ராஜகம்பள தொட்டியநாயக்கர் இனச்சொந்தங்கள் அனைவருக்கும் ஓர் மகிழ்வான செய்தியை இம்மாலை பொழுதில் வழங்குவதை எண்ணி சிந்தை மகிழ்கின்றேன்
ஆரம்பம் முதலே நம் அறக்கட்டளை மற்றும் இதர நம் சமுதாய உறவுகளால் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட
கம்பளத்து மணமாலை இனையதளம்
நமது கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் சார்பாக இனிதே துவக்கி ஒருவருடம் நிறைவுபெற்றது ..தம் பொன்னான சேவையை
நிறைவே வழங்கவுள்ளது ..
ஆகவே நம் இரத்த சொந்தங்கள் அனைவரும்
இனிதே தங்கள் வரன் தொடர்பான தகவல்களை பகிர்ந்து தங்களுக்கு பொருத்தமான இனையை தேர்ந்தெடுத்து
இல்லறம் சிறந்து நல்லறம் பெருக்கி
இனமான சொந்தங்களுடன் இனிதே வாழ வாழ்த்தும்
இன்றோடு ஒரு வருடம் ஆகின்றது ...17 திருமணங்கள் பெற்றோர் ஆசிர்வாதத்துடன் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது  ...இரண்டாம் ஆண்டு இனிதாக ஆரம்பமாகியுள்ளது ...
தொடரும் நம்ம வீட்டு கம்பள கல்யாணம் ..தொடரும் பந்தம் ...கம்பள மணமாங்கல்யம் ..

கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் 
உடுமலைப்பேட்டை 

கார்த்திக் SR -6383246466
பொன் தமிழ் -9750268151
சிவக்குமார் -9944066681

திங்கள், 15 ஜூலை, 2019

கற்றலின் நினைவுகள்! -கச்சேரி வீதி பள்ளி (உடுமலைப்பேட்டை )

இப்போது நினைத்தாலும் மனதுக்குள் புன்னகைக்க வைக்கும் நினைவு இது. வாசிக்கும் உங்களையும் சிரிக்க வைக்கும்.
என் பள்ளிக் காலத்தில் இப்போது போல் 3வயதில் நோட் புக்கில எழுத முடியாது. ஒண்ணாம் வகுப்பில ஒன்லி சிலேட்தான்.. இரண்டாம் வகுப்பு போனதும்தான் நோட்டில் எழுதமுடியும். அதுவும் 40 பக்க நோட்தான். நான் 2-ம் வகுப்பு சேர்ந்து நாட்கள் ஓடின.. எப்போதடா புது நோட்டில் எழுதச் சொல்வார்கள் எனக் காத்துக் கிடந்தேன்.. புது நோட்டின் வாசம்,, பென்சிலின் கூர்மை,,அழிரப்பரின் வெண்மை அத்தனையையும் தினமும் எடுத்துப்பார்த்து ஏங்கிக்கொண்டிருந்தேன்.
இரண்டு வாரங்களுக்குப் பின் முதன் முறையாக சரஸ்வதி டீச்சர் .. தமிழ் நோட்டை எடுக்கச் சொன்னார். ”எல்லோரும் நோட் எடுத்துக்கோ,,
சரஸ்வதி டீச்சர் . போர்டில் எழுதிப்போடுவதை தப்பு இல்லாமல், அழகா எழுதணும். எழுத்து ஒழுங்கா மணிமணியா இல்லைன்னா மொழியைப்(புறங்கையின் எலும்புதான்) பேத்துருவேன்” என்ற பயமுறுத்தலுடன் கரும்பலகையில் எழுத ஆரம்பித்தார்.. வகுப்பில் முதல் பெஞ்சில உட்கார்ந்திருந்த நான் (என்னைப்போலவே 😜) குண்டு குண்டான அழகான கையெழுத்தில் எழுத ஆரம்பித்தேன். தமிழ்ப் பாடம். முதலில் ஒரு கேள்வி- பதில் கரும்பலகையில் எழுதி விட்டு சரஸ்வதி டீச்சர் . எங்கள் அத்தனை பேரின் நோட்டையும் பார்வையிட்டார். திருப்தியோடு தொடர்ந்து எழுதிப்போட ஆரம்பித்தார். சின்ன கரும்பலகை.. 2 கேள்வி பதில் எழுதியதும் நிறைந்து விட்டது. அடுத்து மெதுவாக முதலில் எழுதியதை ஒவ்வொரு வரியாக அழித்து அழித்து மூன்றாவது கேள்வி பதிலை எழுத ஆரம்பித்தார்..மற்ற எல்லா பிள்ளைகளும் ஒழுங்கா எழுத நான் மட்டும்  சரஸ்வதி டீச்சர் .செய்ததைப் போலவே ஒவ்வொரு வரியாக அழித்து அழித்துப் புது கேள்வி பதிலை எழுதிக்கொண்டிருந்தேன்... மனதுக்குள்  சரஸ்வதி டீச்சர் .ஏன் இப்படி தப்பு தப்பா எழுதி அழிக்கிறாங்க என்ற குழப்பத்துடன்.🤔🤔(ஈயடிச்சான் காப்பி கதையை நினைத்துக் கொள்ளவும்)..இரண்டாவது முறை கரும்பலகை எழுத்துக்களால் நிறைய, திரும்பவும் மேலிருந்து அழித்து எழுத ஆரம்பித்தார் சரஸ்வதி டீச்சர் ...எனக்கோ பயங்கர டென்ஷன்... நானும் திரும்ப முதலில் இருந்து அழிக்க ஆரம்பிக்க நோட்டெல்லாம் கரியாகி, கொஞ்சம் கிழிய ஆரம்பித்து விட்டது..பயத்துடன் பக்கத்தில் சுப்புலெட்சுமியை எட்டிப் பார்த்தேன்.அவள் நாலாவது பக்கம் எழுதிக்கொண்டிருந்தாள்.நானோ முதல் பக்கத்தையே எழுதி,அழித்து, எழுதி அழித்து,அழித்துக் கொண்டிருந்தேன்.. அவ்வளவுதான் பயந்து ஓவென அழுது...ஐயோ,ஐயோ...ஒரே களேபரம்தான்.சரஸ்வதி டீச்சர் . , ”என்ன செய்ஞ்சுகிட்டு இருக்கிறே...” எனக் கேட்க நான் சரஸ்வதி டீச்சர் . நீங்கதானே அழிச்சு அழிச்சு எழுதுறீங்க அதான் நானும் அப்படியே செய்தேன் எனக் கையை பின்னால் மறைத்து கொண்டே (அடிக்கு பயந்து) அழுகை பாதியும் சொற்கள் பாதியுமாக உளறினேன்.😫😫.. ஆனால் ஏனென்றே தெரியவில்லை சரஸ்வதி டீச்சர் . குலுங்கக் குலுங்க சிரித்துக்கொண்டே இருந்தார்...இந்த கற்றலின் நினைவுகள் தான் ..இப்பொழுதும் உங்களிடம் வாட்சப்பிலும் ,முகநூலிலும் உங்களிடம் அழித்து,அழித்து  எழுதிக்கொண்டுஇருக்கிறேன் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681 😄😃😃

வெள்ளி, 12 ஜூலை, 2019

அப்படி இல்ல தம்பி ...இப்பொழுது எல்லாம் பல நம் சமுதாய பணிகளை ...வெளிக்காட்டாமல் ...நக்கல் ..நயாண்டி ..என்று பதிவுகள் இட்டுக்கொண்டிருக்கிறேன் ...அறக்கட்டளை பணிகளும் (வேலைவாய்ப்பு ,கோவில் வரலாறு ,கல்வி ,..வரலாற்று பணிகளும் ..ஆர்வம் இருக்கும் தம்பிகள் ,மாப்பிள்ளைகளை  ..கொண்டு கடந்த 7 மாதங்களாக செவ்வனே செய்துகொண்டுள்ளோம் ..நீங்களே கவனித்து இருப்பீர்கள் ...புது சொந்தங்களை அறிமுகம் செய்வது ..புதிய தொழில்முனைவோர்களை அறிமுகம் செய்வது ..யாரையும் இப்பொழுது நம் சமுதாய குழுக்களில் பதிவிடுவதில்லை ....ஏன் என்றால் ...நான் கற்றுகொண்டபாடங்களில் அதிகம் ..வெளுத்தது எல்லாம் பால் என்று நினைத்ததால் ...வரும் மாதங்களில் நிகழ்வுகள் நடந்து முடிந்தவுடன் ..அதுபற்றி செய்திகளை நீங்களே தெரிந்துகொள்வீர்கள் ..நன்றி ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ..9944066681..

சனி, 6 ஜூலை, 2019

மரியாதை நிமித்தமான சந்திப்பு ...

கடந்த வாரம் ..நானும் செந்தில் ராம் மாப்பிள்ளையும் ..நமது மெட்ராத்தி  அரண்மனையார் விஜயகுமார் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ..மாதம் ,வாரம் ஒருமுறை ..பெரியவர்களை சந்தித்து நமது சமுதாய மக்களின் வளர்ச்சி ,இன்றய அரசியல் ,ஆன்மிகம் ,பண்பாடு ,கல்வி ,வேலைவாய்ப்பு கலந்துரையாடுவது வழக்கம் ...வரும் காலங்களில் நமது தெலுங்கு மொழியை கற்கும் ஆர்வம் குறைந்து வருவது குறித்த கவலை பற்றி பேசினோம் ..அதற்கு தீர்வு ..தெலுங்கு மொழி சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களை வைத்து ..நமது கம்பள கிராமங்களில் ஆர்வம் இருக்கும் குழந்தை செல்வங்களுக்கு கற்று தருவதற்கான ஏற்பாடுகள் குறித்து பேசியது மிக்க மகிழ்ச்சி ..கோட்டமங்கலம் வல்லகொண்டம்மன் கோவில் மற்றும் நடுகல் ஆக்கிரமிப்புகள் குறித்து பேசியது மிக்க மகிழ்ச்சி ..அதற்கான தீர்வுகள் குறித்து மெட்ராத்தி  அரண்மனையார் நல்ல ஆலோசானைகள் வழங்கினார் ..
இரண்டுமணிநேரம் கலந்துரையாடல் மிக அருமையாக இருந்தது ..வரும் நாட்களில் பதிவிடுகிறேன் ..நன்றி

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681


வெள்ளி, 5 ஜூலை, 2019

அமெச்சூர்  ரேடியோயோவின் பயன்கள் ...


அமெச்சூர் வானொலி (amateur radio, அல்லது ham radio) எனப்படுவது வணிக நோக்கமின்றி தனி நபர்களின் சொந்த முயற்சியால் ஒலிபரப்பப்படும் இரு வழித் தொடர்பாடல்வானொலியாகும். ஏனைய வானொலிகளைப் போல் இலாப நோக்கமல்லாது சமூக நோக்கத்திற்காக அல்லது பொழுது போக்கிற்காக நடத்தப்படுகின்ற வானொலியாகும்.
சமூக நோக்கத்திற்காக
குறிப்பாக இயற்கை அனர்த்தங்களான கடற்கோள், புவியதிர்ச்சி, மழை, வெள்ளம் போன்றன ஏற்பட்டு தொலைபேசி, கைத்தொலைபேசி, இணையம் போன்றவை இயங்காத நிலையில் கூட அமெச்சூர் வானொலி இயங்கக் கூடியது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள இவை உதவுகின்றன.
ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் பின்னால் ஒரு பெரிய வரலாறு புதைந்து இருக்கிறது. நம்மில் பலரும் வானொலியைக் கண்டுபிடித்தது மார்க்கோனி என்றுதான் கூறுவோம். ஆனால், அது தவறு.
 வானொலியானது ஒருவரால் மட்டுமே கண்டுபிடிக்கப்படவில்லை. இது பலரின் கூட்டு முயற்சி. அந்தக் கண்டுபிடிப்புக்குப் பிதாமகனாக இருந்தவர் ஒரு இந்தியர் என்றால் அது நமக்கு எல்லாம் பெருமையே. மேற்கு வங்காளத்தில் பிறந்த ஜெகதீஸ் சந்திரபோஸ்தான் அந்தப் பெருமைக்குரியவர்.
அவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய அமெச்சூர் வானொலி தினமாக நவம்பர் 30-ஐ நாம் கொண்டாடுகிறோம். ஜெகதீஸ் சந்திரபோஸ் 1858 நவம்பர் 30-இல் பிறந்தார். அவர் ஆற்றிய சாதனைகள் பல.
கிரஸ்கோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இவர், இந்தியத் துணைக்கண்டத்திலேயே முதன் முறையாக 1904-ஆம் ஆண்டு தனது புதிய கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவிடமிருந்து காப்புரிமை பெற்றார்.
சுதந்திரத்துக்கு முன் பரந்து விரிந்த வங்காளத்தில், இன்றைய வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவிற்கு அருகில் உள்ள பிக்ராம்பூரில் பிறந்தாலும், அவர் கல்வி பயின்றது,பணியாற்றியது எல்லாமே கொல்கத்தாவில்தான்.
 மேற்படிப்புக்காக லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கச் சென்றார். ஆனால் அவரது உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. எனவே மருத்துவப் படிப்பினை இடையிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். ஆனாலும் மனம் தளராமல், நோபல் பரிசு பெற்ற லார்ட் ரேலிக் அவர்களோடு இணைந்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றார்.
ரிமோட் வயர்லெஸ் சிக்னல் ஆய்வில் வெற்றிகண்ட போஸ், முதன்முதலாக செமிகண்டக்டரைக் கொண்டு வானொலி அலைகளை ஒலிபரப்ப முடியும் என நிரூபித்தார். இந்த ஆய்வின் முடிவுகளைச் சுயநலத்தோடு வியாபாரம் ஆக்காமல் அனைவரும் இதில் மேற்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவருக்கும் கிடைக்கச் செய்தார்.
 செடி, கொடிகளின் மீது இவரின் கவனம் திரும்பியதன் பயனாக உருவானதே கிரஸ்கோகிராப். இது செடிகளின் தொடர்பியலையும், அது எப்படி பாதிக்கப்படும்போது வலிகளை வெளிப்படுத்துகிறது போன்ற அதிசயத் தகவல்களையும் ஆய்வின் மூலம் நிரூபித்தார்.
 வானொலித் துறையில் ஜெகதீஸ் சந்திரபோஸ் பல முன் முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக அவரின் கண்டுபிடிப்பான கிரிஸ்டல் ரேடியோ டிடக்டர், வேவ்கைடு, ஹார்ன் ஆண்டனா போன்றவற்றை தனது மைக்ரோவேவ் டிடக்டரில் முதன்முறையாகப் பயன்படுத்தி சாதனை படைத்தார்.
 1893-இல் நிக்கோலஸ் டெஸ்லா வெளிநாட்டில் ஒரு பொது இடத்தில் வைத்து முதல்முறையாக வானொலி ஒலிபரப்பினை சோதனை முறையில் செய்து காட்டினார். அதற்கு அடுத்த ஆண்டே இந்தியாவில் ஜெகதீஸ் சந்திரபோஸ் கொல்கத்தாவில் உள்ள டவுன் ஹாலில் வைத்து ஒரு சோதனையை மக்கள் மத்தியில் செய்து காட்டினார்.
 போஸ் சர்வதேச ஆய்விதழ்களில் தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி எழுதினார். இது சர்வதேச அளவில் இவருக்குப் பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தது.
 இவ்வாறு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அறிவியல் ஆய்வாளர்கள் வழங்கிய அரிய தகவல்களைக் கொண்டுதான் மார்க்கோனி, வானொலி ஒலி அலைகளை சாலிஸ்பெரி சதுப்பு நிலத்தில் இருந்து தொலைதூரத்துக்கு அனுப்பினார்.
மே 1897-இல் ஜெகதீஸ் சந்திரபோஸ் அதே போன்றதொரு சோதனையை மீண்டும் கொல்கத்தாவில் செய்து, வெற்றியும் கண்டார்.
 அதன் அடிப்படையில் அவர் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியில் தனது ஆய்வுக்கட்டுரையைப் படித்தார். அது அங்கு கூடிய விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்பின் அவர் மார்க்கோனியைச் சந்தித்து தனது ஆய்வின் முடிவுகளை விவாதித்தார். ஆனால் போஸ் தனது முடிவுகளைக் காப்புரிமை செய்ய விரும்பவில்லை. மார்க்கோனி முந்திக்கொன்டார். விளைவு, இன்று வானொலியைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவராக மார்க்கோனி திகழ்கிறார்.
 இதன் மூலம் வானொலி கண்டுபிடிப்பில் போஸின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறியலாம். அதனாலேயே இவரின் நினைவாக தேசிய அமெச்சூர் வானொலி நாள், இவரது பிறந்தநாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
 அமெச்சூர் வானொலி உரிமத்தினை இந்தியக் குடிமகன் யாரும் வாங்கலாம். அதற்கு அடிப்படைக் கல்வித்தகுதி இருந்தால் போதுமானது. மற்றும் 12 வயது பூர்த்தியான அனைவரும் தேர்வினை எழுதலாம். இதற்கான பிரத்யேகத் தேர்வினை எழுதித் தகுதி பெற்ற பின் உரிமம் வழங்கப்படும்.
அதன் பின் அதற்குத் தேவையான வானொலிப் பெட்டிகளை வாங்கி அனைவரும் அமெச்சூர் வானொலி உபயோகிப்பாளர்களாக ஆகலாம்.

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

வியாழன், 4 ஜூலை, 2019

படித்ததில் பிடித்தது .......
உன் மறு ஜென்மத்திற்காக காத்திருக்கிறேன்............

யாரும் இல்லாத என் இராத்திரிகள்
மறு நிமிடம் களைந்து போகும் என் கனவுகளில்
உன்னுடன் நான்.
உனக்காக காத்திருப்பதை விட என்
மரணத்திக்காக காத்திருக்கலாம்
என் மரணம் எனக்கு சுமையானதல்ல
நீ இல்லாத போது.
உனது பரிசம், காதல், முத்தம், அரவணைப்பு
அனைத்திற்காகவும் ஏங்கும் அனாதை குழந்தை தான் என் உள்ளம்.
என் இதயம் மட்டும் தினம் தினம் இரத்தக் கண்ணீர்
சிந்துகிறது... "நீ இல்லை"
கண் இமைக்கும் அந்த வினாடிகளில் மட்டும் உன் பிம்பம்
அதுவும் நிரந்தரம் இல்லை.
நான் உன்னை பிரியவில்லை
நீ என் அருகும் இல்லை. - ஆனால்
உன்னை யாசிக்கிறேன் - அதை விட
உன்னை நேசிக்கிறேன் - ஆனால்
என் முச்சு காத்தோடு மட்டும் தான் உன் உரசல்கள்..
நீ காத்தோடு தானே கலந்து விட்டாய்
என் உயிரில் கலந்தது போல...
என் உயிர் நீ இல்லை,
அர்த்தம் இல்லாதது தான் என் பயணம்
ஆனாலும் தொடர்கிறேன் உனக்காக,
உன் மறு ஜென்மத்துக்காக...
நம் குழந்தையாகவாவது நீ பிறப்பாய்
என்ற நம்பிக்கையில் உன்னை சுமக்கிறேன்
இனி உனக்கு மரணமே இல்லாத என் கருவறையில்.......
இனி வாழ்க்கையில் மறுபடியும் திரும்ப வரப்போவதில்லை ..ஜூலை ..5..2004............

புதன், 3 ஜூலை, 2019


கல்லூரியில் தொடக்க நிகழ்ச்சி ஒன்றுக்காக அழைத்தார்கள். ‘மோடிவேஷன் ஸ்பீச் கொடுக்க முடியுமா?’ என்று கேட்டார்கள். என்ன மாதிரியான பேச்சை எதிர்பார்க்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள ‘யார் மாதிரிங்க?’ என்று கேட்டதற்குச் சில பெயர்களையும் சொன்னார்கள். ‘அய்யோ...மன்னிச்சுக்குங்க..அவங்களை மாதிரி பேச முடியாது’ என்று சொல்லிவிட்டேன். என்ன சிக்கல் என்றால் இப்பொழுதெல்லாம் அதீதமான பில்ட்-அப்புகளுக்குத்தான் மரியாதை அதிகம். அந்தக் கணத்தில் புல்லரிக்கச் செய்திட வேண்டும். பேச்சு என்றாலும் சரி; சலனப்படம் என்றாலும்; அச்சு வடிவில் வெளியாகும் கட்டுரை என்றாலும் சரி இதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எதிராளி உணர்ச்சி வசப்படும்படியான வகையிலேயே எல்லாமும் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறார்கள். 

Motivational என்பதற்கும் Practically Motivational என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. போலித்தனமான கதைகளைச் சொல்லி அன்றைய தினத்துக்கான பூஸ்ட்டைக் கொடுத்து கைதட்டல் வாங்கி கூட்டத்தை அனுப்பி வைத்துவிட்டு, ஏற்பாட்டாளர்களிடம் பேசிய தொகையை வாங்கி சட்டைப்பைக்குள் வைத்துக் கொள்கிற பேச்சாளர்களின் எண்ணிக்கைதான் தாறுமாறாக இருக்கிறது. யதார்த்தத்தைப் பேசி ‘இவ்வளவுதான் வாழ்க்கை’ என்று பேசினால் ‘என்னய்யா பேசறான் இவன்’ என்று சொல்லிவிடுவார்கள் என நினைக்கிறேன்.

ஒரு பேச்சாள நண்பர் அவர். பெயரைச் வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதில்லை. நிகழ்வொன்றில் எனக்கு முன்பாகப் பேசினார். சுமாரான எண்ணிக்கையில் பார்வையாளர்கள் இருந்தார்கள்.

மேட்டுப்பாளையத்தில், கோவை நெடுஞ்சாலையில் ஒரு சலூன் கடை வைத்திருக்கும் பையன் என்று ஆரம்பித்து ஒரு கதையைச் சொன்னார். மயிர்க்கால்கள் கூச்செறியும் கதை அது. பையனின் அப்பா முடி திருத்தும் தொழிலாளி. மகனை பொறியியல் படிக்க வைத்துவிட்டார். படிப்பை முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் கிடைத்த நல்ல வேலையை விட்டு சலூன் கடை ஆரம்பித்து பல சொத்துகளைச் சம்பாதித்துவிட்ட பையனின் கதை அது. உணர்வுப்பூர்வமாக பத்து நிமிடங்கள் சொல்லக் கூடிய ஒரு பேச்சாளரின் பேச்சில் கற்பனை செய்து பார்த்தால் புரியும். மொத்தப் பேச்சிலும் அதுதான் ஹைலைட்டாக மனதில் பதிந்திருந்தது. 

கூட்டத்தை நெக்குருகச் செய்துவிட்டு வந்து அருகில் அமர்ந்தவரிடம் ‘அந்தப் பையனைப் பார்க்கலாம்ன்னு இருக்கு’ என்ற போது சிரித்துவிட்டு ‘பையன் இருக்கான்...ஆனா பாதி நானாகச் சொன்ன கதை’ என்றார். மேடையில் அமர்ந்து கொண்டு அதற்கு மேல் பேச முடியவில்லை. நிகழ்ச்சி முடிந்து கீழே இறங்கிய பிறகு பொறுக்க முடியாமல் ‘அந்தப் பையன் கடைப் பேரைச் சொல்லுங்க’ என்று கேட்டதற்குத் தயங்கினார். விடாமல் கேட்டு வாங்கியும் கொண்டேன். ‘இவன் போய் பார்க்கவா போகிறான்?’ என்று அவர் நினைத்திருக்கக் கூடும். சரவணம்பட்டியிலிருந்து முப்பது கிலோமீட்டர்தான் மேட்டுப்பாளையம். 

ஒரு வார இறுதியில் சலூன் கடையைக் கண்டுபிடித்துவிட்டேன். அவர் சொன்னது போலவே பொறியியல் முடித்த பையன்தான். ஆனால் சொகுசான கடை இல்லை. வேலை கிடைக்காமல் அப்பாவின் கடையை இவன் பார்த்துக் கொள்கிறான். கடையைக் கொஞ்சம் அழகு படுத்தியிருக்கிறான். பெரிய வருமானமில்லை. குடும்பச் செலவுக்குச் சரியாக இருக்கிறது. இதுவே நல்ல கதைதான். ஆனால் இதை மட்டும் சொன்னால் என்ன சுவாரசியமிருக்கிறது? அதனால்தான் ஐடி வேலையை விட்டு வந்தான்; பல பேருக்கு வேலை தருகிறான்; கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துவிட்டான் என்று கதையை அளந்து கைதட்டு வாங்கிவிட்டார். அன்றைய தினப் பேச்சிலேயே ‘இந்தக் கதையை நான் முன்பு சொன்ன கூட்டங்களில் கேட்ட ஐடியில் வேலை செய்கிறவர்கள் பலரும் வேலையை விட்டு விவசாயம் பார்க்கவும், சொந்தத் தொழில் செய்யவும் வந்துவிட்டார்கள்’ என்றார். அதுதான் அதிர்ச்சியாகவும் இருந்தது.

இன்றைய காலகட்டத்தில் பலரும் வேலையை உதறுகிறார்கள். விவசாயம் செய்கிறார்கள்; பால் வியாபாரம் பார்க்கிறார்கள்- எதுவும் தவறில்லை. ஆனால் கள நிலவரம் தெரிந்து, இத்தொழிலில் இவ்வளவுதான் வருமானம் எனப் புரிந்து வேலைக்கு வந்தால் சந்தோஷம். மேடையிலும், கட்டுரைகளிலும் தாறுமாறாக உசுப்பேற்றுகிறவர்களை நம்பி வேலையை விட்டுவிடுகிறவர்களைப் பற்றிக் கேள்விப்படும் போது சற்று பதற்றமாக இருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் போலிக் கதைகளைச் சொல்லி நெகிழச் செய்கிறவர்களும், கதறச் செய்கிறவர்களும் பெருகிவிட்டார்கள். இதைத்தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. 

ஆயிரக்கணக்கான வாய்ப்புகள் இருக்கின்றனதான். எதற்காகவும் கவலைப்பட வேண்டியதில்லை. கலங்கவும் தேவையில்லை. ஆனால் நம் பேச்சைக் கேட்பவன், எழுத்தை வாசிப்பவன் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிடக் கூடாது என்ற எந்தக் கவலையும் சொறிந்துவிடுகிறவர்களில் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. எந்த ஒரு நேர்மையான வெற்றியும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. எல்லாவற்றிலும் சிரமம் இருக்கிறது. மனசாட்சிப்படி ஆயிரம் ரூபாயைச் சம்பாதிக்க வேண்டுமானாலும் அதற்கான உழைப்பும் வியர்வையும் அவசியம். படிப்படியாகத்தான் முன்னேற்றம் இருக்கும். ஒருவேளை சரிவுகளும் கூட இருக்கலாம். இதையெல்லாம் புரிய வைப்பதுதான் Practical Motivation. எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படிச் சமாளிக்கிறோம், தீர்வுகளை நோக்கி எப்படி நகர்கிறோம் என்று அடுத்த தலைமுறைக்கும் சக மனிதர்களுக்கும் உணர்வுப்பூர்வமாகப் புரிய வைப்பதுதான் உண்மையான தன்னம்பிக்கை. நம்மைச் சார்ந்தவர்கள் இப்படியொரு இடத்தில் இருப்பின் ‘எட்டிக் குதிடா’ என்று சொல்வோமா என்று நினைத்துப் பார்த்துப் பேசுகிறவர்களும் எழுதுகிறவர்களும் மிக அரிது.

இருக்கும் வேலையை விட்டுவிட்டு வந்துவிடு; சொர்க்கம் திறந்துவிடும் என்று நான்கு பேர் வரிசையாக ஒரு மனிதனைத் தாக்கினால் அவன் நம்பிவிட அத்தனை சாத்தியங்களும் உண்டு. உணர்ச்சிவசப்படுவதும், கொந்தளிப்பதும் நம் லெளகீக உலகத்துக்கு வெளியில் இன்பம் அளிக்கக் கூடிய வஸ்துகள். வாழ்கிற உலகம் என்று வந்துவிட்டால் பொங்கல்களை ஒதுக்கி வைத்துவிட்டு அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்லது கெட்டதுகளை எடை போட்டுப் பார்த்துவிட்டு முடிவுக்கு வருவதுதான் சரி. 

செவ்வாய், 2 ஜூலை, 2019

63,445 ரூபாய் சம்பளம் வாங்கும் ரவி அண்ணனுக்கே Loan கிடையாதா..? ஏன்..?
இந்தியாவில் அதிகம் வங்கிகளிடம் கடன் வாங்குபவர்கள் மாதச் சம்பளம் வாங்கும், சம்பள ஏழைகள் தான். பின்ன பணக்காரனா பேங்குக்கு வந்து, அப்ப ஆத்தாளுக்கு வைத்தியச் செலவு செய்ய, ஒண்ட ஒரு சின்ன வத்திப் பொட்டி வீடு வாங்க வாரக் கணக்கில் அலஞ்சி கடன் (Loan) கேப்பான்..? கடந்த 29 மார்ச் 2019 நிலவரப்படி இந்தியாவில் தனி நபர்கள் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ், வீடு, க்ரெடிட் கார்ட், வாகனம், கல்வி மற்றும் மருத்துவம் போன்ற தேவைகளுக்கு, வங்கிகளில் கடன் வாங்கி இருப்பதை இந்தியாவின் மத்திய ரிசர்வ் வங்கியே சொல்கிறது.
எவ்வளவு வாங்கி இருக்கிறார்கள் மார்ச் 2019 நிலவரப்படி, மொத்தமாக இந்தியாவில், வங்கிகள் கொடுத்திருக்கும் கடனின் அளவு 86.74 லட்ச கோடி ரூபாய் தான். அதில் 25.5 சதவிகிதம் இப்படி நம்மைப் போன்ற சம்பள ஏழைகளுக்குத் தான் கடன் கொடுத்திருக்கிறார்கள் என்பதை ஆர்பிஐ கட்டம் போட்டு, கலர் செய்துக் காட்டுகிறது. மேலே சொன்னது போல இந்தியாவில் வங்கிகள், தனி நபர் கடன்களின் கீழ் சுமார் 22.20 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள். அதில் சுமாராக 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடனாக மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.
பெரிய தொகை எப்போதுமே சம்பள ஏழைகளிடம் ஒரு பெரிய தொகை பணம் தயாராக இருப்பதில்லை. இந்த இடத்தில் பெரிய தொகை என்பது, சம்பள ஏழைகள் வாங்கும் சம்பளத்தைப் பொருத்து வெறும் 5,000 ரூபாய் முதல் தொடங்குகிறது. ஆனால் எப்படியும் ஒரு சம்பள ஏழையிடம் தன் ஒரு மாத சம்பளத்துக்கு ஒரு நெருக்கடி வந்துவிட்டால் நிச்சயம் அவர்களிடம் அவ்வளவு பெரிய தொகை இருக்காது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். இதற்கு நல்ல உதாரணம் நம் ரவி அண்ணன்.
ரவி அண்ணன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மாதம் 63,445 ரூபாய் சம்பளம். அப்பா ரவி அண்ணன் வீட்டில் தான் இருக்கிறார். அப்பா முன்னாள் அரசு ஊழியர் என்பதால் மாதம் 16,000 பென்ஷன் வந்துவிடும். ரவி அண்ணனுக்கு 2017-ல் முன் தான் திருமணம் ஆனது. மனைவி ராதாவும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார். மாதம் 16,000 ரூபாய் சம்பளம்.
கடன் (Loan)ரிஜெக்‌ஷன் கடந்த ஏப்ரல் 2019-ல் இவரின் அப்பாவுக்கு ஒரு சிறிய சாலை விபத்து. விபத்தில் இவர் அப்பாவின் காலில் ஒரு பெரிய காயம் ஏற்பட்டது. ரவி அண்ணனின் அப்பாவுக்கு சர்க்கரை நோய் இருந்ததால் காயம் இப்போது வரை ஆறவில்லை. இப்போது ஒரு சின்ன அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் 1,00,000 ரூபாய் தேவை. ரவி அண்ணனிடம் இல்லை. இதற்காக அரசு வங்கிகளிடம் தனி நபர்க் கடன் வாங்க விண்ணப்பித்திருக்கிறார். பல அரசு வங்கிகளும் தனி நபர்க் கடன்களைக் கொடுக்க முடியாது என விண்ணப்பத்தை விட்டெறிந்திருக்கிறார்கள். பல வங்கியில் நேரடியாக கடன் கேட்டு விண்ணப்பித்திருப்பதில் இருந்து பல காரணங்களைக் காட்டி ரவி அண்ணனின் கடன் விண்ணப்பத்தை குப்பைக்கு அனுப்பி இருக்கிறார்கள். வங்கி அதிகாரிகள், ரவி அண்ணனின் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க, என்னென்ன காரணங்கள் சொன்னார்கள்..?
மிச்சம் எவ்வளவு..? ஏற்கனவே நம் ரவி அண்ணனுக்கு வீட்டுக் கடன் இ எம் ஐ ஓடிக் கொண்டிருக்கிறது. ஆக மாத சம்பளம் 63,445 ரூபாயில் 26,000 ரூபாய் போய்விட்டால் மீதம் 37,445 ரூபாய் தான். ஆக இந்த 37,445 ரூபாய் ரவி அண்ணன் தன் அன்றாட குடும்ப செலவுகளை பார்த்துக் கொள்ளவே சரியாக இருக்கும். எப்போதுமே ஒரு மாத சம்பளத்தில் 40 - 50 சதவிகிதத்தை ஒரு மாத இ எம் ஐ யாக கணக்கிட்டு தான் வங்கிகள் கடன் கொடுக்கும். ஏற்கனவே ரவி அண்ணன் தன் ஒரு மாதச் சம்பளத்தில் 41%-த்தை வீட்டுக் கடனுக்கு இ எம் ஐ-யாக செலுத்திக் கொண்டிருக்கிறார். எனவே மேற் கொண்டு கடன் கொடுக்க முடியாது எனச் சொல்லி இருக்கிறார்கள், வங்கி அதிகாரிகள்.
ரவி கேள்வி சார் நீங்கள் சொல்வது சரி தான். ஒவ்வொரு வங்கியும் ஒருவர் வாங்கும் சம்பளத்தில் 50% வரை இ எம் ஐ கணக்கிட்டு கடன் கொடுப்பார்கள் எனச் சொல்கிறீர்கள் இல்லையா. ஆக எனக்கான இ எம் ஐ 26,000 ரூபாய் போக மீதமுள்ள 5,500 ரூபாயை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த 5,500 ரூபாயை நான் உங்களுக்கு இ எம் ஐ-ஆக ஒவ்வொரு மாதமும் கொடுக்கிறேன். எனக்கு ஒரு லட்சம் ரூபாயை கடனாக, என் அப்பாவுக்கு மருத்துவ செலவுகளை மேற்கொள்ள கொடுங்களேன்...! எனச் சொல்லி இருக்கிறார். சரியான கேள்வி தானே..? ஆனால் இதற்கும் மறுத்திருக்கிறார்கள் வங்கி அதிகாரிகள். ஏன்..?
க்ரெடிட் கார்ட் ரவி அண்ணன் நான்கு வருடமாக க்ரெடிட் கார்ட் பயன்படுத்தி இருக்கிறார். என்ன பிரச்னை என்றால் க்ரெடிட் கார்டில் கொடுத்திருக்கும் 45,000 ரூபாய் க்ரெடிட் லிமிட்டையும் பல முறை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறார். அடுத்த மாதம் அப்பாவின் பென்ஷன் பணம், மனைவியின் பணத்தைப் பயன்படுத்தி முழு தொகையையும் ஒழுங்காக அடைத்து விடுவார் என்பது மட்டும் தான் இங்கு ஆறுதலான விஷயம்.
நிச்சயம் கடன் இல்லை அப்படி ஒழுங்காக அடைத்திருக்கவில்லை என்றால் இந்நேரம் ரவி அண்ணனின் அப்ளிகேஷனைக் கூட எந்த வங்கியும் வாங்கி இருக்க மாட்டார்கள். இப்படி பல முறை ரவி அண்ணன் கார்டை தேய்த்திருப்பதைக் காரணம் காட்டி, இந்த 1,00,000 ரூபாய் தனி நபர்க் கடனை ரத்து செய்தார்கள் வங்கி அதிகாரிகள். அப்படி என்றால் க்ரெடிட் கார்டில் எவ்வளவு பணத்தைத் தான் பயன்படுத்த வேண்டும்..? 50% வரை பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஏதாவது தவிர்க்க முடியாத சூழலில், வேறு எந்த வங்கிக் கடனும் இல்லாத போது வேண்டுமானால் 75 சதவிகிதம் வரை போகலாம். இப்படி அடிக்கடி 100% க்ரெடிட் லிமிட்டைப் பயன்படுத்துவதால் நிச்சயம் உங்களை நம்பி கடன் கொடுக்க மாட்டோம். அப்படியே கொடுத்தாலும் வட்டியை மிக அதிகமாக வசூலிப்போம் என்றார்கள் வங்கி அதிகாரிகள்.
வேறு காரணங்கள் ரவி அண்ணனால் பதில் பேச முடியவில்லை. கொஞ்சம் வாயடைத்துப் போனார். இருந்தாலும் ஒரு மாதிரியாக "வேறு என்ன காரணங்களுக்காக என் ஒரு லட்சம் ரூபாய் கடனை ரத்து செய்ய முடியும்" எனக் கேட்டார். ஒவ்வொன்றாக பட்டியலிடத் தொடங்கினார் வங்கி அதிகாரி.
விண்ணப்பத்தில் தவறு நம் ரவி அண்ணன் கடன் (Loan) கேட்டு விண்ணப்பித்திருந்த விண்ணப்பப் படிவத்தில் தன் புதிய முகவரியைக் கொடுக்காமல் மனிதர் தன் பழைய வீட்டின் முகவரியைக் கொடுத்துவிட்டார். வங்கியையே ஏமாற்ற , முயற்சிக்கிறீர்களா..? என கொதித்துவிட்டார்கள் வங்கிகள். விண்ணப்பத்தின் மேல் சிவப்பு மையில் ரிஜெக்டட் என முத்திரை குத்த இது மிகப் பெரிய அடிப்படைக் காரணமாகிவிட்டது. இப்படி விண்ணப்பத்தில் நம் பெயர், முகவரி தொடங்கி நிதி நிலை வரை அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும் இல்லையெனில் ரவி அண்ணனின் ரிஜெக்‌ஷன் தொடரும் என்கிறார்கள் வங்கி அதிகாரிகள்.
ஏற்கனவே கடனாளி சார் நீங்க வீட்டுக் கடன் (Loan) வைத்திருப்பதாகச் சொன்னீர்கள் தானே..? ஆமாம் சார்.... பிறகு ஏன் அதே வங்கியின் (வீட்டுக் கடன் வாங்கிய வங்கியில்) தனி நபர் கடனுக்கு விண்ணப்பிக்கவில்லை...? அங்கு சில வசதிகள் சரி இல்லை சார். அதான் உங்கள் வங்கிக்கு வந்தேன். இதை வங்கிகள் அப்படி எடுத்துக் கொள்ளாது சார். நீங்கள் ஏற்கனவே கடன் வாங்கிய வங்கியிலேயே ஒழுக்கமாக நடந்து கொள்ளவில்லை போல, அதனால் தான் அங்கு தனி நபர் கடன் வாங்க முடியாமல் இங்கு வந்திருக்கிறார் எனக் கருதுவோம். ஆகையால் கடன் (Loan) விண்ணப்பம் ரத்தானாலும் பரவாயில்லை, முதலில் ஏற்கனவே கடன் வாங்கி இருக்கும் வங்கியில் பேசி விட்டு தான் அடுத்த வங்கியிடம் கடன் கேட்க வேண்டும், என குண்டைத் தூக்கிப் போட்டார்கள் அதிகாரிகள்.
வங்கியிடம் கேட்பது ரவி சார், நேரடியாக வங்கி அதிகாரிகளிடம் கடன் கேட்டு விண்ணப்பித்திருக்கிறீர்களா..? ஆமாம் சார். நான்கு வங்கியில் முறையாக விண்ணப்பப் படிவங்களை நிரப்பி விண்ணப்பித்தேன். இப்படி பார்க்கும் எல்லா வங்கியிலும் கடன் (Loan) கேட்டு விண்ணப்பித்தாலும், உங்கள் சிபில் ஸ்கோர் குறையும். இப்படி நான்கு வங்கிகள் உங்களுக்கு கடன் தர மறுத்த விஷயம் எங்களுக்கும் தெரிய வரும். எனவே நான்கு வங்கிகள் நிராகரித்த உங்களை நம்பி, நாங்கள் மட்டும் எப்படி கடன் கொடுப்போம் என கிடுக்கிப் பிடி போடுகிறார் வங்கி அதிகாரி. இனி எந்த வங்கிகளிடமும் முதலில் கடன் கிடைக்குமா..? என தீர விசாரித்துவிட்டு, அதன் பிறகு விண்ணப்பியுங்கள், அது வரை விண்ணப்பிக்க வேண்டாம். எனவும் டிப்ஸ் கொடுக்கிறார் வங்கி அதிகாரி.
உறவுமுறை இவ்வளவு நேரம் பேசிய வங்கி அதிகாரிக்கு சூடாக ஏலக்காய் டீ வந்தது. ரவி அண்ணனுக்கு கொடுக்காமல் (கேக்கவே இல்லங்க, அவ்வளவு மரியாதை) குடித்தார். தொண்டையை இருமி சரி செய்து கொண்டு தொடர்ந்தார் வங்கி அதிகாரி. உங்களுக்கு வயசு என்ன ரவி..? 36 சார். சுமார் கல்லூரி படிப்ப முடிச்சு 15 வருஷம் இருக்கும். ஆக உங்க பெயர்ல ஒரு வங்கி கணக்காவது கடந்த 15 வருஷமா தொடர்ச்சியா இருக்கா..? அதாவது உங்க 20 வயசுல இருந்து ஒரு வங்கிக் கணக்கை ஒழுங்கா பயன்படுத்திக் கிட்டே வர்றீங்களா..? இல்லங்க... இதுவும் உங்களுக்கு கடன் கொடுக்காததுக்கு ஒரு முக்கியக் காரணம். ஒரு வங்கியோட கூட நீங்க 5 வருஷமா கணக்கு வெச்சிக்கல. எல்லா வங்கிக் கணக்கும், அதோட வேலை முடிஞ்ச உடனேயே அப்படியே டார்மெண்டா விட்டுடுறீங்க. (டார்மெண்ட் - கணக்க செயல்படுத்தாம கைவிட்டுடுறீங்க). இதுவும் ஒரு மோசமான வாடிக்கையாளர்கள் நடவடிக்கையில ஒண்ணு. ஆக இனியாவது ஒரு சில வங்கிக் கணக்குகள பர்சனலா, நிரந்தரமா வெச்சிங்குங்க என்கிறார் வங்கி அதிகாரி.
வேலை ம்ம்ம்ம்.... ரவி நீங்க தனியார் கம்பெனில, என்ன பதவில இருக்கீங்க. ஏரியா மேனேஜர் சார்... ம்ம்ம்.... உங்க கம்பெனிக்கு எங்க வங்கி டி ரேடிங் தான் கொடுத்திருக்கு. பன்ணாட்டு நிறுவனங்கள்ள வேலை பாக்குறவங்க ‘ஏ' ரக வாடிக்கையாளர்கள். உள்நாட்டிலேயே நல்ல நிறுவனங்களில் வேலை பாக்குறவங்க ‘பி' ரக வாடிக்கையாளர். உள்நாட்டில கொஞ்சம் சுமாரான கம்பெனிங்கள்ள வேலை பாக்குறவங்க ‘சி' ரக வாடிக்கையளர்கள். உங்கள மாதிரி பெயர் தெரியாத, சின்ன கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள், பத்திரிகையாளர்கள் (எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி), மீடியா ஆட்கள், வக்கீல்கள், ஆடிட்டர்கள் மாதிரி கெடுபிடி போடுறவங்க, சட்டம் பேசுறவங்க எல்லாருக்கும் ‘டி' கிரேட் தான். இந்த கிரேட் படி எங்கள் வங்கி உங்களைப் போன்ற மாத சம்பளதாரர்களுக்கு கடன் கொடுக்காது.
பணி மாற்றம் ரவி ஒரு பர்சனலான கேள்வி... கேட்கலாமா...? கேளுங்க சார்... ஆகஸ்ட் 2017 வரை ஒரு கம்பெனில வேலை, அப்புறம் செப்டம்பர் 2017-ல் இருந்து ஆகஸ்ட் 2018 வரை ஒரு கம்பெனில வேலை, திரும்ப செப்டம்பர் 2018-ல் இருந்து இப்ப வரை ஒரு வேலை இப்படி அடிக்கடி வேலை மாறி இருக்கீங்க. உங்களுக்கு இது தப்பா தெரியல..? அப்படி இல்ல சார், அந்த கம்பெனிங்கள விட இப்ப இருக்குற கம்பெனில நல்ல சம்பளம் தர்றான்ங்க. அதனாலத் தான் மாறினேன். இல்ல ரவி பணிமாற்றத்தப்ப ஒரு 20 சதவிகிதமாவது சம்பள உயர்வோடு போனால் பரவாயில்லை. ஆனால் நீங்கள் வெறும் 10%, 16%-க்கு எல்லாம் பணி மாற்றம். அதனால உங்க மேல இருக்குற நம்பிக்கை இன்னும் பலமா அடிவாங்குது. இதுவும் உங்களுக்கு கடன் கொடுக்காம இருக்க முக்கிய காரணமா இருக்கு...!
வருத்தம் இப்படி அத்தனையையும் திரும்பிப் பார்க்கும் போது ரவி அண்ணனுக்கே கொஞ்சம் ஆச்சர்யமாகத் தான் இருந்தது. ஒன்றும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மனதை தளர விடாதீர்கள் ரவி, எப்படியும் அரசு வங்கிகள் உங்களுக்கு கடன் தராது. எனக்கு தெரிந்த ஒரு தனியார் வங்கி நண்பர்கிட்ட சொல்றேன் போய் பாருங்க என தேற்றினார்.
தனியார் வங்கி தனியார் வங்கிகள் என்றால் நம் ரவி அண்ணனுக்கு அலர்ஜி. சுத்தமா ஆகாது. அழகான பெண்களை வைத்து சிரித்துப் பேசி மொத்த வேலையையும் முடித்துவிடுவார்கள். வட்டி ஆரம்பமே 16% தான் என யோசித்துக் கொண்டே அரசு வங்கி அதிகாரி சொன்ன தனியார் வங்கி நண்பரைச் சந்தித்தார். அரசு வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு இரண்டு வருடத்தில் 15.25% வட்டி செலுத்த வேண்டும். மாதம் 4800 ரூபாய் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் இப்போது இந்த தனியார் வங்கியில் அதே ஒரு லட்சம் ரூபாய்க்கு 2 வருடத்தில் 18.25% வட்டி செலுத்த வேண்டும். மாதம் 5,041 ரூபாய். வேறு எங்காவது பார்த்துவிட்டு வரலாம் எனத் தோன்றியது. போன் வந்தது, எண்ண ஓட்டத்தை அடக்கிவிட்டு போனைப் பார்த்தார். அப்பாவிடமிருந்து அழைப்பு.
அப்பா போனை எடுத்த உடன் "சாமி, அப்பா பேசுறேன்யா. "சொல்லுப்பா..." "ஐயா, கால் ரொம்ப வலிக்குதுய்யா, வலியில கண்ணீரே வருதுய்யா, வலி பொறுக்க ஏதாவது நல்ல மாத்திரை இருந்தா வாங்கிட்டு வாயா... அப்பாவால வலி தாங்க முடியல" என தன் தளதளத்த குரலில் மகனிடம் கெஞ்சுகிறார். "சரிப்பா, கொஞ்சம் பொறுத்துக்க, 30 நிமிஷத்துல வந்துடறேன்" என அப்பாவைத் தேற்றி போனை வைக்கிறார் நம் ரவி அண்ணன். 18.25% வட்டிக்கு தனியார் வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்து விட்டு அப்பா கேட்ட வலி நிவாரணியை வாங்கச் சென்றார் ரவி அண்ணன். இனியாவது நிதி மற்றும் வங்கி சார்ந்த விஷயங்களில் தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டார் ரவி அண்ணன் அப்ப நீங்க..?
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் ஏறக்குறைய எல்லா அரசு வங்கிகளிலும் கடைபிடிக்கப்படுகின்றன. தனியார் வங்கிகளில் இந்த விதிமுறைகள் மாறலாம். எனவே எந்த ஒரு வங்கியிலும் இந்த விதிமுறைகளை முழுமையாக கடை பிடிப்பதில்லை.

நன்றி :கௌதமன் சார் ...
என்றும் அன்புடன் .சிவக்குமார் -9944066681
நிதி மேலாண்மை -(வீட்டுக்கடன் பிரிவு )