சமவெளிப்பகுதியிலிருந்து மலைப்பகுதிக்கு ஒரு ஆய்வுப் பயணம்
பிப்ரவரி 14 காதலர் தினமான சனிக்கிழமை அன்று மறையூர், தளிஞ்சி, மஞ்சம்பட்டி சென்று வர ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். இதற்காக கடந்த ஒரு வாரகாலமாக மாவட்ட வனஅலுவலர் பார்த்து அனுமதி பெற்றிருந்தோம். ஆனால் அமராவதி வனச்சரகர் ஒத்துழைப்பில்லாததால் அந்த பயணம் ரத்தாகும்நிலை ஏற்பட்டது. சிவாவுக்கும் வங்கி விடுமுறை எனவே இந்த விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் கொடைக்கானல் சென்று வர மனம் விரும்பியது. உடனே மூர்த்தீஸ்வரி மேடம் அவர்களிடம் இது போன்று கொடைக்கானல் சென்று வரலாம் என்று சொன்னபோது அவரும் சரி என்றார்.
அடுத்து சனிக்கிழமை காலை 9.மணி முதலே கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. ஏற்கனவே எண்ணியது போல் பாலு வீட்டில் உணவருந்திவிட்டு 10 மணிக்கு கடைக்கு வரும் முன்பே சிவா என்ன தோழர் என உற்சாகத்தோடு கிளம்பி தயாராக இருந்தார். ஜெய்சிங்கிடம் 10 மணிக்கு பேச வரும் வரை சந்தேகமாக இருந்தது. அவரும் 11.15 க்கு வந்துவிட்டார். ஐஸ்வர்யா வாகன நிறுத்தத்தில் என்னுடைய வாகனத்தைப் போட்டுவிட்டு ஜெய்சிங்கின் காரில் பயணமானோம். அதற்குள் மேடத்திற்கு ஏற்கனவே தட்டச்சு செய்திருந்ததை பிரிண்ட் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். மைவாடி வழியாக பைபாஸ் சாலைக்கு சென்று அங்கிருந்து பழனி செல்லும்போது ஜெய்சிங்கிற்கு அவ்வளவு மகிழ்ச்சி. இது நாள் வரை இந்த பைபாஸ் சாலை இருப்பது தனக்குத் தெரியவில்லை எனவும், மிகவும் வசதியாக இருப்பதை பார்த்துபார்த்துபரவசத்துடன் வாகனத்தை ஓட்டினார். இயல்புக்கு மாறாக 120 ல் வண்டி பறந்தது.
அடுத்த 20 நிமிடத்தில் பழனி மூர்த்தீஸ்வரி இல்லத்தில் இருந்தோம். அங்கு சூடான சுவையான காபி பிரதீப்பின் கைவண்ணத்தில், மதிய உணவு அங்கு வேண்டாம் சாப்பிட்டால் நேரமாகுமென அறிந்து நேரே தாண்டிக்குடி முதலில் சென்றுவிடலாம் என்று கிளம்பினோம். இந்த முறை ஜெய்சிங்கின் காரில் ஆங்கிலப்பாடல்கள், ஒரு சில சொற்கள் மட்டுமே புரிந்தாலும் முழுவதுமாக ஆங்கிலப்பாடல்கள் புரியவில்லை. என்ன செய்வது அவருடைய கார் அதனால் அவரின் விருப்பப்படி பயணம். போகும் அவசரமோ அல்லது விருப்பமின்மை காரணத்தாலோ தாண்டிக்குடி கொடைக்கானலுக்கும் பழனிக்கும் இடையில் இருப்பதாக அறிந்து தாண்டிக்கு செல்ல மனம் விரும்பியது. ஆனால் பெருமாள் மலைக்கும் அடுத்து வத்தலக்குண்டு சாலையில் கீழே இறங்கும்போது தாண்டிக்குடி 15 கி.மீ. அப்பொழுதும் தெரியவில்லை. பண்ணக்காடு வழியாக மீண்டும் தாண்டிக்குடி வாகனம் திரும்பும்போது ஏதோ தேவையில்லாத சுற்று வழியில் வந்தது போன்று ஒரு உணர்வு.
தாண்டிக்குடிக்கு செல்லும்முன்பே அதைப்பற்றியான ஒரு புரிதலுக்கு அங்கு வசிக்கும் ஒரு பட்டிமன்ற பேச்சாளரிடம் ஜெய்சிங் பேசி, முதலில் கொட்லாங்காடு செடி விற்பனைசெய்யும் இடத்திற்கு செடிகளைவாங்கிக்கொண்டு பிறகு கோயிலுக்கு போகலாம் என்ற எண்ணத்தோடு முதலில் கொட்லாங்காடு செடிவிற்பனை நிலையத்திற்கு பண்ணைக்கு சென்றோம். பழனியிலிருந்து வடகவுஞ்சி வரையிலும், எந்தப் பதிவும் செய்யவில்லை. பி.எல்.செட், வடகவுஞ்சி கூம்பூர் வயல், இரட்டை வளைவு, இடத்திற்கு அடுத்து பழனியின் எழில்மிகு தோற்றம் என்ற பெயர்ப்பலகை தெரிந்தது. அங்கிருந்து பார்த்தால் பழனி நன்றாகத் தெரியும் என்பதற்கான இடம். அங்கு சில பேர் நின்று படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அடுத்து ஆணைகிரி சோலை, இது ஆணைகள் வலம் வருவதற்கான இடம் என்பதைக்குறிப்பாக உள்ளது. பெருமாள் மலைக்கும் பழனிக்கும் இடையில் தாண்டிக்குடி இருப்பதாக க் கருதிக்கொண்டு இந்த பயணம் இருந்தது. ஆனால் பெருமாள் மலைக்கும் பண்ணைக்காடுக்கும் அடுத்து ஒட்டன்சத்திரத்திலிருந்து தாண்டிக்குடி செல்வதென்பது மிகவும் எளிதான பயணம். அது பாதையும் அகலமானதாக பெரிதானதாக இருக்கிறது.
பொதுவாக கொடைக்கானல் என்பது சுற்றுலா பயணிகளுக்கான ஒருகுளிர்ச்சியான இடம் என்பதை அடுத்து வேறு சில வரலாற்றுத் தரவுகளும் இருக்கின்றது என்பதை இதன் வழியாக நாம் அறிய இந்தப் பதிவு உதவியாக இருக்கும்.
நாளை சிவன்ராத்திரி என்பதால் அங்கு பணியாற்றும் அம்பிகா என்பவர் கோயிலுக்குச் செல்வதற்காக கொஞ்சம் சீக்கிரமே கிளம்புவதால் விரைந்து சென்று செடிகளை வாங்கிக்கொண்டு அடுத்து முருகன் போகத் திட்டம். அவ்வாறே தாண்டிக்குடிக்கு முன்னமே வலதுபுறம் காவல் நிலையத்திற்கு முன்புறம் செல்லும் வலது கைப்பக்கம் திரும்பி சுமார் 5, அல்லது 6 கி.மீ. அடர்ந்த வனப்பகுதி , பல்லாங்குழி பிரிவிலிருந்து கொட்லாங்காடு சென்றால் அந்த பண்ணைக்கும் போகலாம். அதற்கு முன்பு பெருமாள் மலையிலிருந்து பண்ணக்காடு போகும் வழியில்தான் மீச்சூர் உள்ளது. இங்கு தான் அரசு பொறியியற் கல்லூரி உள்ளது. வழிமேல் இருந்தது அதையும் பார்த்து நகர்ந்தோம். பெருமாள் மலை வரைக்கும் நல்ல குளிர்ச்சியான தட்ப வெப்பநிலையத்தில் பயணம் செய்து விட்டு கீழே இறங்கும்போது கடுமையான வெயிலாக இருந்தது. ஆம் சமவெளி பகுதி போன்று இருந்தது. மச்சூர், பனிக்கரை, வடகரைப்பாறை, எதிரொளிப்பாறை என பெயர்களே தம்முடைய வரலாற்றைத் தாங்கி இருந்ததுதெரிய வந்தது.
மீச்சூரில் விவேகானந்த மெட்ரிகுலேசன் பள்ளி பேருந்துகளும் இயக்கப்படுகிறது. நல்ல வருமானம் தரக்கூடிய பெரிய நிறுவனமாக இருக்கிறது. பெருமாள் மலை பகுதியில் இது போன்று பெரிய பள்ளிகள் இல்லை. தாண்டிக்குடி நவலோசை முருகன் கோயில், பாலமுருகன் கோயில், பாறை முருகன் கோயில் என குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகத் தெரிந்தது. அப்படி இல்லை. குறிஞ்சி நிலத்தின் தலைவன் முருகன் என்பதால் மலைப்பகுதிகளில் முருகன் வழிபாடு இயல்பாக இருக்கும். இது நம்முடைய முன்னோர் வழிபாட்டின் எச்சம்.
மதிய உணவு கூட உட்கொள்ளாமல் விரைந்து கொட்லாங்காடு, நாற்றப்பண்ணைக்குச் சென்றோம். இயல்பாக புதிதாக மிகவும் பக்குவமாக வாகனம் ஓட்டுபவர்கள் இங்கு செல்ல முடியாது. செல்ல வேண்டாம். இந்த மலைப்பகுதிகளில் வாகனம் ஓட்டுவதற்கு தனித்திறன் வேண்டும். அதே போல் தாண்டிக்குடியிலிருந்து கொட்லாங்காடு செல்வது சாதாரண பயணமல்ல. மலையுந்து எனப்படும் ஜீப்பில் பயணிக்கும் பாதையில் காரில் செல்லும்போது கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. அந்த அச்சமும் விரைவில் நிறைவேறிவிட்டது. ஆம், டயர் பழுதுபட்டுவிட்டது. (ஆனால் உடனே தெரியவில்லை) பண்ணையில் ஜெய்சிங் சில செடிகளை வாங்கினார். கல்லாபுரம் பகுதி என்பது கிட்டத்தட்ட கொடைக்கானல், ஊட்டி சீதோஸ்ண நிலையைக் கொண்டிருக்கும் பகுதி. மூன்று பக்கம் மலை. ஒரு பக்கம் ஊர். அதனால் அந்த கிளைமேட்டில் இந்த செடிகள்நன்றாக வளரும்.
செடிகளை வாங்கும்போதே இயல்பாக அம்பிகாவுடன் பேசினோம். அவரும் கல்வெட்டுங்களா, ஆராய்ச்சி பண்றீங்களா . . இப்பொ தஞ்சாவூர் காலேஜ்ல இருந்து வந்து பசங்க புள்ளைக ஆராய்ச்சி பண்றாங்க என்றும் இந்தா இங்கணுக்கெ மாகனூர்ல மூடுகல் மாதிரி இருக்கிறது ஆராய்ச்சி பண்ணுணாங்க, ஆம், அருகில் மாகனூர் பகுதியில் தஞ்சை தமிழ்த்துறை மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் அகழாய்வு செய்துவருவதாக பத்திரிகை செய்தி படித்த நினைவு.
ஜெய்சிங் தேவையான செடிகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்புவதற்குள் அங்கிருக்கும் அனைத்துப் பெண்களிடமும் இயல்பாகப் பேச 'ஏங்கெ இங்கணுக்க தாண்டிக்குடி ஒரு பொண்ணு இந்த ஆர்க்கியலாஜி படிக்குது, அந்தப் பொண்ணு அப்பா, முரளி அவுக வீட்டுக்கு கிட்டக்காலெ ஒரு கல்வெட்டு இருக்குதுன்னு ' என சொன்னதும் மகிழ்ச்சி பற்றிக்கொண்டது. அவர்களிடம் கூடுதலாகப் பேச அவர்களே எங்களுடன் அமர்ந்து பேசினர். பிறகு அனைவரின் பெயரைக் கேட்டுக்கொண்டு ஒரு படம் எடுத்துக்கொண்டு தாண்டிக்குடி நோக்கிக் கிளம்பினோம்.
மாகனூர் போகவில்லை. போனால் அடுத்து பார்க்க இயலாது. மணி 3 ஆகிவிட்டது. பசி, ஏற்கனவே உடுமலையில் வாங்கி வைத்திருந்த மிக்சர், முறுக்கு இருந்ததால் கொஞ்சம் சமாளிக்க முடிந்தது. தாண்டிக்குடியில் உணவகம் மிகவும் சாதாரணமாக நம் உடுமலை மாதிரியாகத்தான் இருக்கிறது. அங்கும் விஜய் கட்சி இருக்கிறது. ஏடிஎம் அருகில் என்றார்கள். அதையும் பார்த்துவிட்டு காபித்தோட்ட ஆராய்ச்சி மையம் இங்கிருக்கிறது. ஆம் இந்த மலை முழுமைக்கும் காபி, ஏலக்காய் சாகுபடிதான். இந்த வேளாண்மைதான்இவர்களது தொழில். காலை 8.15 முதல் பிற்பகல் 3.45 வரை. சம்பளம் 500 ரூ. பத்துகிலோ பொறுக்கி எடுக்கவேண்டும். அதில் இரண்டு கிலோ தேறும். மீதி குப்பையாகிவிடும். இந்தப் பகுதி பெண்கள் முழுமைக்கும் இந்தத்தொழில்தான்.
கொட்லாங்காடு பாதை அவ்வளவு அடர்த்தியாக இருந்தது. மிகப்பெரிய மரங்கள், ஒரு மரத்தை இரண்டு அல்லது மூன்று பேர் சேர்த்து கட்டிப்பிடிக்கவேண்டும். அந்தளவுக்கு பெரிய பெரிய மரங்கள். இரு புறமும் மரங்கள் நடுவில் ஒத்தையடிப்பாதை போன்ற காட்டுப்பயணம். தார் சாலையே இல்லாத காடுகள் நிறைந்த அடர்ந்த வனம். வனத்திற்குள் ஒரு பயணம். இரு பக்கமும் அவ்வளவு அடர்த்தியான மரங்கள். மரங்களைத் தொடர்ந்து செடி கொடிகள் இயல்பாக அமைந்தது .ஏதோ ஒரு அடர்ந்த காட்டுக்குள் செல்வது போன்ற உணர்வு. மனிதர்களையும் காணமுடியவில்லை. ஆங்காங்கே தகரம் வேய்ந்த வீடுகள், பீன்ஸ், கேரட் சாகுபடி செய்வதற்கான கொடிகள். இந்த அளவுக்கு மக்கள் தொகை இருந்தும் இந்த மலைவாழ் பகுதிகளில்குறைந்தளவே மக்கள் வசிப்பது போன்ற உணர்வு. சுமார் 15,20 நிமிட காட்டுவழி பயணத்திற்கு ஒரு நிறைவு. நாற்றுப்பண்ணை ஆராய்ச்சி நிலையம் என ஒரிடத்தில் மட்டுமே பெயர்ப்பலகை. மற்ற இடங்களில் இல்லை. புதிதாக யாரேனும் சென்றால் கொஞ்சம் சிரமம்தான். சாலைகள் கண்ணுக்குத் தெரியாது. நெடிய மரங்கள், செடி கொடிகள் அடர்ந்திருப்பதால் சாலை கண்ணுக்குத் தெரியாது. நாமே ஒரு நிதானத்தில் செல்ல வேண்டும். வழிதெரியாமல் திரும்பி வந்து மீண்டும் செல்லக்கூடிய பாதைகளாகவும் இருக்கிறது.
கட்லாங்காடு,பனியாங்காடு என்பதெல்லாம் காடுகளை அடையாளப்படுத்தும் இடங்கள். இவ்விடங்கள் காடுகளாக இருந்திருப்பதை அறிந்துணர முடிகிறது. இப்பொழுது இப்படி என்றால் பழங்காலத்தில் மக்கள் வசித்திருப்பது அரிதாகவே தோன்றுகிறது. அங்கு பண்ணையில் ஒரு சில நிமிடங்களில் அத்தனை பெண்களும் மிக இயல்பாக பேசினர். நம்முடைய பணியை சொன்னதும் அகமகிழ்ந்து அவர்கள் கொடுத்த உபசரிப்பு சிறப்பானதாக இருந்தது. ஆய்வு மனப்பான்மை இருக்கும் எங்களைப்போன்றவர்களை இவர்களும் மதிப்பு கொடுப்பதும், அவர்களுக்குத் தெரிந்த தகவல்கள், மனிதர்ளை அடையாளப்படுத்துவதும் நல்ல அணுசரனையாக இருந்தது.
சுமார் 60 க்கும் மேற்பட்ட எலுமிச்சை 5, பேசன் புருட்10, முள்சீதா 10 ஆவடை 20 நாத்துகளை வாங்கிக்கொண்டு கிளம்பினோம். தாண்டிக்குடி பேருந்து நிலையத்தில் சாப்பாடு சாப்பிடுவதை பார்த்த அதே ஊர்க்காரர் ஏலக்கா, காபி வாங்கிக்கொண்டு போங்க என்று அவர் வணிகத்தை ஆரம்பித்தார். ஜெய்சிங்கும் தமக்கு ஏலக்காய் நாத்து வேண்டுமெனக் கேட்க அவரும் வாங்கச்சென்று வர தாமதமானதும், ஏடிஎம் அருகில் இருக்கும் முரளி வீட்டுக்கு செல்லலாம் எனச்சென்றோம். ஏற்கனவே அம்பிகா சொன்னது, அங்கு செல்லும்போது வீட்டில் அவர்இல்லை, அதற்குள் அங்கிருந்த மரத்தில் புளி கொய்யாக்காய் பறித்து சாப்பிட ஆரம்பித்தோம். இதுவரைக்கும் கொய்யாக்காய் பார்த்திருக்கிறோம், சிறிய அளவில் கலாக்காய் போன்று புளிப்புக் கொய்யாக்காய் இப்பொழுததான் பார்த்திருக்கிறேன். அடுத்த ஐந்து நிமிடத்தில் அவரும் வந்துவிட்டார். வழக்கமான உபசரிப்புகளுடன் பேச ஆரம்பித்து அவர் இன்ன சாதி என அறிந்து உங்க சாதியில் பெண் இருந்தா சொல்லுங்க என பேசுமளவுக்கு வந்தோம். அவரும் கட்டாயம் தேநீர் குடித்துச்செல்ல வற்புறுத்த நாங்களும் குடித்துவிட்டு வந்தோம். இடையில் அவரின் உறவினர்கள் உடுமலையில் இருப்பதும் அவர்கள் இவ்வாறென தொழில் செய்கிறார்கள் எனத்தெரிந்து அவரும் மாப்ளெ கேட்க நாங்களும் பெண் கேட்டு பேசிவந்தோம். அவர் மனைவி ஆனைமலை நாங்களோ உடுமலை என்று சொல்ல 'நீங்க படிச்சது ஜிவிஜி யா' எனக்கேட்டதும் அவருக்கு மகிழ்ச்சி. ஆமாங்க நா ஜிவிஜி உங்களுக்கெப்படி தெரியும் என மகிழ்வோடு பேசினார். தன்னுடைய இரண்டு மகள்களில் ஒருவர் வரலாறு முனைவர் பட்டம் பெற்றதும் இன்னொரு பெண் தஞ்சைக் கல்லூரியில் பணியாற்றுவது குறித்தும் விளக்கமாகப் பேசினார்.
தாண்டிக்குடி குறித்தும் அதன் பூர்வகுடிகள் குறித்தும் கொஞ்சம் பேசினோம். இங்கு 24 மனை தெலுங்கு செட்டியார்கள், கவரா நாயுடு இருப்பதும் அறிந்தோம்.பேருந்துகள் அதிகளவில் ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு வந்து செல்வது பார்க்கமுடிந்தது. மிகவும் குளிர்ச்சி இல்லாமல், மிகவும் கடுமையான வெப்பம் இல்லாமல் நம் உடுமலை போன்று தட்ப வெப்பநிலை இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருக்கும் மக்களும் அவ்வாறே வெள்ளந்தியாக இருப்பதாக தெரிய வருகிறது. இன்னமும் முழுமையாகத் தெரியவில்லை.
அடுத்து ஏலக்காய் செடி கொண்டு வருவதாகச் சொன்ன பாண்டித்துரை இதுவரைக்கும் வரவில்லை. எனவே. நீங்க மேலெ முருகன் கோயில் போயிட்டு வாங்க வர்றதுக்குள்ள அந்த முத்துப்பாண்டிகிட்ட செடி வாங்கி வச்சிருக்கென் என்றார். ஆம், காபி ஆராய்ச்சி மையம் வழியாக மேலே சென்றால் மீண்டும் அதே வழியாக திரும்பி வரவேண்டும். தாண்டிக்குடி பேருந்து நிலையம் அருகில் அவரது வீடு இருப்பதால் மீண்டு வந்து வாங்கிச்செல்லலாம் என்ற அடிப்படையில் மேலே கோயிலுக்கு காபி ஆராய்ச்சி மையம் வழியாகச் சென்றோம். அடுத்து ஐந்து கிலோ மீட்டரில் சாலை மேல் ஒரு கற்திட்டை, அதைப்பார்த்து வியந்த எங்களுக்கு அடுத்தடுத்து ஐந்தாறு கற்திட்டைகள் அனைத்தும் பெரிய பெரிய அளவில் இருப்பது மிகவும் அதிர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பாறைமேல் இவ்வளவு கற்திட்டைகள் அமைத்திருப்பது மிகவும் அதிசயமே.
அதற்குள் சிவாவை படமெடுக்கச்சொன்னால், கடைசியாக பார்த்த கற்திட்டையிலிருந்து முதலில் பார்த்த கற்திட்டை வரை சுமார் 8 நிமிடங்கள் காணொளியாகவே பதிவு செய்துவிட்டார். நாம் பார்த்த கற்திட்டையில் பெரிய கற்திட்டை ரெட்டையம்பாடி கற்திட்டை 16ஃ8 அளவில் இருக்கும். அதே போன்று இந்த கற்திட்டைகள் அனைத்தும் 10ஃ12, 15ஃ10, 8ஃ10, 10ஃ6 என பெரிய அளவிலான பாறைக்கற்கள் இருப்பதை பார்க்க முடிந்தது.
இதைப் பதிவு செய்யும்போது அந்தப்பகுதியாக இருவர் நடந்து வந்தனர். அவர்களிடம் இந்தக் கற்திட்டைப்பற்றிக் கேட்கும்போது அவர்கள் பேத்து என வட்டார வழக்கில் கூறினர். பேத்து என்றால் தெலுங்கில் பெரிய, தமிழில் இடம்பெயர்தல் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வந்தவர்கள் என்ற பொருளில் இதனைப்பயன்படுத்தலாம். அவர்கள் இந்த பேத்து இந்த மழை முழுவதும் இருப்பதாகவும், அந்தக்கால குள்ள மனிதர்கள் அல்லது ஆதிகால மனிதர்கள் வசித்ததாகவும் அவர்கள்கூறுகின்றனர். அவர்கள் இதனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. கற்திட்டைக்கு அருகில் மது பிரியர்கள் கண்ணாடி பாட்டில்களை உடைத்துப்போட்டதிலிருந்து அந்த இடத்தின் அருமையை நாம் அறிந்து கொள்ளலாம்.
தாண்டிக்குடி முருகன் இவ்விடத்திலிருந்து தாண்டியதால் தாண்டிக்குடி என்றும் கேரளப் பகுதிக்கு தாண்டிச்சென்றதால் தாண்டிக்குடி என அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு சொல்கின்றனர். அந்தக் கற்திட்டையில் 2600 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த வீடு என்றும் எழுதியுள்ளனர். இந்தக்கற்திட்டைகள் குறித்து இன்னொரு முறை அந்தப் பகுதிக்கு கட்டாயம் செல்ல மனம் விரும்பியது.
மணி 5.10 அடுத்தடுத்து இருக்கும் கற்திட்டைகள் அழகான மலைப்பிரதேசம், சுத்தமான காற்று, பச்சைப் பசேலென புல்வெளிகள் என மனதிற்கு ரம்மியமான விருப்பமான சூழலிருந்து மீண்டு வர முடியாமல் அப்படியே முருகன் கோவில் சென்றோம். அங்கு பாறை ஓவியங்கள் இருப்பதாக சசிகலா தமது கொற்றவை வழிபாட்டு நூலில் எழுதியிருந்தார் அதை அப்படியே அவ்விடத்தில் படித்தபோது அவ்வாறு எந்தக் கீறல்களும் பாறை ஓவியங்களும் இல்லை. அந்த பாலமுருகன் கோயில் தற்பொழுது சுமார் 60,70 வருடங்களுக்குள் கட்டப்பட்டிருக்கவேண்டும். பாறை படிமங்களை வெள்ளை வண்ணத்தில் அடையாளப்படுத்திட பாறை ஓவியங்கள் என சொல்வது மிகவும் வேடிக்கையாக இருந்தது. அதற்கு பாதுகாப்பு வேறு. கோயிலின் வடக்குப் பகுதியில் சரிவான இடத்தில் இது இருந்தது. பிடித்து நடந்து செல்ல கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது. இவ்விடத்திலிருந்து பார்த்தால் தாண்டிக்குடி முழுமையான சிற்றூர் தெரிகிறது. மணி 5.45
வழக்கம் போல் கோயிலில் தரிசனம் செய்து விபூதி வாங்கி வந்துவிட்டார். இதுவரை கொண்டு போன டைரியில் எழுதவே இல்லை. மீண்டும் தாண்டிக்குடி பகுதிக்கு வரும்போது சாலையில் வலதுபுறக்காட்டில் சிமெண்ட்டில் ஒரு சிலை இருந்தது. அது பாவேந்தர் சிலை போல இருந்தது. அதனையும் கம்பி வேலி கடந்து சென்று பார்த்து விட்டு வந்தோம். அடுத்து முதன்மைச்சாலை வந்து காவல் நிலையத்திற்கு அடுத்து முத்துப்பாண்டியை அழைக்க அவரும் ஐந்து ஏலக்காய் செடிகளை கொண்டு வந்து கொடுத்தார். பாண்டித்துரைரயைப்பார்த்தால் ஒரு கூலியாள் போல் தெரிநதாலும் 10 ஏக்கர் நிலத்திற்கு உரிமையாளர் எனத்தெரியவில்லை. அவரை நினைத்து நம் பகுதி நிலக்கிழார்களை நினைக்கும் போது மிகவும் வேடிக்கையாக இருந்தது.
மணி 6 .20 இன்னமும் இருட்டவில்லை. சரி கொடைக்கானல் போலாம் என்று கிளம்பி பண்ணக்காடு வந்து மீண்டும் பெருமாள் மலை வந்து கொடைக்கானல் ஏரிக்குப் பக்கம் வரும்போது ஜெய்சிங்கின் தம்பியும் வந்துவிட்டார். அப்படியே நாம் தங்குமிடமான கீழ்பூமி வீதியில் சி.எஸ்.ஐ. சர்ச்சில் தங்க ஏற்கனவே ஜெய்சிங் சொல்லியிருந்தார். லேக்கில் ஜிம்கானா தெருவிற்கு அடுத்த வீதியில் உள்ள சர்ச்சிற்கு எதிரில் நடிகர் ஜெமினி கணேசனின் பங்களா இருக்கிறது. அருகில் அவரது மகள் கமலாகணேஸ் பங்களாவும் இருக்கிறது. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் இருக்கும்.
தங்கும் வீட்டிற்கு வரும்போது மணி 8.30 மீண்டும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு சாப்பிடக் கிளம்பி காரில் சாயிபாபா வளாகம் வரை சென்று ஏ2பி உணவகத்தில் சாப்பிடும்போது மணி 9.20
அதற்குள் மேடம் பிரதீப் சாரும் இரவு வந்து சேருவதாகச்சொன்னார்கள். அவர்களுடன் வீரய்யனும் வருவதற்காக பேசியிருந்தேன். அவ்வாறே மாலை அல்லது இரவு பிரதீப் சாருடன் பேசி வீரய்யனும் பழனி வந்து மூவருமாக சேர்ந்து இரவு 9.39 க்கு கிளம்பி 12.30 வந்து விட்டனர். அதற்குள் குளிர் தாங்க முடியாமல் சிவா ரெண்டு கம்பளி போட்டு படுத்துவிட்டார். ஜெய்சிங்கும் உறங்க சென்றுவிட்டார். மணி 9.44 அதற்குள் வழக்கமாக அழைக்கும் அசோக்கும் தலைவரும் அழைப்பில் வந்துவிட்டனர். இரவு அருகில் ஏதோ பட்டாசு தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்தது. ஜெய்சிங்கிடம் கேட்டபோது ஏதோ திருவிழாவாக இருக்கலாம் அதனால்தான் பட்டாசு வெடிப்பதாகக்கூறினார்.
இரவு 10.30 க்குள் இன்றைய காலையிலிருந்து பயணப்பதிவுகளுக்கான குறிப்புகளை பதிவு செய்தேன். மீண்டும் படுக்க முயற்சித்த போது முடியாமல் இரவு11.30 ஆகி பிறகு 12.30 க்கு மூவரும் வந்துவிட்டனர். அதற்குப்பிறகு உறங்கப்போக புதியதான இடம், புதிய சூழல் தூக்கம் வரவில்லை. எப்படியோ குளிரில் உறங்கிவிட்டேன். அதிகாலை 4 மணிக்கு சிவா எழுந்து, தோழர் சூரியன் எத்தனை மணிக்கு வரும் என்றார், நானும் தூக்கக் கலக்கத்தில் 10 மணிக்கு மேலதான் வரும் என்றேன்.
அந்த சர்ச்சில் ஆங்கிலேயர்கள், ஆங்கிலே இந்தியர்கள் தங்குவதற்கான விடுதி அது. அதனால் நல்ல வசதிகளுடன் இருந்தது.12.30 க்கு மூவரும் வந்தனர். இரவு கதவு திறக்கப்போகும் போது மூன்று நாய்கள் துரத்தி வந்ததும், நானும் ரோட்டில் ஓடிவிட்டேன். நல்லவேளை கடிக்கவில்லை. தொத்தியது. கடிக்கவில்லை. கதவைத் திறந்துவிட்டு தங்குமிடத்திற்கு ஓடிவந்துவிட்டேன். வீரய்யனிடம் லேக் சுற்றி வாக்கிங் போகலாம் என்று சொல்லியிருந்தேன். அதன்படியே காலையில் 6.20 வீரய்யன் சார் டைமாகுது என்றார். ஏற்கனவே முன் இரவே அவரிடம் சொல்லியிருந்தேன். காலை லேக்கில் வாக்கிங் போக அறையை விட்டு வெளியே வந்து வலதுபுறம் இறங்கினோம்.
மூவரும் லேக்கில் ஒரு ரவுண்ட் முழுமையாக வந்தோம். சுமார் 7.45 வரை சிவாஓடி ஓடி படம் எடுத்தார். நடப்பது நேரம் குறைவாக இருந்தாலும் படம் எடுத்த நேரமே அதிகமாக இருந்தது. லேக்கில் தண்ணிரீலிருந்து அழகாக மேலெழுந்து வரும் பனிப்புகை அற்புதமாக இருந்தது. ஒவ்வொரிடத்திலும் நின்று ரசித்து ரசித்து படமெடுத்தார் சிவா. ஓடியும், உட்கார்ந்தும் நின்றும் செல்பியாகவும் படம் எடுத்துக்கொண்டேஇருந்தார். அதற்குள் இரண்டு முறை ஜெய்சிங் அழைத்து சோப், சேம்ப், வாங்கி வரச்சொல்லியிருந்தார். லேக் வியூ டீக்கடையில் இஞ்சி டீ வர்க்கியோடு குடித்துவிட்டு அறைக்கு வர மணி 8..
மேடம் ஏன், சார் என்னெ விட்டுப்போனீங்கன்னு கேட்டதும் மிகவும் சங்கடமாக போய்விட்டது. அதற்குள் பேசிக்கொண்டே ஒவ்வொருவராக குளிக்க முதலில் ஜெய்சிங், பிறகு வீரய்யன், அடுத்து நான் சிவா, மணி 9.40 குளித்து முடித்தோம். நேற்று ஏ2பி சாம்பார் வடை சாப்பிட்டது சுவையாக இருந்தது. அந்த நினைவில் இன்று காலை ஏ2பி போகலாம் என்று சொல்ல ஜெய்சிங் பழைய உட்லண்ட் ஹோட்டல் நல்லா இருக்கும் என்று அழைத்துச்சென்றார். பிரதீப்புடனே வழக்கமான உரையாடல் நிகழத்தொடங்கியது. அனைவரும் பகிர்ந்து சாப்பிட முனு செட் இட்லி மூனு செட் பொங்கல் எனச்சொல்லி மீண்டும் இட்லி சாம்பார் மேடம் கேட்க நானோ சாம்பார் வடை எனமறந்து சொல்லிவிட்டேன். இதனால் இதனை நான் வீரய்யன், சிவா மூன்று பேரும் பகிர்ந்து சாப்பிட்டோம். அதே போல் ஏ2பி சாப்பிடும்போது ஒரு தேநீர் சொல்லி குடிக்கும்போது சிந்திவிட்டது. ஜெய்சிங் குடன் அவரது உறவினரும் உடன் வந்து சாப்பிட்டது மறக்க முடியாதது.
ஏற்கனவே நேற்று கொட்லாங்காட்டில் ஓட்டும்போது டயர் அடிபட்டு உடைந்திருந்தது. அப்படியே பண்ணக்காடு வந்து கொடைக்கானல் வரை எங்கும் நிற்காமல் வந்ததால் கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. உண்மையில் மிகவும் திறமையாகவும் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் வண்டி ஓட்டினார் ஜெய்சிங். மலைப்பகுதியில் காரை ஓட்டுவது சாதாரண செயலல்ல.
இன்று காலை உட்லண்ட்ஸ் சாப்பிட்டதும், ஜெய்சிங் நான் முன்னே சென்று டயரை சரி செய்கிறேன். நீங்க பின்னாடி வாங்க என்றார். நேரே உட்லண்ட்ஸ், பழைய காலத்து உடுப்பி விலையும் அளவாகத்தான் இருந்தது. ஏ2பி போலல்லாமல் பாரம்பரிய சுவையாக இருந்தது. ஆறு பேருக்கு இட்லி பொங்கல் என பகிர்ந்து சாப்பிட வாங்கினோம். கூடவே நேற்று ஏ2பி சாம்பார் வடை சாப்பிட்டது சுவையாக இருந்தது. அந்த நினைவில் இன்று காலை இட்லி சாம்பார் மேடம் கேட்க நானோ சாம்பார் வடை எனமறந்து சொல்லிவிட்டேன். இதனால் இதனை நான் வீரய்யன், சிவா மூன்று பேரும் பகிர்ந்து சாப்பிட்டோம். அதே போல் ஏ2பி சாப்பிடும்போது ஒரு தேநீர் சொல்லி குடிக்கும்போது சிந்திவிட்டது. ஜெய்சிங் குடன் அவரது உறவினரும் உடன் வந்து சாப்பிட்டது மறக்க முடியாதது. பெரும்பாலும் அங்கிருப்பவர்கள் இங்கு சாப்பிடுவது இயல்பு. மணி 10.00
நாங்கள் சாப்பிடுவதற்குள் ஜெய்சிங் சாப்பிட்டுவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு முன்னாடி சென்றுவிட்டார். நாங்களும் அதற்குப்பின்னால் செல்ல அவரோ நீங்க பூம்பாறையில் வெயிட் பண்ணுங்க, என்றார். சரி வழக்கமாகச் செல்லும் வழிதான் பிரதீப் சாரும் பூம்பாறை கோயிலுக்கே போய்விட்டார். மணி 11.00
பூம்பாறை குழந்தைவேலப்பர் முருகன் கோயில் பாரம்பரியமானது. தசபாசாணம் என்று சொல்லி வைத்துள்ளனர். (ஆனால் அது பொய்.) வழக்கமாக வரிசையில் நிற்கலாம் என்றதும் மேடம் சிவாவிடம் பணம் கொடுத்து சிறப்பு தரிசனம் 100 சீட்டு வாங்கிவிட்டார்;. சரி என்று உள்ளே செல்ல, ஏற்கனவே இரண்டு முறை அங்கு போயிருக்கிறேன். உள்ளெ சென்று வெளியில் வந்ததும் அங்கு உட்கார்ந்திருந்த நபரிடம் இந்தக் கோயில்லெ கல்வெட்டு இருக்கா எனக்கேட்டதும், அவரோ பெயர் பொறித்த இக்கால கல்வெட்டை காட்டினார். நானும் நகைச்சுவையாக சிரித்துவிட்டு மீண்டும் கிண்டலாகக் கேட்க அருகிலிருந்த நபர் யார் சார் நீங்கோ? என்றார். நானும் வழக்கமாக தொல்லியல் துறை என்றதும் பெயர் கேட்டான். மூர்த்தீஸ்வரி பெயரைச் சொன்னதும் அவரைத் தெரியுமே எங்க இருக்காங்க என்று சொன்னதும் கோயிலுப்பின்னால் நின்றுகொண்டிருந்த மேடத்திடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்தேன். அவருக்கு அவ்ளவு மகிழ்ச்சி 2015 ல் அவருடன் பணியாற்றியதை நினைவுகூர்ந்தார். உடனே உள்ளெ வாங்க சிறப்பு தரிசனம் செய்வோம் என்றார் மீண்டும், கடந்த வாரம் குடமுழுக்கு (கும்பாபிசேகம்) நடந்ததை சொல்லி தீர்த்தம் கேட்டிருந்தேன். கர்ப்பகிரகத்தில் சிலைக்கு அருகில் அழைத்துச்சென்று சிவா, வீரய்யன், மேடம் அனைவரும் அவரது வாரிசுகள் பெயரைச்சொல்லி அர்ச்சனை செய்தனர். சிவா தன் மகனுக்கு அர்ச்சனை செய்தார். உள்ளே சென்ற பூசாரி சிலைக்குக் கட்டப்பட்டிருந்த மஞ்சள் துணியை எடுத்து வந்து பிரத்யேகமானது சிறப்பானது என்று சொல்லி கொடுத்தார். அதற்குள் அந்த செயல் அலுவலர் சத்தியநாதன் (பின் பெயர் தெரிந்தது) ஒரு பிளாஸ்டிக் டப்பா கொண்டு வரச்சொல்லி அதில் அந்தத் தீர்த்தத்தை ஊற்றிக்கொடுத்தார். பிரதீப் சார் கீழே விழுந்து விழுந்து வழிபட்டார். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விபூதி பாக்கெட் பூசாரி கொடுத்தார். எனக்கு கொடுத்ததை சிவாவுக்கு கொடுத்துவிட்டேன். சிலைமேல் போட்ட பூவும் கொடுத்தார். மணி 11.40 இப்பொழுது உடுமலை சோழமாதேவி பள்ளியில் பணியாற்றும் முருகன் இந்த பூம்பாறையை சேர்ந்தவர். இவர் நம்மைப்பற்றி கேள்விப்பட்டு இது போன்று பூம்பாறையில் தமக்கு உதவ கோபால் என்பவரை அறிமுகப்படுத்தினார். அவரோ நீங்க மேல மன்னவனூர் கூக்கால் போய்;ட்டு வாங்க என்றார். அதனால் அவரிடம் சொல்லாமல் கோயிலைப்பார்த்து விட்டு கிளம்பினோம்.
கோயிலில் சிலைமேல் போட்ட துணி, தீர்த்தத்தை பிரதீப் சார் பத்திரப்படுத்திக்கொண்டார். மூர்த்தீஸ்வரி மேடத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி. நம்மைப் பற்றியும், அந்த செயல் அலுலர் சத்தியநாதனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு இது போல் குமணன் ஆய்வுக்காக கூக்கால், மன்னவனூர் செல்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்தோம். அடுத்து கூக்கால் செல்வதற்குள் ஜெய்சிங் இரண்டு மூன்று முறை எனக்கும் வீரய்யனுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். கூக்கால் ஏரி செல்வதற்குள் ஜெய்சிங் வந்துவிட்டார்.உணவு முடித்து போகும்போது ஒரே வாகனத்தில் ஐந்து பேரும் ஜெய்சிங் வண்டியில் அவர் ஒருவர் மட்டுமே பயணித்தார்;. எனவே, கூக்கால் ஏரிக்கு முன்பே நிறுத்தி சிவாவும் வீரய்யனும் ஜெய்சிங் வண்டிக்கு மாறினர். சிவா, தோழர் இங்குதானே அட்டை கடிச்சது என கடந்த முறை வந்ததை நினைவூட்டினார். மேலும் பாப்பிலியம்மன் கோயில் சென்றதையும் அந்த மலைப்பிரதேசம் தெரிந்ததையும் நினைவுபடுத்தினார்.
பிரதீப் சாரும் தனது பங்கிற்கு ஏற்கனவே இங்கு வரும்போது மணி 3.30 மலை ஏறி இறங்கும்போது மணி 6.30 பின் கூக்கால் சென்று சாப்பிடும்போது 7 அதற்குபிறகு ஊர் திரும்பியதையும் நினைவுகூர்ந்தார். இப்போது மணி 11.30 இப்போது கூக்கால் ஏரியில் நின்று படம் எடுத்தோம். இன்றுகாதலர் தினம் என்பதால் குளத்தில் இறங்கி அந்த அள்ளிப்பூ பிடுங்கமுடியுமா? என மேடம் நானும் தைரியமாக படிகளில் இறங்கு கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த பூவைப் பிடுங்கிவிட்டேன். அனைவரும் கையில் வைத்துகொண்டு படம் எடுத்துக்கொண்டோம்.
அடுத்து ஜெய்சிங் வண்டியில் மூவர், இந்த வண்டியில் மூவர் வாகனம் கூக்கால் நோக்கி சென்றது. ஆம், ஊர்த்தலைவர் வீட்டுக்கு கடந்த முறை பாப்பிலியம்மன் கோயிலுக்குச் செல்லும்போது பார்த்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. சரி நேரா தலைவாசல் என்று தலைவர் வீடு கேட்டு சென்றுவிட்டோம். மணி 3.05
பழங்கால கிராமம் ஓட்டு வீடு, நெருக்கமான சந்துகளில் பயணம். ஒழுங்கான கட்டமைப்பான வீடுகள். வீட்டிற்கு முன்னால் எப்பொழுதும் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும். அந்தத் தண்ணீர்தான் குடிப்பதற்கும் பாத்திரம் கழுவுவதற்கும் தண்ணீரை சேமிப்பது குறைவு. வீட்டில் புகை போட்டு வைத்துள்ளனர். எல்லா வீடுகளிலும் வெள்ளைப்பூண்டு மேலேகட்டி புகை போட்டுள்ளனர். சுமார் ஒரு வருட காலத்திற்கு இந்த பூண்டு நன்றாக புகைஏறி நன்றாகக் காய்ந்து விடும் பிறகுதான் விற்பனைக்கு வரும். வீட்டிலிருந்த அவரிடம் வழக்கமான சில கேள்விகள் ஊர் தொடர்பானகேள்விகள், அந்த அம்மாவிடம் சில கேள்விகள், பேசும்போதே அவர் அந்த அம்மாவை காபித்தண்ணீ போடு என்று மிரட்டிக்கொண்டே இருந்தார். நாங்களும் காபித்தண்ணி வேண்டாம் உங்களுடன் பேச வந்திருக்கிறோம் என்று சொல்லும்போது இரண்டு மூன்று பெண்கள் வந்து எங்களை பார்த்து விட்டுச்சென்றனர். மணி 3.18
இந்த நூற்றாண்டு கால செய்திகள் தெரிந்த அவர்களுக்கு பழைய செய்தி தெரியவில்லை. அந்த ஊரில் படித்தவர்களும் அவ்வளவாக இல்லை. அவரது மகன் வேல்மயில் வனக்காவலர். கடந்த முறை பாப்பிலியம்மன் கோயிலில் பார்த்தோம்.
இந்த ஊர்த்திருவிழா மண் சார்ந்த திருவிழா, இவர்கள் வீட்டிலிருக்கும் மாடுகளில் மலைக்காட்டிலிருந்து அவிழ்த்து விட்டு இந்த தலைவாசலுக்கு எந்த மாடு முதலில் வருகிறதோ அந்த மாட்டின் உரிமையாளர் ஊர் மக்களுக்கு விருந்து வைக்கவேண்டும். அவருக்கும் பரிவட்டம் கட்டப்படும். இது போன்ற சில முகாமையான செய்திகள் கிடைத்தது. அதற்குள் அவருடன் வந்த சின்னப்பாண்டி முதலியார் என்றும் அவர் மந்திரிமார் என்றும் கூறினார். மணி 3.23
இந்த பெரியவர் ராஜா என்றும் இவர்தான் ஊருக்கு நாட்டாமை என்றும் சொல்கிறார்கள். அவர் வீட்டில் பெரிய அளவில் எதுவும் இல்லை. ஆனால் மந்திரி சின்னச்சாமி வீட்டில் ஈட்டி, அம்பு, சாமிக்கு சாத்தப்படும் வெள்ளி அணிகலன்கள் மற்றும் இரும்பு ஆயுதங்கள் நிறைய இருந்தது. இதனை எடுக்கக்கூடாது என்றும் திருவிழா அன்று மட்டுமே எடுப்பதாகவும் கூறுகின்றனர். இந்தப் பயணத்தில் இந்த ஒரு தகவலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அந்த வீட்டினுள் மேலே நிறைய பூண்டுகள் கட்டுக் கட்டாகக் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. எனவே அதைப்பார்த்ததும் அங்கேயே பூண்டு வாங்கலாம் என்று கேட்க அவர்களும் கட்டு ரூ 250 எனச்சொல்ல, மிகவும் குறைவு எனவே பேரம்பேசி 300 ரூபா சொல்லி 5கட்டுகள் வாங்கிக்கொண்டு வெளியில் வந்தோம். அடுத்து சின்னச்சாமிவீட்டிற்குள் நானும் சிவா, பிரதீப் இருக்கும்போது வெளியில் ஏதோசத்தம் கவனிக்கவில்லை. இந்த சின்னச்சாமி வீட்டின் பரண் மேல் ஏராளமான இரும்பு பொருட்கள். குத்துவேல், குத்தீட்டி, ஈட்டி, வேல், கம்பு என இருபதிற்கும் மேற்பட்ட ஆயுதங்களைப் பார்த்தும் மனம் மகிழ்வாக இருந்தது. 3.32
இதைப்பார்த்து விட்டு அவர் குடும்பத்தாரிடம் பேசிவிட்டு வெளியே வந்து பார்;த்த போது ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பூண்டு பை காணவில்லை. பிறகு கேட்க அவர்கள் ஏமாற்றி வாங்கியதாகக்கூறி கொடுத்ததை மீண்டும் வாங்கிக்கொண்டார்கள் எனச்சொன்னபோது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இதை உணர்ந்த சின்னச்சாமி உடனே வேறு நபரிடம் சொல்லி பூண்டு கிடைக்க ஏற்பாடு செய்தார். 42 கிலோ உள்ள ஒரு சாக்குப்பையை அனைவரும் வாங்கிக்கொண்டு திரும்ப்pனோம். மணி 3.35 கூக்காலில் இன்று ஒரு இறப்பு அதைப்பற்றி கேட்கும் போது அந்த மக்கள் கேத்தம் என்று சொன்னார்கள். பச்சை மூங்கிலில் தேர் கட்டிக் கொண்டிருந்தார்கள்.
அடுத்து மன்னவனூர் கை காட்டி குறிஞ்சி உணவகத்தில் சாப்பாடு குழம்பு ரசம் மோரோடு சாப்பாடு கிடைத்தது. கடந்த முறை சாப்பாட்டிற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது. மணி 3.45. அதற்குள் வண்டியிலிருந்து முறுக்கு மிக்சர் கொஞ்சம் உதவியாக இருந்தது. மேலும் கூக்காலில் கடலை மிட்டாய் வீரய்யன் வாங்கிக்கொடுத்து உணவு பசிஇல்லாமல் பார்த்துக்கொள்ளமுடிந்தது.
மன்னவனூர் குறிஞ்சி உணவகத்தில் ஐந்து பேர் சாப்பாடு , வீரய்யன் புரோட்டா சாப்பிட மணி 4.00 அங்கிருந்து கீழே கூம்பூர் சென்றோம். சுமார் 360 டிகிரியில் கீழே இறங்கியது கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. 5 கி.மீ என்றாலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. ரோடு இல்லாத மண் சாலைகள் கொஞ்சம் எச்சரிக்கையாக செல்ல வேண்டும். பெரிய பெரிய பள்ளத்தாக்குகள், வாழை, தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தனிப்பட்ட மக்களின் வாழ்வில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாவிட்டாலும் அந்தப்பகுதி மக்கள் பூர்வகுடிகள் என்று மட்டும் தெரிகிறது. அரசின் சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டு வருகிறது. பழனி சட்டமன்றத் தொகுதி. அரசின் நலத்திட்டங்கள் கொஞ்சம் சென்றடைந்த மகிழ்ச்சி. கூக்கால் இது மூன்றாவது முறை.
கூம்பூர் கொடைக்கானல் பகுதியில் கடைசி ஊர். அங்கிருந்து மன்னவனூர் 1 மணி நேரத்தில் நடந்து வந்துவிடலாம். கூம்பூர் சென்றடைவதற்கு பயணம் கொஞ்சம் கடினமாகவே இருந்தது. மனம் பதபதைக்க வைத்தது. கூம்பூர் அருகே மலைவாழ்மக்கள் வசிப்பதும், அவர்கள் மலைப்பகுதியில் இன்னமும்வழித்தடம் இல்லாமல் நடப்பதும், அவர்களுக்காக இரும்பு ஏணி அமைத்துக்கொடுத்தையும் ஜெய்சிங் கேட்டறிந்தார். அது மிகவும் பாதுகாப்பில்லாமல் இருப்பதாகவும், அவர்களுக்கு அது பழகிவிட்டதாகவும் கூறினார். அதற்குள் கூம்பூர் முருகன் கோயில் லிங்கமாக இருப்பதும், முகம் திரும்பி இருப்பதும், பழைய கால கோயில் எனவும் கூறப்படுகிறது. மீன் சின்னம் இருப்பதும் சோமவாரபட்டி கோயில் போன்று வேட்டுவர் பூசைசெய்வதும் பார்க்க முடிந்தது. மாலை 4.20 முதல் 4.30 வரை இருந்து விட்டு திரும்பினோம். வரும்போது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் சரியான ஏத்தத்தில் வரும்போது தலைவர் அழைத்தார். ஆம், தாராபுரத்திற்கு தெற்கில் உள்ள சிவத்தலங்களில் இன்று வழிபடவேண்டும் அதற்காக. ஆம், இன்று பிப்ரவரி 15. சிவன்ராத்திரி. வேறு வழியில்லாமல் பிரதீப் சார் வண்டியை ஓட்டிக்கொண்டே தாராபுரம், முதல் கணியூர் , உடுமலை வரைக்குமான வழிகளையும் கோயில்களையும் கூறினார். சரியாக ஏத்தம் ஏறும்போது எருமை நேராக நின்றுவிட்டது. பிரதீப் சாரும் சட்டென கைபிரேக் போட்டு நிறுத்தினார். அப்படியிருந்தும் வண்டி பின்னே இறங்கியது. கொஞ்சம் சிரமத்தோடு ஏத்தத்தில் வண்டியெ நிறுத்தி பேசிவிட்டு பிறகு வண்டியை எடுத்தார். (மற்றவர்களாக இருந்தால் நிலைமை வேறு)
கூம்பூரில் அங்கிருந்த மலையுந்து நண்பர்களிடம் பேசி அவர்களுடன் படம் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். அதற்குள் பூம்பாறை கோபால் என்பவர் இரண்டு மூன்று முறை அழைத்துவிட்டார். இது பூம்பாறை பாலா தேநீர்க்கடை நிற்பதாகவும் விரைந்து வரவேண்டுகை வைத்தார். நானும் கூக்கால் வராமலேயே கூக்கால் வந்துவிட்டோம். இன்னும் பத்து நிமிடம் , ஐந்து நிமிடம் என்று மன்னவனூரிலிருந்து பேசிக்கொண்டே வந்தேன். பூம்பாறை பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒருவர் நிற்பதை பார்த்தது அவரிடம் நீங்க கோபாலா எனக்கேட்க, நீங்க காலையிலே கோயிலுக்கு வந்தவங்கதானே எனப்பேசினார். ஆம், கோயில்பணியாளர். அருகில் சத்தியநாதன் இன்று காலைதான் இந்தக்கோயிலில் செயல் அலுவலராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
நான் கொடைக்கானல் போகவேண்டும் உங்களுடன் வரலாமா எனக்கேட்டார். தாராளமா வாங்க சார்? என்று அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே இது போல் இங்கு கோபால் என்பவர் எங்களைப் பார்க்க இங்குதான் நின்று கொண்டிருக்கிறார் என்று பேசிக்கொண்டே தொலைபேசியில் அடித்து அவரிடம் கொடுத்தேன். அவரும் எதிர்முனையில் குரல் கேட்டதும் சொல்லு மாப்ள, என்ன இங்கெ ன்னு பேச,இதோ ரோட்டு மேல பாலா கடையிலதான் டீ சாப்பிட்டுருக்கேன் சொன்னார். அவரும் வாங்க, இதோ இங்கெதான் நிக்கிறாரு என்று அழைத்துக்கொண்டு செல்ல, இந்த கோபால் சோழமாதேவி ஆசிரியர் முருகனின் சகோதரர் என பிறகு தெரிந்தது.
இப்போது கோடை பண்பலையில் சித்திரச்செவ்வானம் ஒலித்துக்கொண்டிருந்தது. ஊசிமலைக்காடுகளே பாடலோடு பயணம். சோழமாதேவியில் பணியாற்றும் ஆசிரியர் முருகன் இந்தப் பகுதியில் நிறைய கற்திட்டைகள் பாறை ஓவியங்கள் இருக்கிறது. இதுவரைக்கும் யாரும் ஆய்வுக்காக வந்ததில்லை நீங்கதான் முதலில் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே பிரதீப் சார் எத்தனெ டீ எத்தனெ காபி எனக்கேட்டு சொல்லி விட்டார். நேரம் 5.15 மணி ஆகிவிட்டது. இன்னொரு முறை மீண்டும் வருகிறோம்.அதற்குள் நீங்க அனைத்தையும் பார்க்கஏற்பாடு செய்துகொடுங்கள். நீங்களும்உடன் வரத்தயாராக இருங்கள் என்று சொல்லிவிட்டு காலையில் வழிபாடு, பூம்பாறை அருகில் இருக்கும் கோயில்கள் என அனைத்தையும் பேச,சத்தியநாதனை எங்களது வண்டியில் ஏற்றிக்கொண்டு கொடைக்கானல் வரும்போது மணி 6.15 லேக் ஏரியாவில் காத்துக்கொண்டிருக்க ஜெய்சிங் பின்னாடி வந்து கொண்டிருப்பதாக சொன்னார். ஆம், லேவட்ரியில் யாரோ ஒருவரை பார்த்து வருவதாகச்சொன்னார்.
அதற்குள் காருக்கு பெட்ரோல் போடவேண்டும் எனவே செண்பகனூர் அடுத்து நாம் போகும் வழியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடலாம் அவர் வரட்டும் என்று சொல்லிவிட்டு பங்க் வந்தோம். ஜெய்சிங் நானும் எனது வண்டிக்கு பெட்ரோல் போடணும் அங்கேயெ இருங்க என்றார்.
பெட்ரோல் போட்டுக்கொண்டு அடுத்து எங்கு நிற்கலாம் என்று சொல்லும்போது பெருமாள் மலையில் டீ சாப்பிடலாம் என்று சொல்லிவிட்டு காலையிலிருந்து மறந்து போன இசைராஜாவை உடன் அழைத்தோம். ஆம் அற்புதமான பாடல்களைக் கேட்க முடிந்தது. ஜெய்சிங் வாகனத்தில் ஆங்கிலப்பாடல்கள் ஒண்ணும் புரியவில்லை.
பெருமாள் மலை வெங்கடேஸ்வரா டீ கடையில் ஒரு வர்க்கி வர காபி வீரய்யன்சார் பால், ஜெய்சிங் வர காபி, மற்றவர்கள் தேநீர். ஆம் ஒரு வர்க்கி ஒரு காபி முடிந்து அடுத்து கீழே பழனி போய் வண்டி நிறுத்தலாம் என்று சொல்லிவிட்டு இளையராஜாவின் இசைராகத்தின் பயணம் தொடங்கியது.
மீண்டும் பழனி நட்சத்திரா உணவகத்தில் நிறுத்தவேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இசைராஜாவின் ராககீதத்தோடு வாகனம் இறங்கியது. மனம் மட்டும் கூக்கால் மந்திரி வீட்டிலும், பூம்பாறை கோபாலிடம் தங்கிக்கொண்டிருந்தது.
உயிரே படத்தில் பாடலோடு, பேசக்கூடாது ஆசை கூடாது என்ற பாடலோடும், இளைய நிலா பொழிகிறது, இதயம் வரை நனைகிறது என்ற பாடல் பாடும்போது உண்மையில் கொடைக்கானல் சில்லென்ற பனிமழையில் மனம் நனைந்துதான் விட்டது. நேற்று நனைந்த மனம் இன்னும் குளிரில்தான் இருக்கிறது. இதை அறிந்தோ அறியாமலோ மேடம், சார் ஸ்வெட்டர் பின்னாடி இருக்குது எடுத்துப்போட்டுக்கோங்க என்று சொன்னார். அவ்வளவாக சில்னஸ் இல்லைதான். தற்போது கூம்பூர் வயல், பி.எல்.செட், மேல்பள்ளம், கோம்பைக்காடு பகுதிகளை பார்த்துக்கொண்டு வருகிறோம். அடுத்து வா. வா கண்ணா வா, அரைச்ச சந்தனம் பாடலோடு இன்றைய சிவன்ராத்திரி சிவார்ப்பணம் விளம்பரங்களோடு பயணம் தொடர்கின்றது. 14 கொண்டை ஊசி வளைவுகள் புதியதாக வாகனம் ஓட்டுபவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக ஓட்டவேண்டும்.
ஒரே வேகமாகவும், சீராகவும் மிகுந்த எச்சரிக்கையுடன் ஓட்டவேண்டும். ஒரு நொடி கூட கவனம் சிதறாமல் வாகனம் ஓட்டவேண்டும். இங்கிருந்து பழனி மலை விளக்கு வெளிச்சத்தில் நன்றாகத் தெரிகிறது. இப்போது 10 வளைவுகள் தாண்டி வந்துவிட்டோம். அழகுமலராட பாடலும், என்னம்மா கண்ணு மிஸ்டர் பாரத் படப்பாடலோடு வரும்போது அந்த நினைவுகளும் வந்துசென்றது. சூழலுக்கேற்றவாறு நான் பாடும் மௌனராகம் கேட்கவில்லையா என்ற பாடல், இந்த சமூகத்தின் மீதான கோபத்தையும், சமூக உணர்வில்லாத மக்களையும் நினைத்து வேதனைப்பட வைக்கிறது. பூங்காற்று உன் பெயர் சொல்லு என்ற பாடல் பாடும்போது கிட்டத்தட்ட மலைப்பகுதி நிறைவடைந்து சமவெளியில் பழனிக்கு மிக அருகில் வந்துவிட்டோம். இப்போது மணி 8.55 நட்சத்திரா உணவகம் வரும்போது மணி சரியாக. 9.
உணவகத்தில் சாப்பிட்டு முடிய மணி 9.40 மீண்டும் ஒரே வாகனத்தில் உடுமலை வருவதற்கு சண்முகநதி வந்து மீண்டும் பழைய தாராபுரம்சாலை சென்று பைபாசில் மைவாடி பிரிவு வந்துஉடுமலை வீரய்யன் சார் வீடு வரும்போது மணி 10.30 ஐஸ்வர்யா ஸ்ணே;டில் வண்டியை எடுத்துக்கொண்டு கடைக்கு வந்து பூண்டுசாக்கை இறக்கி வைத்து விட்டு வீட்டுக்கு செல்லும்போது மணி 11.
ஆம் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய மலைப்பயணம் இன்று இரவு 11 மணியுடன் முடிவடைந்தது.
கூக்கால் ஆய்வு, தாண்டிக்குடி ஆய்வு குறித்தும் தனியாக எழுதவேண்டும். இந்தப்பயணத்தை சாலைகளின் காதலன் பிரதீப் சாருக்கும் புதியதாக இணைந்த ஜெய்சிங் அவர்களுக்கும் இந்தப் பயணக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன். வழக்கம்போல் சிவாவுக்கு நன்றி சொல்லாமல் இந்த முறை மூர்த்தீஸ்வரி மேடத்திற்கும், வீரய்யன் சாருக்கும் நன்றிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக