அமுதே! தமிழே! அழகிய மொழியே எனதுயிரே.....என்ற பாடல் ஆசிரியர் யார் ..
பதில் :..தாமரைக்கோன் (Aravind Raja), RKMVC கல்லூரி, மயிலாப்பூர்.- இக்கேள்வியைக் கேட்ட ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். இதற்கு தமிழரின் வரலாற்றையும், தமிழிசையின் வரலாற்றையும் குறிப்பிடுவது இன்றியமையாதது. இசையை வளர்த்த சங்க இலக்கியங்கள்: தமிழ் மொழி இலக்கியங்களுக்கு அடிப்படையாக விளங்ககூடியவை, நாற்பத்து ஒன்று செவ்வியல் நூல்கள். அவை : தொல்காப்பியம் (1) பத்துப்பாட்டு (10) எட்டுத்தொகை (8) பதினெண்கீழ்க்கணக்கு (18) சிலப்பதிகாரம் (1) மணிமேகலை (1) முத்தொள்ளாயிரம் (1) இறையனார் அகப்பொருள் உரை (1) ஆக, மொத்தம் நாற்பத்து ஒன்று. தமிழரின் இசை மற்றும் நாட்டியக் கலை பற்றி கூறும் நூல் சிலப்பதிகாரம் . சங்க இலக்கியங்களிலேயே, பண்ணோடு பாடக் கூடிய ஒரே இலக்கியம், பரிபாடல் ஆகும். தமிழிசையைப் பாதுகாத்த காரைக்கால் அம்மையார் : சங்க காலத்திற்குப் பிறகு, தமிழர்களின் இருண்டகாலம் என்று சொல்லப்படும் களப்பிரர்களின் ஆட்சிக் காலம் வந்தது. அக்காலத்தின் துவக்கத்தில் காரைக்கால் அம்மையார் தோன்றி தமிழரின் இசையையும், நூல்களையும் மீட்க, பண்ணோடு கூடிய தமிழ்ப் பாடல்களைப் பாடினார். இவ்வாறே, சைவத்திற்கான முதல் தமிழிலக்கியம் கிடைத்தது. ஆதலால், காரைக்கால் அம்மையார், தமிழிசையின் தாய் என்று போற்றப்பட்டார். ஆதலால் தான், அவர் பாடிய முதல் பதிகத்தை, மூத்த திருப்பதிகம் என்று அழைத்தனர். அவர் தமிழிசையை வளர்த்தார் என்பதற்கு அவருடைய இந்த பாடலே சான்று. துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம் உழை, இளி, ஓசைபண் கெழுமப் பாடிச் சச்சரி, கொக்கரை, தக்கை யோடு, தகுணிச்சம், துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, வன்கை மென்தோல் தமருகம், குடமுழா, மொந்தை வாசித்(து) அத்தனை விரவினோ(டு) ஆடும் எங்கள் அப்ப னிடம்திரு ஆலங் காடே. இப்பாடலில் : துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம் உழை இளி ஓசை (குரல்) என்ற ஏழு பதங்களை (சப்தச் சுரம்) குறிப்பிட்டுள்ளார். இஃது, பின்வரும் சம்பந்தரின் தேவார பாடலின் மூலமும் நன்கு புலப்படும். பண்ணும்பத மேழும்பல வோசைத்தமி ழவையும் உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும் மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும் விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே. இப்பாடல்களின் மூலம், கர்நாடக இசையானது தமிழிசையை அடிப்படையாகக் கொண்டது என்பது திண்ணம். மேலும், சச்சரி கொக்கரை தக்கை தகுணிச்சரம் தந்துபி தாளம் வீணை மத்தளம் கரடிகை வன்கை மென்தோல் குடமுழா தமருகம் மொந்தை போன்ற இசைக்கருவிகளைக் குறிப்பிட்டதன் மூலமும் இவர் பண்ணோடு கூடிய தமிழை வளர்த்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மேலும், சைவத்திற்கான முதல் தமிழிலக்கியம் ஒரு பெண்ணால் கிடைத்தது என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய ஒன்று ! சங்க இலக்கியங்களைப் பார்த்து வருந்திய அம்மையார் : தமிழர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வரலாற்றையும் மற்றும் பல அரிய செய்திகளைத் தரும் சங்க இலக்கியங்களில், பெரும்பாலான பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் இல்லாமையைப் பார்த்தும், பல பாடல்கள் சிதைவுற்றதைப் பார்த்தும் வருந்தினார் காரைக்கால் அம்மையார். ஆதலால் இனி வரும் இலக்கியங்களாவது பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும், எழுதியவர் யார் ? எங்கு எழுதினார் ? என்பதை அறியும் வகையிலும் ஒரு உத்தியைக் கையாண்டார். அதுவே, திருக்கடைக்காப்பு . ஒரு பதிகத்தைப் யார், எங்கு, எப்போது பாடினார் என்பதை அப்பதிகத்தின் இறுதியில் பாடலின் வடிவிலேயே பாடப்படுவது தான், திருக்கடைக்காப்பு . இதை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை காரைக்கால் அம்மையாரையே சாரும். இவரைப் பின்பற்றியே தேவார மூவரும், பிற நாயன்மார்களும், ஆழ்வார்களும் இவ்வுத்தியைக் கையாண்டனர். பல்லவர்களாலும், களப்பிரர்களாலும் வந்த வினை: களப்பிரர்கள் ஆட்சியிலும், பின்னர் வந்த பல்லவர்கள் ஆட்சியிலும் தமிழ் தாழ்வுற்று, வடமொழி பெரும்பான்மை பெற்றது. இதற்கு பல்லவர் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான கல்வெட்டுகள், கிரந்த கல்வெட்டுகளாக இருப்பதே சான்று. ஆகையால், தமிழையும் சைவத்தையும் தமிழிசையையும் மீண்டும் புத்துயிர்ப் பெற திருஞானசம்பந்தர் பிறந்தார். இது சேக்கிழாரின் பின்வரும் பாடலின் மூலம் விளங்கும். திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற, மிசை உலகும் பிறலகும் மேதினியே தனி வெல்ல, அசைவு இல் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல, இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக. தேவார மூவரால் மீண்டும் உயிர்ப் பெற்ற தமிழிசை: காரைக்கால் அம்மையார் தமிழிசைக்கு வித்திட்டவராயினும், அதனை பல மடங்கு முன்னோக்கி எடுத்துச் சென்றவர் திருஞானசம்பந்தர். ஆயினும், அம்மையார் சென்ற வழியிலேயே சம்பந்தரும் சென்றார். அம்மையார் தன்னுடைய முதல் பதிகத்தை நட்டபாடை (இன்றைய கம்பீரநாட்டை இராகம்) பண்ணில் பாடினார். சம்பந்தரும் தன்னுடைய முதல் பதிகத்தை இப்பண்ணிலேயே பாடினார். அம்மையார் உருவாக்கிய திருக்கடைக்காப்பு உத்தியை முதன்முதலில் பயன்படுத்தியவரும் சம்பந்தரே ! இசைக்கும், தமிழுக்கும் ஏது சாதி என்றுக் கூறி சாதிய கட்டமைப்பைத் தகர்த்தவர் திருஞானசம்பந்தர் : சம்பந்தர் ஒவ்வொரு தலத்துக்கும் செல்லுகையில், அவருடன் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் மற்றும் அவரது மனைவி மதங்கசூளாமணியாரும் உடன் செல்வர். ஏனெனில், யாழ்ப்பாணர் யாழ் வாசிப்பதிலும். சூளாமணியார் தாளம் மற்றும் பண் அமைப்பதிலும் வல்லவர்கள். தான் எங்கு சென்றாலும் தவறாமல் இவ்விருவரையும் உடன் அழைத்து செல்வார் சம்பந்தர். அன்று, பாணர்கள் பிரமாணர்களாலும் மற்றும் பிற உயர் சாதியினராலும் "தாழ்சாதி மக்கள்" என்று புறக்கணிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்ணால் தேவார பண்களை அறிவித்த பெருமான் : தில்லைக் கோவிலில் நம்பியாண்டர் நம்பியின் துணைக் கொண்டு தேவார சுவடிகளை மீட்டார் இராசராச சோழன். தேவாரம் மற்றும் திருமுறைகளைப் பகுக்கும் பொறுப்பை நம்பியாண்டார் நம்பிகளிடம் ஒப்படைத்தான் மன்னன். தேவாரம் கிடைத்த நிலையில், தேவார பாடல்கள் எந்த பண்களால் பாடப்பட்டவை என்று நம்பியாண்டார் நம்பி குழம்பினார், எண்ணி வருந்தினார். நம்பியாண்டார் நம்பி, திருநீலகண்ட யாழ்ப்பாணர் பிறந்த ஊரான எருக்கத்தம்புலியூர் சென்றார். அங்கு இருக்கும் ஈசனிடம் தேவார பண்களைத் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். "பாணன் வழி வந்த வல்லி ஒருத்திக்குப் பண்களை அறிவித்துள்ளோம். பெற்றுக் கொள்" , என்று அசரீரி ஒலிக்கவே, நம்பியும் அப்பெண்ணைப் பார்த்து, மூவர் பாடிய முறையிலேயே அப்படியே பாடப்பெற்று, அதற்கான கட்டளைகளையும் வகுத்தார். இவை அனைத்தும் உமாபதி சிவாச்சாரியார் எழுதிய திருமுறை கண்ட புராணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேவாரத்தில் பாடப்பட்டுள்ள தமிழ்ப் பண்களுக்கு இணையான கர்நாடக இராகங்கள் : தமிழ்ப் பண்கள் - கர்நாடக இராகங்கள் நட்டபாடை - கம்பீரநாட்டை கொல்லி - நவரோஸ் இந்தளம் - மாயமாளவகௌளை குறிஞ்சி - அரிகாம்போதி செந்துருத்தி - மத்தியமாவதி யாழ்மூரி - அடாணா (அ) நீலாம்பரி சீகாமரம் - நாதநாமகிரியை நட்டராகம் - பந்துவராளி தக்கராகம் - காம்போதி பழந்தக்கராகம் - சுத்தசாவேரி பழம்பஞ்சுரம் - சங்கராபரணம் தக்கேசி - காம்போதி செவ்வழி - யதுகாம்போதி பியந்தை காந்தாரம் - நவரோஸ் காந்தாரம் - நவரோஸ் காந்தார பஞ்சமம் - கேதார கெளளை கொல்லிக்கௌவாணம் - நவரோஸ் கெளசிகம் - பைரவி பஞ்சமம் - அகிரி சாதாரி - பந்துவாராளி புறநீர்மை - பூபாளம் அந்தாளிக்குறிஞ்சி - சாமா மேகராகக்குறிஞ்சி - நீலாம்பரி (அ) அமிர்தவர்ஷினி வியாழக் குறிஞ்சி - சௌராஷ்டிரம் முடிவு : தமிழ் கற்ற நாத்திகர்களும், தேவாரத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவர். ஏனெனில், பக்திக்கு ஆற்றிய பங்கை விட, இந்நூல் தமிழுக்கும், தமிழிசைக்கும் ஆற்றிய பங்கு அளப்பரியது. காரைக்கால் அம்மையார் தமிழ் இசை மீண்டும் புத்துயிர் பெற வித்தாக இருந்தார் எனில், தேவார மூவரே அதனை கிளைக்கச் செய்தனர். தேவாரம் தமிழிசைக்கு ஆதாரம் என்று சொல்வதை விட, அதனை கிளைக்கச் செய்தது என்று கொள்வதில் எள்ளளவும் ஐயமில்லை. அன்று, தமிழிசையைப் புத்துயிர் பெற செய்த காரைக்கால் அம்மையார், ஒரு பெண் ! தேவார பண்கள் மீண்டும் அமைய காரணமாக இருந்தவர், ஒரு பெண் ! இன்று இக்கேள்வியைத் தொடுத்தவரும் ஒரு பெண் ! இறைவனின் அருளை என்னவென்று சொல்வது ! வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் இசை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக