உப்பு பற்றி நீங்கள் அறியாத சுவரசியமான தகவல்கள் சில…
"Salary Credited" எனும் மெசேஜ் கண்ணில் படும்போது வரும் ஆனந்தத்திற்கு ஈடுண்டா? ஆனால், இந்த Salary அல்லது சம்பளம் எனும் வார்த்தை நம் காதில் விழும்போது நாமெல்லாம் உப்பைத்தான் நினைவுகொள்ளவேண்டும். ஏன் தெரியுமா? இந்த இரண்டு வார்த்தைகளும் உப்பிலிருந்துதான் பிறந்துள்ளனவாம். பண்டையகாலத்தில் உப்பு மிகவும் அரிதானவோர் பொருளாக கருதப்பட்டதால் வெண் தங்கம் (White Gold) என்று அழைக்கப்பட்டது. பண்டைய ரோமர்கள் தமது படைவீரர்களுக்கு உப்பினையே கூலியாக வழங்கியுள்ளனர். அதனை “Salarium” எனும் லத்தீன் வார்த்தையால் குறிப்பிட்டுள்ளனர். Salarium எனும் லத்தீன் வார்த்தையே பின்னாளில் “Salary” என மாற்றமடைந்துள்ளது.
அதேபோன்றே உப்பு உற்பத்தித்தொழிலை அடிப்படையாக வைத்துதான் சம்பளம் எனும் சொல்லே உருவானதாகவும் சொல்லப்படுகின்றது . உப்பினை உற்பத்தி செய்யும் களத்திற்கு பெயர் “அளம்” . பண்டையகாலத்தில் இந்த அளத்தில் வேலை பார்ப்போருக்கு கூலியாக “சம்பா” அரிசியே கொடுக்கப்பட்டதால். அப்படி " அளத்தில் கிடைத்த சம்பா " சம்பா - அளம்” என்பது காலப்போக்கில் சம்பளம் என மருகியது எனக்கூறப்படுகின்றது .
இப்படிப்பட்ட உப்பின் வணிகத்திற்காக உலக நாடுகளுக்கிடையே ஏகப்பட்ட போர்கள் நடந்துள்ளன. உப்பின் மீது போடப்பட்ட வரிகளுக்காக எத்தனையோ போராட்டங்கள் புரட்சிகள் வெடித்துள்ளன. அதுமட்டுமா? இன்று உப்பின் வணிகம் காப்பிரேட் நிறுவனங்களின் கைகளுக்கு சென்றபின் அதில் ஏராளமான உணவரசியல்களும் நுழைந்துவிட்டன. அதில் ஒன்றுதான் அமெரிக்காவில் அயோடின் குறைபாடுடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதற்காக மக்களுடைய அன்றாட உணவில் எப்படியாவது அயோடினை சேர்த்தாகவேண்டும் என யோசித்த அமெரிக்க அரசு அதற்காக தேர்ந்தெடுத்த பொருள் "உப்பு" அப்போதுதான் உப்பில் “அயோடின் கலந்த உப்பு“ எனும் புதிய முறை உருவானது .
கடைசியில் அயோடின் கலந்த உப்புதான் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு தேவை என்பதுபோல் இந்த அயோடின் உப்பு வணிகம் பரப்பப்பட்டது. "உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா?" போன்ற விளம்பரங்களின் பின்னால் இருக்கும் வணிக நோக்கம் தெரியாமல் நாமும் அதை வாங்கி வயிற்றில் கொட்டிக்கொள்கின்றோம்.
மனிதன் வேட்டையாடி சமூகமாக இருந்தபோது அவனது உடல் இயக்கத்திற்கு தேவையான உப்பானது அவன் வேட்டையாடும் விலங்கின் இறைச்சியிலிருந்தே கிடைத்தது. ஆனால், அவன் விவசாயம் செய்ய ஆரம்பித்தபின் உப்பு என்பது தனியாக தேவைப்பட்டது. அப்போதுதான் அவன் உப்பை எப்படி கண்டுபிடிப்பது என யோசிக்கலானான். நெருப்பு, விவசாயம் என்பவற்றுக்கு அடுத்து மனிதனின் அடுத்தகட்ட பரிணாமம் உப்பைக் கண்டுபிடித்ததுதானாம் .
உடல் உழைப்பு அதிகமாக இருந்த காலகட்டத்தில் நம் வியர்வையினூடாக உப்பு வெளியேற்றப்பட்டமையினால் நமது உடல் இயக்கத்தின் சமச்சீருக்கு உப்பு என்பது அதிகமாக தேவைப்பட்டது. ஆனால் இன்றோ உடல் உழைப்பு என்பது மிகவும் குறைந்துபோனதால் உப்பின் அளவையும் குறைத்துக்கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக