சனி, 22 நவம்பர், 2025

2009ல் அப் (Up) எனும் ஆங்கில திரைப்படம் வந்தது.

 அப் (Up) எனும் ஆங்கில திரைப்படம் வந்தது...

2009ல் அப் (Up) எனும் ஆங்கில திரைப்படம் வந்தது.
அதைப் பற்றி பேசினால் எல்லாருக்கும் முதல் 15 நிமிடங்கள்தான் நினைவில் உள்ளது. அதில் வயதான ஒரு கியூட் கபிள் — அழகான வாழ்க்கை வாழ்ந்து, பிறகு கணவனை விட்டுவிட்டு மனைவி இறந்துவிடுகிறார். மிக உருக்கமாகவும், அழகாகவும் இருந்ததால் அந்த 15 நிமிடங்கள்தான் எல்லாருக்கும் நினைவில் இருக்கிறது. அதன்பின் மொத்தப் படத்தையும் மறந்துவிட்டார்கள் போல.
பிளாஷ்பேக்கில் மனைவியுடன் தென்னமெரிக்காவுக்கு உள்ள நீர்வீழ்ச்சி—Paradise falls— சென்ற கணவன் கார்லிடம், மனைவி எலீ “இங்கே நம் வீடு இருந்தால் எத்தனை அழகாக இருக்கும்” எனச் சொல்லியிருப்பார். அதனால் கார்ல் வீட்டை முழுக்க ஹைட்ரஜன் பலூன்களால் நிரப்பி, வீட்டோடு சேர்ந்து தென்னமெரிக்கா நீர்வீழ்ச்சிக்கு பறக்கிறான்.
எதிர்பாராமல் ஒரு அனாதை சிறுவன் (ரஸ்ஸெல்) வருகிறான். ஒரு வித்தியாசமான பெரிய பறவை. ஒரு நாய். பாதி பலூன்கள் உடைந்து வீடு தரைக்கு அருகே வந்துவிடும். ஆனால் கார்ல் கயிற்றை கட்டி வீட்டை நீர்வீழ்ச்சியை நோக்கி இழுத்துக்கொண்டு நடக்கிறார்.
ஆனால் அவர் மறந்துவிட்டது— இப்போது அவரை நம்பி இருக்கும் உயிர்களை. சிறுவன் ரஸ்ஸல், பறவை, நாய் என அவருடன் உடன் பயணிக்கும் மனிதர்களின் தேவைகளை. மனைவியை இழந்த சோகத்தையும், கடந்த கால நினைவுகளையும் மறக்க அவர் வீடு, பொருட்கள், பழைய கனவுகளுக்கு முன்னுரிமை கொடுத்துவிடுகிறார். மனிதர்கள் நிகழ்காலத்தில் தங்களின் கடமைகளையும், தனக்காக காத்திருக்கும் மனிதர்களையும் புறந்தள்ளிவிட்டு, முன்பு வாழ்ந்த ஒரு வாழ்க்கைக்கும் அதில் இருந்த இறந்துபோன மனிதர்களுக்கும் முன்னுரிமை கொடுப்பதையே கார்லின் துயரம் காட்டுகிறது.
தற்காலத்தில் அடிக்கடி காணக்கூடிய காட்சி ஒன்று
"எதுக்கப்பா இத்தனை குடிக்கறே?"
"என் வாழ்வின் பழைய சோகங்களை மறக்க.."
"ஆனால் இப்ப உனக்கு ஒரு மனைவி, குழந்தைகள் இருக்காங்க. அவர்களுக்கு நீ இப்ப கொடுக்கும் துயரத்துக்கு அவர்கள் எத்தனை குடிக்கணும்?
மீண்டும் கார்லுக்கு போவோம்.
நிகழ்காலத்தில் காத்திருக்கும் மனிதர்களையும், கடமைகளையும் புறக்கணித்து, கடந்த காலத்தின் நிழல்களைப் பிடித்து வாழ்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை கார்லின் துயரம் காட்டுகிறது.
படத்தின் இறுதியில், கார்ல் மிகப் பெரிய முடிவெடுக்கிறார்.
மனைவியுடன் வாழ்ந்த வீட்டின் ஒவ்வொரு பொருளையும் எடுத்தெடுத்து வெளியே வீசத் தொடங்குகிறார்.
பொருட்கள் போகப் போக வீடு லேசாகி மேல் பறக்கத் தொடங்குகிறது.
அந்த மாற்றம் ஒரு சின்னம் —
பழைய நினைவுகளை, முடிந்து போன பந்தங்களை விட்டால் தான் வாழ்க்கை மீண்டும் பறக்கும்.
கடைசியில் வீட்டை அருவிக்கரையில் நிறுத்திவிட்டு, அதோடு வாழ்ந்த கனவை நிறைவேற்றிவிட்டு, கார்ல் தனது புதிய நண்பர்களுடன் அமெரிக்கா திரும்புகிறார்.
புதிய வாழ்க்கையை ஏற்கிறார்.
கடந்த காலம் அழகானது, ஆனால் அதிலேயே சிக்கிக்கொள்ளக்கூடாது
உங்கள் வாழ்க்கை இன்னும் முடிவடையவில்லை — புதிய உறவுகள், புதிய நட்புகள் காத்திருக்கின்றன.
Carl-ன் வாழ்க்கை 70க்கு பிறகு தான் ஆரம்பிக்கிறது. Russell, Dug, Kevin—அவர்களை சந்தித்த பிறகு வாழ்க்கையின் இரண்டாவது கட்டம் துவங்குகிறது.
கார்ல் வீட்டை விடாமல் இருக்க காரணம், அவரது துயரத்தை அவர் விடாமல் இருந்ததுதான். ஆனால் எலீ விரும்பியிருக்கபோவது அந்த அருவிக்கரையில் தனியாக கார்ல் தன் வாழ்வை வாழ்வது அல்ல
Ellie விரும்பியிருந்தது —
Carl மீண்டும் புன்னகைப்பதை.
அது தான் அவர் இறுதியில் செய்கிறார்.
~ நியாண்டர் செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக