ஞாயிறு, 5 அக்டோபர், 2025

உடுமலை நண்பர் நட்புப்பெருந்தகை கனகராஜ் அவர்களின் தோட்டத்திற்கு...

  இன்றைய காட்டுவழிப்பயணம், 🥰✒️📗🏠📡🎙️🌈🛵


உடுமலை நண்பர் நட்புப்பெருந்தகை கனகராஜ் அவர்களின்  தோட்டத்திற்கு...


திணைக்குளம், பள்ளபாளையத்திற்கும், ஜல்லிபட்டிக்கும் மையமான பகுதியில் உள்ள அவரது தோட்டம்  சென்றோம். 


போகும் வழியில் கரிசல் குளத்தில் பறவைகளை படம் பிடித்தோம். நமது பகுதியில் ஏழு குளப்பாசனத்தை உடுமலை வரலாற்று நூலில் மிகவும் விரிவாகப் பதிவு செய்திருப்போம். ஏனெனில் இந்தக் கரிசல் குளம் என்பது கரிசல் மண்ணில் இருக்கும் நீர் நிலை, அது மட்டுமல்லாமல் வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் இங்கு தங்கியிருக்கும்.  சித்திரை, வைகாசி மாதங்களில் மிக அதிகளவில் வெளிநாட்டுப்பறவைகள் இங்கு வந்து தங்கியிருக்கும்.

இது இந்த நீர் நிலையின் நீண்ட கால தொன்மையினையும், இந்தப் பகுதியின் நெடிய வரலாற்றையும் சொல்லாமல் சொல்லக்கூடிய செய்தி. மேலும், ஏழுகுளப்பாசனத்தின் மையமான பகுதி இந்த கரிசல் குளம், பரப்பளவில் மிகப்பெரிய அளவு கொண்டது. மடையர்கள், மிலேச்சர்கள் நாம் கேள்விபட்டிருப்போம். 

மடையர்கள் என்பது மடையை நீர் மடையை திறந்துவிடும் ஆபத்தான வேலையைச் செய்பவர்கள், நீர் மேலாண்மையில் அனுபவ அறிவோடு கொஞ்சம் அறிவியல் அறிவையும் கொண்டவர்கள் மிலேச்சர்கள். அவர்கள் இந்த நீர் மேலாண்மையோடு தொடர்பு கொண்டிருந்ததை ஏற்கனவே ஏழு குளப்பாசன வரலாற்றில் பதிவு செய்திருக்கிறேன்.



அவ்விடத்திலிருந்து அடுத்த ஒரு கிலோமீட்டரில் நமது நண்பர்  தோட்டம் இயற்கையான, குளுமையான, அழகான , அற்புதமான அமைதியான இடத்தில் இருக்கிறது. இங்குதான் இன்று சென்று அவர்களது தோட்டத்தில்  இரண்டு மாம்பழச்செடிகளை நட்டு வந்தோம்.இன்று தோட்டத்தில் நண்பர் கனகராஜ் இரண்டு இளநீர் குடிப்பதற்காக வெட்டினார். ஆனால் உண்மையில் மூன்று பேர் சேர்ந்தும் குடிக்க முடியவில்லை. அவ்வளவு தண்ணீர் இருந்தது. அது மட்டுமல்லாமல்  தோட்டத்திற்கு மிக நெருக்கமாக தெளிந்த நீரோடை, இயற்கையாக சலசலவென சத்தத்தோடு அமைதியாக ஓடுகின்றது. 

பெரும் அமைதியான சூழல், பெரும்பாலான கவிஞர்கள், சிந்தனையாளர்கள் ஏன் இயற்கையைத் தேடிப் போகிறார்கள் என்றால், இவ்வாறான இடத்தைப் பார்த்தால் கண்டிப்பாக அதனை முழுமையாக அனுபவிக்க ஆசை இல்லாமலா இருக்கும்.

நமது நண்பர்  கனகராஜ் இரண்டு இடங்களில் அவரே குழி தோண்டி மரங்களை நட்டி, அதற்குப் பாதுகாப்பாக தென்னைஓலைகளையும் வைத்து பராமரிக்கும் பண்பு மரங்களையும், இயற்கையையும் அவர் நேசிக்கும் ஆர்வத்தை நமக்குக்காட்டியது. 

கோ கோ மரம், நெல்லிக்காய் மரம், சிறிய பாகற்காய் (மருந்துக்கான) மரம், நார்த்தங்காய் மரம், எலுமிச்சை மரம், மஞ்சள், பருத்தி என முழுமையாக இயற்கையை நேசிக்கும் நமது நண்பரை  இதுநாள் வரைக்கும் தவறவிட்டமைக்கு மிகவும் வருத்தத்தோடு இந்தப் பதிவை இடவேண்டி உள்ளது. 

பாதுகாப்பிற்கு இரண்டு நாய்களையும் வைத்துள்ளார். இவரும், இவரது தோட்டக்காவலர் சின்னதுரை தவிர மாலை 4 மணிக்கு மேல் யாரும் அந்தத் தோட்டத்தில்  கால் வைக்க முடியாது. அந்தளவிற்கு மிகவும் பாதுகாப்பான விலங்குகள். 


மேலும் நாற்பதடி கிணறு அந்தக்கிணறு நிறையத் தண்ணீர், கரைவளியில் இருப்பதால் இதெல்லாம் ரொம்ப சகஜம். இருப்பினும் கடந்த 1999 முதல் 2002 வரை கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் வந்ததையும், சமவெளிப்பகுதி அல்லது குடிமங்கலம் பகுதியிலிருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது மாடுகளை இங்குக் கொண்டு வந்து கட்டிவைத்து கஞ்சி காய்ச்சி ஊற்றியதையும், அந்த வறட்சியிலும் இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்டதை குறிப்பிட்டுச்சொன்னார் நண்பர் .அப்போது ஆயிரம் அடிக்கும் கீழே தண்ணீர் இருந்ததையும் அதற்குப்பிறகு தண்ணீர் வரத்து ஆண்டு முழுமைக்கும் பச்சைப்பசலென்று  தண்ணீருடன் இருப்பதையும் குறிப்பிட்டுச்சொன்னார். 


நாம் ஒவ்வொருவரும் விவசாயத்தை மனதளவில் நேசித்தாலும், பசுமையை விரும்பினாலும் இது போன்ற நண்பர்களின் தோட்டத்திற்குச்சென்று  பார்க்கும்போதுதான் இன்னமும் மனமும் மகிழ்வாகவும் மன நிறைவாகவும் இருக்கும்.


 இயற்கையோடு சேர்ந்து நட்பின் அருமையினையும் அறிவோம்.


என்றும் அன்புடன் சிவக்குமார்📗✒️🎙️📡🥰💦🌧️🌳🌳🌳🌹💐🕊️🦅🦜








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக