வியாழன், 14 பிப்ரவரி, 2019

எனது அன்பு நண்பர் .வா மணிகண்டன் அவர்களின் பதிவு ...



பொம்முவிலிருந்து வீரபாண்டிய கட்டபொம்மன் வரை

பெல்லாரி நாடு - இன்றைய கர்நாடகாவுக்கும், ஆந்திராவுக்குமான எல்லையில் அந்தக் காலத்தில் ஒரு குட்டி நாடு. வானம் பார்த்த பூமி. அந்த நாட்டைச் சார்ந்தவர் பால்ராஜா. அரசராக இருந்தவராம்.  ஒரு சமயம் அந்த பிரதேசத்தில் மிகக் கடுமையான பஞ்சம் வந்துவிட்டது. குடிக்கவும் நீரில்லாத வறட்சி. பால்ராஜாவுக்கு என்ன செய்வது என்று தெரியாத கையறு நிலை.

அதே சமயத்தில் அந்தப் பகுதியில் கோலாச்சிக் கொண்டிருந்த ஓர் இசுலாமியனுக்கு பால்ராஜா நாயக்கர் குடும்பப் பெண் மீது கண் விழுகிறது. ஆள் விட்டுக் கேட்டுப் பார்க்கிறான் அந்த முகமதியன். அதுவே அந்தக் காலத்தில் பெரிய மரியாதைதான். அவன் யாரையும் கேட்காமல் கொத்திக் கொண்டு போயிருக்க முடியும். ஒருவேளை நாயக்கர் முடியாது என்று சொன்னால் அடுத்ததாக அவன் அதைத்தான் செய்திருப்பான். ஒரு பக்கம் பிழைக்கவே வாய்ப்பில்லாத பஞ்சம்; இன்னொரு பக்கம் இசுலாமியன். இனி இந்த நாட்டில் நமக்கு வேலையில்லை என்று முடிவு செய்கிறார் பால்ராஜா. ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு, குடும்பத்தோடும் சுற்றத்தோடும் இரவோடிரவாக தெற்கு நோக்கி நடக்கத் தொடங்குகிறார்கள். 

இச்சம்பவம் இன்றைய தேதிக்கு சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது.

ஆறு மாதங்கள் நடந்த பிறகு தெற்கில் கடல் பகுதியை அடைகிறார்கள். இனி இங்கேயே தங்கிக் கொள்ளலாம் என சாலிகுளத்தில் கொட்டகை அமைத்து உறவுகளோடு வாழத் தொடங்குகிறான் பால்ராஜா. சாலிகுளம் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. பால்ராஜாவின் மனைவி பெயர் லக்கம்மாள். இவர்களுக்கு நிறையக் குழந்தைகள். எட்டாவது பிறந்தவன் பெயர் பொம்மு. பதினைந்து பதினாறு வயது ஆகியிருந்தது. கெட்டிக்காரன். 

எப்படி கெட்டி என்று கேட்டால் அதற்கு ஒரு சம்பவம் இருக்கிறது. பால்ராஜா குடும்பத்தினர் சாலிக்குளம் வந்து ஐந்தாறு ஆண்டுகள் கழிந்த பிறகு நள்ளிரவில் கள்ளர் கூட்டமொன்று கால்நடைகளைத் திருடிக் கொண்டு சாலிக்குளம் வழியாக வருகிறது.  அரவம் கேட்ட பொம்மு ‘இந்த நேரத்தில் யார் போகிறார்கள்’ குடிசையை விட்டு வெளியில் வந்து பார்க்கிறான். திருடர்கள் என்பதைப் புரிந்து கொண்ட பொம்மு சப்தமிடுகிறான். அப்பொழுது கள்ளர்கள் ‘அட சின்னப்பையன்’ என்று நினைத்துத் தாக்க முற்படுகிறார்கள். இருபது வயது கட்டிளங்காளையான பொம்மு ஒரே ஆளாக பனிரெண்டு கள்ளர்களையும் அடித்து வீழ்த்தி, ஊர்க்காரர்களை அழைத்துக் கள்ளர்களைக் கட்டிப் போடுகிறான் பொம்மு. விடிந்த பிறகு இந்தச் செய்தி அக்கம்பக்கமெல்லாம் பரவுகிறது. அப்படித்தான் பொம்மு என்பவன் கெட்டிக்கார பொம்முவாகி பிறகு கெட்டிபொம்மு என்றாகிறான்.

எங்கேயிருந்தோ வந்த தெலுங்குக் குடும்பத்தைச் சார்ந்த ஒருவன் எப்படி பாஞ்சாலங்குறிச்சிக்கு பாளையத்துக்காரன் ஆனான்?

அதே தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளத்துக்குப் பக்கத்தில் வீரபாண்டியபுரம் என்ற ஊர் இருக்கிறது. அந்த ஊருக்கு ஜெகவீரபாண்டியன் என்றவொரு சிற்றரசன் இருந்தான். அந்தக் காலத்தில் அக்கம்பக்கத்து ஊர்க்காரர்களுக்கு பகைமை இருந்து கொண்டேயிருக்கும் அல்லவா? அப்படி புதியம்புத்தூர், ஆரைக்குளம் ஆகிய ஊர்க்கார அரசர்களுடன் பகை முற்றுகிறது. இந்த ஊர்கள் எல்லாமே இன்றைக்கும் இருக்கின்றன. ஜெகவீரபாண்டியனின் அரசனாக இருந்த சங்கரசிங்குவுக்கு கெட்டிபொம்மு பற்றிய செய்தியை யாரோ முன்பாகவே சொல்லியிருக்கிறார்கள். அமைச்சர் மன்னரிடம் பொம்முவைப் பற்றிச் சொல்லி ‘அவனை நம்ம படையில் வைத்துக் கொண்டால் நமக்கு வலு கூடும்’ என்கிறான். ஜெகவீரபாண்டியன் ஆள் அனுப்பி பொம்முவை அழைத்து வரச் சொல்லி அவனிடம் பேசுகிறான். பொம்முவுக்கும் சம்மதம்தான்.

போருக்குத் தயாரானது வீரபாண்டியபுரம். எதிரி ஊர்க்காரர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து படை திரட்டி வந்தார்கள். ஆயிரக்கணக்கான படைவீரர்கள் மோதிக் கொண்டார்கள். எதிர்த்து நின்றவன் கெட்டிபொம்மு. இருபத்தோரு வயதுடையவன். ‘சின்னப்பையன்’ என்றுதான் எதிரிகள் இருவரும் களமாடினர். ஆனால் இரண்டு பேர்களின் படைகளும் தோற்றுச் சிதறின. அதிலிருந்தே ஜெகவீரபாண்டியனுக்கு அணுக்கமானவனாகிவிட்டான் கெட்டிபொம்மு. வாரிக்கொடுத்து தனது பக்கத்திலேயே வைத்துக் கொண்டான் அவன். ஜெகவீரபாண்டியனுக்கு வாரிசுகள் யாருமில்லையாம். அதனால் கெட்டிபொம்முவையே அரசனாக்குகிறான். பெல்லாரியிலிருந்து வந்தவன் திருநெல்வேலிச் சீமையில் சிற்றரசனாக முடி சூடிக் கொண்டான்.

நாடு கிடைத்த பிறகு தமக்கேற்ற ஒரு கோட்டையை அமைக்க விரும்பினான் கெட்டிபொம்மு. அதற்கான இடம் தேடிக் கொண்டிருந்தவனிடம் வேட்டைக்காரர்கள் சிலர் வந்து ஒரு கதையைச் சொன்னார்களாம். ஒரு முயலை வேட்டைக்காரர்களின் ஏழு நாய்கள் துரத்திச் சென்ற போது வெகு தூரம் ஓடிய முயல் ஓரிடத்தில் எழுந்து நின்று நாய்களை மிரட்டியதாகச் சொல்லியிருக்கிறார்கள். வீரம் மிகுந்த அந்த இடம்தான் கோட்டை கட்டி வாழத் தகுந்த இடம் என்று அந்த இடத்தைச் செப்பனிட்டு கோட்டை கட்டி தம்முடைய தாத்தா பாஞ்சாலன் பெயரில் பாஞ்சாலன் குறிச்சி என்று பெயரிட்டான் கெட்டிபொம்மு.

தம்முடைய ஆள் ஒருத்தன் மன்னராகிவிட்டது கேள்விப்பட்ட சுற்றத்தார் எல்லாருக்கும் வெகு சந்தோஷம். வடக்கே தெலுகு தேசத்திலிருந்து கூட்டம் கூட்டமாகத் தெற்கு நோக்கி வந்து பாஞ்சாலங்குறிச்சியில் குடியேறினர் கம்பள நாயக்கர் வகையறா. ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்ட நாயக்கமார்கள். அப்படி வந்தவர்களுக்கெல்லாம் வாழ்வதற்கான வழிவகைகளைச் செய்து கொடுத்தான் கெட்டிபொம்மு. ‘கொடுத்தால் கட்டபொம்மு கொடுக்க வேண்டும்; விளைந்தால் கரிசல் காடு விளைய வேண்டும்’ என்ற சொலவடையும் உருவானது. 

இந்தக் கெட்டிபொம்முதான் முதல் மன்னன். இவனுக்குப் பிறகு நாற்பத்தியேழாவது பட்டம்தான் கயத்தாறில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’

தொடரும்.

(பண்டிதமணி ஜெகவீரபாண்டியனார் எழுபதாண்டுகளுக்கு முன்பு எழுதி, தற்போது திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களால் தேடிப்பிடித்து மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கும் பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது. (உயிர்மை பதிப்பகம் வெளியீடு))

எம்.வி.வெங்கட்ராம் எழுதிய  ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர்: வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்ற புத்தகமும் உதவியது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக