Sivakumar Kumar is in Udumalaippettai.
அப்பாவின் மலரும் நினைவுகள் ...சினிமா பாட்டு புஸ்தகம் ....... 

சின்ன வயது ஞாபகங்கள் என்று சொல்லும் போது சினிமா பாட்டு புத்தகம் மறக்க முடியாதது ஆகும். அப்போது புத்தகம் என்று சொல்ல மாட்டார்கள். புஸ்தகம் அல்லது பொஸ்தகம் என்றுதான் சொல்வார்கள். சினிமா பாட்டு புஸ்தகம் என்பது பழைய செய்தித்தாள் போன்ற ஒரு தாளில் ( சாணித் தாள் என்றே சொல்வார்கள் ) சினிமா பாடல்களை அச்சடித்து ஒரு அணா அல்லது இரண்டு அணா என்று விற்பார்கள். ஒரு சினிமாப் படம் வந்ததும் பாட்டு புத்தகமும் விற்பனைக்கு வந்துவிடும். அந்த புத்தகத்தின் அட்டைப் படம் பெரும்பாலும் அந்த படத்தின் அன்றைய போஸ்டரின் கறுப்பு வெள்ளை போட்டோ நகலாகத்தான் இருக்கும். உள்ளே அந்த படத்தின் நடிகர்கள், நடிகைகள், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்று எல்லா விவரங்களையும் தந்து இருப்பார்கள். புத்தகத்தில் பாடலின் வரிகளை இஷ்டத்திற்கு வடிவம் கொடுத்து இருப்பார்கள். முக்கியமான அம்சம் படத்தின் கதைச் சுருக்கம் தந்து, கதாநாயகி என்ன ஆனாள்? கதநாயகன் கொலைகாரனைக் கண்டு பிடித்தானா? வில்லன் முடிவு என்ன? என்ற கேள்விகள் கேட்டு கடைசி வரியாக “ விடையை வெள்ளித் திரையில் காண்க” என்று முடித்து இருப்பார்கள். இது மறக்க முடியாத வாசகம்.
பெரும்பாலும் இந்த சினிமா பாட்டு புஸ்தகங்களை சினிமா தியேட்டருக்கு அருகில் உள்ள பெட்டிக் கடைகளிலும், பள்ளிகளுக்கு அருகில் உள்ள தரைக் கடைகளிலும் விற்பனை செய்வார்கள். அந்தகாலத்து பத்திரிக்கைகளில் வரும் தொடர்கதைகளை பைண்டிங் செய்வது போல, பாட்டு புத்தக பிரியர்களும் சினிமா பாட்டு புஸ்தகங்களையும் பைண்டிங் செய்து வைத்து இருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக