வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

வரலாற்று பதிவுகள் ....என்றும் அழிவதில்லை ...ஏராம் வயல் ..(பொன்னலம்மன் சோலை வழி )
அணைக்கரைப் பாறை
கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம், இராவணாபுரம் குழந்தைவேலு, தமிழ்ப்பல்கலை-கல்வெட்டு ஆய்வு மாணவர் சமத்தூர் இரமேஷ் ஆகியோர் திருமூர்த்தி அணைப்பகுதியில் ஆய்வு நோக்கில் களப்பயணம் மேற்கொண்டபோது, அணைக்கருகில் இருக்கும் இராமன் என்பவர், அருகில் அணைக்கரை என்னும் இடத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதாகத் தகவல் தரவே, அவரோடு சென்று பார்வையிட்டனர். திருமூர்த்தி அணைக்கருகில் சற்றுத் தொலைவில் தடுப்பணை ஒன்று உள்ளது. அப்பகுதி அணைக்கரை என்றும், அங்குள்ள பாறை அணைக்கரைப் பாறை என்றும் வழங்கப்படுகிறது. ஒரு சிறிய தடுப்பணை; அதை ஒட்டியுள்ள ஒரு பாறையில் கல்வெட்டு அமைந்துள்ளது. கல்வெட்டின் அருகிலேயே, அதன் வலப்புறத்தில் பாறையில், சூலத்தின் புடைப்புச் சிற்ப்மும் செதுக்கப்பட்டுள்ளது.
பாறையின் சரிவான பகுதியில், ஓரளவு சமதளமாக உள்ள பரப்பில், ஆறுவரிகளில் கல்வெட்டு வரிகள் காணப்படுகின்றன. பாறையின் மேலேயே கோடுகளால் நீள்சதுரம் ஒன்றை அமைத்து, அச்சதுரப் பரப்புக்குள் ஆறுவரிகளில் கல்வெட்டைச் செதுக்கியுள்ளனர். கல்வெட்டில் அணையைக் கட்டியவர் யார் என்னும் குறிப்பு உள்ளது. நாயக்கர் கால இராயர் மாயண நாயக்கர் என்பவரின் தளவாயாக இருந்த வாயண நாயக்கர் இந்த அணையைக் குரோதன ஆண்டு சித்திரை மாதம் பத்தாம் தேதி கட்டியதாகக் கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டின் பழங்கால எழுத்து வடிவத்தை நோக்கும்போது, கல்வெட்டு கி.பி. பதினாறாம் நூற்றாண்டு அல்லது பதினேழாம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதலாம். தமிழகத்தில், மதுரையைத் தலைநகராகக்கொண்டு நாயக்கர் ஆட்சியைத் தொடங்கிய விசுவநாத நாயக்கர், அவரது தளவாயும்(படைத்தளபதி), பிரதானியும்(முதலமைச்சர்) ஆன அரியநாத முதலியுடன் இணைந்து ஆட்சி நிருவாகத்தைப் பாளையங்களாகப் பிரித்தார். பாளையங்கள் உருவாக்கத்தில் பெரும்பங்கு அரியநாத முதலியையே சாரும். விசுவநாத நாயக்கரின் ஆட்சிக்காலம் கி.பி. 1529-1564. எனவே, பாளையக்காரர் அமைப்பு கி.பி. 1564-ஆம் ஆண்டுக்கு முன்பே நடைமுறையில் வந்துள்ளதால், கல்வெட்டின் காலத்தைக் கி.பி. பதினாறாம் நூற்றாண்டு என்று கொள்ளும் வாய்ப்பு மிகுதி. கல்வெட்டில் சக ஆண்டு, கலியாண்டு ஆகிய விவரங்கள் தரப்படவில்லையாதலாலும், அறுபதுவட்டத் தமிழ் ஆண்டான குரோதன ஆண்டு, தை மாதம் பத்தாம் நாள் என்னும் செய்தி தரப்பட்டுள்ளதாலும், கி.பி. பதினாறாம் ஆண்டில் வருகின்ற குரோதன ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கல்வெட்டின் காலம் கி.பி. 1565 என்றோ, அல்லது அதை அடுத்து வருகின்ற கி.பி. 1625 என்றோ கொள்வது பொருத்தமாகலாம். எனவே, கல்வெட்டு ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் பழமை என்றும், தடுப்பணையும் நானூறு ஆண்டுகள் பழமையானது என்றும் கருதலாம். அணையைக் கட்டுவித்தவர் பெரும்பதவியில் (தளவாய்ப் பதவி) இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வெட்டுப்பாடம்
1 குறோதந வருஷம் சித்திரை
2 மாத்ம் 10 உ இந்த அணை
3 இராயதருவுக்க(ள்)
4 மாயண நாயக்கர்
5 தளவாய் வாயண நா
6 யக்கர் தன்மம்....
நன்றி :படம் ...தகவல் ...உதவி ..தென்கொங்கு சதாசிவம்..

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக