Passport Office...(Coimbatore)
கடந்த சில நாட்களாகவே என் மதி மயங்கிக் கிடக்கின்றது. இது இந்தியாவா? நான் இந்தியாவில் தான் வாழ்கிறேனா? என்று பலமுறை எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன்.
காரணம் கோவையில் கடவுச்சீட்டு அலுவலகத்தில் நடந்த சமாச்சாரங்கள்.
கடவுச்சீட்டு தேதி முடியப் போகின்றது என்றார் நண்பர்,அவருடன் சென்றுவரலாம் சென்றபொழுது ,ஆகா இதை வைத்து இந்தத் துறை எப்படிச் செயல்படுகின்றது என்று இணைய தளம் வாயிலாக உள்ளே சென்ற போது பூ மாதிரி வழுக்கிக் கொண்டே சென்றது. எந்த தொந்தரவும் இல்லை. எந்த சிக்கலும் கடைசி வரைக்கும் உருவாகவே இல்லை. அடித்துத் திருத்தி மாற்றி என்று எத்தனை முறை செய்தாலும் அனைத்துக்குமான எளிமையாக இணையதளத்தை அமைத்துள்ளனர்.
உள்ளே நுழைந்து அவர்கள் கேட்ட ரூபாய் 1500 கட்டி முடித்தவுடன் தேதி குறிப்பிட்டு இந்த மணிக்கு வந்து விடவும் என்று முகவரியுடன் மின் அஞ்சல் வழியாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவித்தனர். ஈரோடு, கோவையில் இரண்டு இடங்கள், தபால் நிலையம் என்று நமக்குத் தேவையான வழிமுறைகளையும் காட்டுகின்றனர். நமக்கு அருகே உள்ள இடத்தை நாம் தேர்வு செய்து கொள்ள வேண்டியது நம் பொறுப்பு.
எந்த இடத்திற்குச் சென்றாலும் அரைமணி நேரம் முன்பே அங்கே சென்று விடுவது என் வாடிக்கை. ஆனால் இங்கே ஒரு மணி நேரம் முன்பே சென்று விட்டேன். வாசலில் நின்ற பெண்மணி குறுஞ்செய்தியைப் பார்த்து விட்டு அங்கே அமரவும். கால் மணி நேரம் கழித்து நானே அழைக்கின்றேன் என்றார். குரலில் அதிகாரம் இல்லை.
அரசாங்க அலுவலகம் என்றாலே சற்று கலக்கமாக இருக்கும்? என்ன கேட்பார்களோ? எவ்வளவு கேட்பார்களோ? எப்படி நடத்துவார்களோ? என்று. இருபது நிமிடம் முன்னால் சென்ற போது அந்தப் பெண்மணி எங்கே செல்ல வேண்டும்? எங்கே அமர வேண்டும்? யாரைப் பார்க்க வேண்டும்? என்று வகுப்பு போல எடுத்தார். கூட்டமே இல்லையே? மக்கள் உள்நாட்டில் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து விட்டார்களோ? என்று நினைத்துக் கொண்டே சென்று அமர்ந்தேன்.
நான்கு நபர்கள். நொடிப் பொழுதில் மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டு இருந்தனர். ஆதார் அட்டை, பழைய கடவுச்சீட்டு இரண்டையும் காண்பித்தவுடன் நகல் எடுக்க அறிவுறுத்தினர். அதற்கும் உள்ளே வசதி வைத்துள்ளார்கள். முதல் ஆச்சரியம். மொத்தமே மூன்று நிமிடம்.
மீண்டும் வாங்கி பரிசோதித்து விட்டு அடுத்த நிலைக்கு அனுப்பினார். இங்கு மொத்த நபர்களையும் வழிகாட்ட ஒரு தனியாகப் பெண் ஒருவர் இருந்தார். தடுமாறுபவர்களுக்கு உதவி புரிந்து கொண்டிருந்தார்.
அடுத்த நிலையில் சென்ற போது அவர்கள் பரிசோதித்து விட்டு ஒரு டோக்கன் சீட்டுக் கொடுத்து அடுத்த நிலைக்கு நகர்த்தினர். மொத்தம் மூன்று நிமிடங்கள்.
டோக்கன் எண் திரையில் தெரிகின்றது. இப்போது முக்கியமான கட்டம். நம் கடவுச்சீட்டை வாங்கிப் பார்த்து விட்டு நம்மைப் புகைப்படம் எடுக்கின்றார். இரண்டு கைகளையும் வைத்து ஸ்கேன் செய்கின்றார். இரண்டு கட்டை விரலையும் ஸ்கேன் செய்கின்றார். அதிகபட்சம் ஐந்து நிமிடம்.
அங்கு ஒரு பெண் இருக்கின்றார். அவர் வழிகாட்டுகின்றார்.
இறுதியாக தலைமையாளரிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்றார். நம்மைப் பார்த்துவிட்டு, ஆவணங்களைப் பரிசோதித்து விட்டு பழைய கடவுச்சீட்டில் கேன்சல் என்று குத்தி முடித்து, மூன்று நாளில் உங்களுக்கு வந்து சேர்ந்து விடும். வாழ்த்துகள் என்றார்.
தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் ஒரே இடத்தில் கூட கூச்சல் இல்லை. சப்தம் இல்லை. அடிதடி இல்லவே இல்லை. ஒரு ஊழியர் கூட ஏட்டிக்குப்போட்டியாக பேசவே இல்லை. அலுவலகம் மிக சுத்தமாக உள்ளது. ஹிந்தி, ஆங்கிலத்துடன் தமிழில் அதுவும் சுத்தமான பிழையில்லாத தெளிவான அழகான தமிழ்மொழியில் எல்லா இடங்களில் பளபளப்பான போர்ட்டில் வாசகங்கள் நம்மை வரவேற்கின்றது.
வழிகாட்டுகின்றது.
நான் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது கணக்கிட்டுப் பார்த்தேன். அதிகபட்சம் அரைமணி நேரம் இருக்கும். கனவுக்காட்சி போலவே இருந்தது. ஒரே காரணம் டாடா குழுமத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனம்.
ஒரு முக்கியமான மக்கள் சேவையில் தொழில் நுட்பமும், தெளிவான திட்டமிடுதலுடன் கூடிய நிர்வாகமும் ஒன்று சேர்ந்தால் சாதாரண பொதுமக்களும் எந்த அளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்பதனை அன்று தான் முதல் முதலாகப் பார்த்தேன். பிரமிப்பாக இருந்தது என்றால் அது மிகையில்லை.
நன்றி நண்பருக்கு .......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக