செவ்வாய், 13 ஜனவரி, 2026

பொங்கல்

 பொங்கல் 

பொங்கல் என்பது வெறும் சடங்கு அல்ல. அது நமது தமிழ் பாரம்பரியத்தின் வேர் என்பதை அடுத்த தலைமுறையினருக்கு எப்படிக் கொண்டு செல்வது

பொங்கலின் அடிப்படைத் தத்துவம்நன்றி கூறுதல்’. சூரியன், கால்நடைகள் மற்றும் இயற்கையென நமக்கு வாழ்வளிக்கும் சக்திகளுக்கு நாம் நன்றி செலுத்துகிறோம். இன்றைய மன அழுத்தம் நிறைந்த சூழலில் வாழும் இளைஞர்களுக்கு, நின்று நிதானித்து நன்றி சொல்லும் பண்பை வளர்ப்பது மிக முக்கியமானது

சிங்கப்பூர் ஒரு பல்லினச் சமூகம். இங்கே நம்முடைய தனித்துவத்தை நிலைநாட்ட நமது கலாசாரப் புரிதல் அவசியம். பொங்கல் திருநாளில் வேட்டி, சேலை அல்லது பாரம்பரிய உடைகள் அணிந்து, பொங்கலிட்டு, தமிழ் முறைப்படி கொண்டாடுவது இளையர்களிடையே ஒரு சமூகப் பிணைப்பை உருவாக்கும். அவர்களின் முன்னோர்களின் வரலாற்றோடும் வாழ்க்கைமுறையோடும் தங்களை இணைத்துக்கொள்ள ஒரு பாலமாக அமைகிறது.

இன்றைய இளைஞர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறை கொண்டவர்கள். பொங்கல் பண்டிகை இயற்கையைப் போற்றும் ஒரு திருவிழா என்பதை அவர்கள் உணர வேண்டும். மண்ணையும், தண்ணீரையும், சூரியனையும் தெய்வ சக்தியாய் மதிக்கும் இந்தப் பண்டிகை, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு உந்துகோலாகவும் இருக்கிறதுமண்பானையில் உணவு தயாரித்து வாழை இலையில் உண்பது போன்ற பொங்கல் மரபுகளின் காரணங்கள் அறிந்தால், இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இப்பண்டிகையில் அதிகம் நாட்டம் காட்டுவார்கள்

மின் திரைகளில் மூழ்கியிருக்கும் இன்றைய சூழலில், பொங்கல் பண்டிகை குடும்ப உறுப்பினர்களை ஒன்றிணைக்கிறது. பொங்கல் பானையில் பால் பொங்கும்போது அனைவரும் இணைந்துபொங்கலோ பொங்கல்என்று முழங்குவது ஒரு கூட்டு மகிழ்ச்சியைத் தருகிறது. இது தலைமுறைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து, உறவுகளை வலுப்படுத்துகிறது.


உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்என்றார் பாரதியார். நகரமாக இருந்தாலும் நம் உணவு எங்கிருந்து வருகிறது என்பதை  நகர வாசிகளும் இளையர்களும் மறந்துவிடலாகாது. உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் எனும் கூற்றினைக் கேட்டிருப்போம். பொங்கல் என்பது வெறும் கிராமத்து திருவிழா அல்ல அது வாழ்வியல் முறை ....இன்றைய தலைமுறையுடன் கொண்டாடுவோம் ..பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள் .....

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக