கோடைகாலம் குழந்தைகள் விளையாட்டு .......
பள்ளித்தேர்வு முடிந்து விட்டது. அனல்பறக்கும் வெயிலுக்குப் பயந்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வரத் தயங்குகின்றனர். வீடுகளுக்குள் அமர்ந்து கொண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள், ஒன்றரை மாத விடுமுறைக்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் சேர பெற்றோர்களை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உடுமலை நேதாஜி மைதானத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் விளையாட்டுகளால் கோடை விடுமுறை காலத்தில் கூட்டம் நிரம்பி வழியும் என்றால், தெருக்களில் பெண் குழந்தைகளின் கூட்டம் அதைவிட அதிகமாக இருக்கும். கண்ணாமூச்சி குழந்தைகளுக்கு மிகப்பிடித்தமான விளையாட்டு. "கண்ணாமூச்சி ரே ரே, காதடைச்சா ரே ரே! ரெண்டு முட்டைய தின்னுட்டு மூனு முட்டைய கொண்டு வா" என்ற குழந்தைகளின் குதூகலத்தில் தெரு முழுவதும் மகிழ்ச்சி வழிந்தோடும். கூட்டம், கூட்டமாக குழந்தைகள் விளையாடும் விளையாட்டு "கொலை கொலையா முந்திரிக்கா". துண்டை பிரிமனை போலச்சுற்றி முதுகிற்குப் பின் போட்டு அவுட்டாக இந்த விளையாட்டின் போது படிக்கும் பாட்டு தான், "கொலை கொலையா முந்திரிக்கா- நரிய நரிய சுத்தி வா, கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்-கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி".
சாக்பீசால் வட்டம் போட்டு அதற்கு நடுவில் புளியங்கொட்டைகளைப் போட்டு செதுக்கு முத்து விளையாடுவது, அதே புளியம்கொட்டைகளை வைத்து பல்லாங்குழி விளையாடுவது, ஆடு,புலி, ஆட்டம் விளையாடுவது, தாயம் விளையாடுவது, நொண்டி விளையாடுவது, பாண்டி விளையாடுவது, கயிறு கொண்டு தாவிக்குதிப்பது, நீச்சல் அடிப்பது, ராஜா-பொக்கா விளையாடுவது என பல விளையாட்டுகள் சிறுவர்களிடையே பிரபலம். கொஞ்சம் வெவரமான சிறுவர்கள் ஈ காசு விளையாடுவார்கள். தங்கள் கீழே போடும் காசில் ஈ உட்கார்ந்தால் ஜெயித்ததாக அர்த்தம். தோற்றவர் பிலிமோ, தீப்பெட்டி படமோ தரவேண்டும். தங்களுடைய காசில் ஈ உட்கார வேண்டும் என்பதற்காக மிட்டாய் தின்று விட்டு எச்சிலைத் தொட்டு காசு போட்டு ஏமாற்றவும் செய்வார்கள். இதைப் பார்த்து கொட்டாங்குச்சியில் தண்ணீர் கொண்டு வந்து காசைக் கழுவிவிட்டு போட்டி நடத்தவும் செய்வார்கள்.
அந்த காலத்தில் சிகரெட் அட்டையை வைத்து சிறுவர்கள் வெட்டுச்சீட்டு விளையாடுவது அதிகமாக இருக்கும். இதற்காக தளி பாதையில் காந்தி சவுக்கிலிருந்து பழைய பஸ்ஸ்டாண்ட் முடிய தீப்பட்டி அட்டைப்பெட்டி ..சிகரெட் பெட்டியை கலர் கலராக எடுத்து வைத்து கொண்டு மைதானத்தில் இந்த விளையாட்டுத் துவங்கி விடும். பாசின்சோ என்ற சிகரெட் அட்டைக்கு அப்போது அவ்வளவு மவுசு. இந்த அட்டைக்காக பெட்டிக்கடைகளுக்குச் சென்று காலிப்பெட்டிகளை எடுத்து வந்து பெருமை பொங்க காட்டுவதும் வீரம்கொள்ள நிகழ்வாக அப்போது கருதப்பட்டது. இந்த வெட்டுச்சீட்டுப் போட்டியில் பரிசுப்பொருளாக சினிமா பிலிம்களை வைத்து விளையாடுவார்கள். அதற்கு அடுத்து தெருவில் சிறுவர்கள் அதிகமாக விளையாடுவது கிட்டி தான். சிறு கம்பின் இருமுனையையும் ஊசியாக சீவி விட்டு, அதை பெரிய கம்பைக் கொண்டு கீந்தி விளையாடும் விளையாட்டு தான் இந்த கிட்டிப்புல்.
இது தவிர குண்டு விளையாடுவது ஒரு கோஷ்டிக்கு பிடிக்கும். குழிபறித்து குண்டு விளையாடுவது ஒரு வகை என்றால், நீண்ட தூரம் அடுத்தவனின் குண்டை அடித்துக் கொண்டே செல்வது "பூந்தா" என்ற விளையாட்டு. அடுத்து பம்பரக்கட்டை. இதற்காக நாட்டுக்கருவேலை மரத்தில் இருந்து கட்டையை சீவி பம்பரம் செய்வோம். இந்த கட்டையைக் கொண்டு செய்யப்பட்ட பம்பரங்களைக் கொண்டு விளையாடும்போது பலரின் பம்பரங்கள் உடைந்து போகும். ஆக்கர் வைக்காமலே குத்தும் குத்திலேயே பம்பரம் உடைந்து போகும் போது கதறும் சிறுவனின் தாயார் வந்து அவனது முதுகில் அறைந்து அழைத்துச் செல்வது வாடிக்கையான விஷயமாகும்.
ஒவ்வொரு வாரத்தின் ஞாயிறன்று தெருவில் இருக்கும் அனைத்துக் குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்க்கும் வகையில் பாட்டு, படிப்பு, நடனம், நாடகம் என விளையாட்டுப் போக்காக நடத்தப்பட்ட நிகழ்வுகளைப் பார்க்க அனைத்துப் பெற்றோர்களும் கூடுவதால் அன்றைய நாட்கள் திருவிழாக்கோலம் பூண்டுவிடும் எங்கள் தெரு. விடுமுறை நாட்களில் நடைபெறும் நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலர், முறுக்கு, கடலைமிட்டாய் என வித்தியாசம் பார்க்காமல் வாங்கித்தருவார்கள். முறுக்கு என்றால் மாலை, கடலைமிட்டாய் என்றால் பாக்கெட், கலர் என்றால் லவ்வோ என வகை, வகையாக கவனிப்பு. இதற்காக பாட்டுப்போட்டிக்காக சினிமாப் பாடல்களைப் பாடிக்கொண்டே திரியும் குழந்தைகள் ஏராளம். நாடகம் என்றவுடன் குழந்தைகளுக்குள் பேசி ஸ்கிரிப்ட் உருவாகும். இதில் ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தான் நடிப்பார்கள். இதனால் பள்ளியில் நடக்கும் நாடகங்களில் கலந்து கொள்வதற்கு நல்ல பயிற்சியாகவும் அமையும். ஆனால், தற்போது பள்ளிகளைத் தவிர ஆண், பெண் பேதமில்லாமல் பழக இடம் கிடைக்காமல் போய்விட்டது.
நமது பாட்டி, தாத்தா சொல்லித்தந்த விளையாட்டுக்களை மறந்து விட்டு, ஆண்டுக்கு ஒருமுறை அதாவது ஒன்றரை மாதகாலம் தங்களுக்குப் பிடித்த விஷயத்தை, அதுவும் கற்க வேண்டும் என்ற நோக்கில் பெற்றோர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு சாப்பாட்டுக் கூடையோடு குழந்தைகள் செல்வதைப் பார்க்கையில் பயிற்சி என்பது படிப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகத்தான் பார்க்க முடிகிறது....இந்த கோடை விடுமுறையை பழைய நினைவுகளை நம் குழந்தைகளுடன் ..விளையாடவேண்டும் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக