தஞ்சை ராஜராஜ சோழன் ......
கோயில் கட்டிய பிறகு கடந்த 500 ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள், கோயில் சோழர் கால சிற்பங்கள் மறைத்து நாயக்கர்கால சிற்பங்கள், கோயிலில் கட்டிட அமைப்பு அதற்குள் இருக்கும் நுட்பமான வேலைப்பாடுகள் ஆகியவற்றை நீங்கள் பார்த்திராத கேட்டிராத செய்திகளை விரிவாகப் பார்ப்போம்.
தந்தை பெரியார் இந்தக்கோயிலைப் பார்த்துவிட்டு ஆயிரக்கணக்கான மனித உழைப்பில் உருவான ஒரு கல்சுவர், இதற்காக எவ்ளவு பணம், எவ்ளவு அறிவு ஆற்றால் வீணானது, இதனை ஒரு கல்வித்தலம் உருவாக்க செலவிட்டிருந்தால் நமது சமூகம் இன்னமும் எவ்ளவு மேம்பட்டிருக்கும் என்பதைக் கடந்த காலங்களில் நேரில் பார்த்ததிலிருந்து நானே அறிந்து கொண்டிருந்தேன்.
இன்று மீண்டும் அந்தக்கோயிலுக்குள் நண்பர்களோடு ஒரு பயணம். பொதுவாக கோயிலுக்கு செல்லும் அனைவரும் கோயிலை வெளியிலிருந்து கோபுரத்தை பார்த்துவிட்டு சிவ, சிவ, ஓம் நமச்சிவாய நா , நம்ம குடும்பம் நமது உறவினர்கள் நல்லாஇருக்கணும், நானு நல்லாஇருக்கும் என்று பொதுவாக வேண்டிக்கொள்வர்கள்.
அந்த ஆவுடையை சிவலிங்கத்தை வெளியிலிருந்து சுமார் 25 அடிக்கு தள்ளி நின்று பார்த்து தரிசனம் செய்து விட்டு வருவது அனைவருக்கும் பொதுவானது. ஆனால் நாம், (நான்) அப்படி இல்லெ என்பதை இந்தப் பதிவு உங்களுக்கு தெரியப்படுத்தும். இதற்காக முனைவர் மூர்த்தீஸ்வரிக்கு சிறப்பு நன்றிகள்.
தமிழ் எழுத்துக்கள் 246 இதில் பயன்பாட்டில் இருப்பது 216 உயிர் எழுத்துக்கள் 12 மெய் எழுத்துக்கள் 18. இதோடு நம் கருவறை சிவலிங்கம், ஆவுடை, கட்டிட அமைப்பு ஆகியவற்றைப் பொருத்திப் பார்க்கலாம்.
மேலும் அந்தக்கருவறை முழுமையாக ஒரு மனித உடலை ஒத்திருக்கின்றது என்பதையும் தெரிந்துகொள்வோம். இதனை நமக்கு தொல்லியல் துறை சார்பாக விளக்கிச்சொன்ன விஜயகுமார் என்பவர் கொஞ்சம் சிரத்தை எடுத்துசுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நமக்கு விளக்கமாகவும், கருத்துரையாகவும் பேசினார்.
இந்தக்கோயில் 7 ஆண்டுகளில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. இந்தக்கருவறை விமானம் வரை மட்டுமே. அதற்குப்பிறகு அடுத்த வந்த அரசர்களால் கட்டப்பட்டது. நாம் முதலில் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் கண்காட்சியை பார்த்தோம். அதில் ஆயிரம் ஆண்டு கால நிகழ்வுகளை ஓவியங்களாகவும், கட்டிடங்களாகவும், தொல்லியல் துறை பராமரித்து வருவதை பார்த்தறிந்தோம்.
சோழர் கால ஓவியங்கள், அதற்குப்பிறகு மராட்டியா மன்னர்கள் ஓவியம், நாயக்கர் கால ஓவியம் எனத் தனித் தனியாக ஓவியங்கள் வரைந்திருப்பதும், அதன் உண்மைத்தன்மையினையும் அறியும்போது ஆயிரம்காலமாகியும் அப்படியே இருப்பதை பார்க்கும்போது கொஞ்சம் மெய் சிலிர்;க்கச் செய்யும்.
இயல்பாக ஆவுடை லிங்கத்தைத் தரிசனம் செய்யும் இடத்திலிருந்து இன்னும் கொஞ்சம் 15 அடி கூடுதலாக ஆவுடைக்கு அருகில் சுமார் இரண்டடி வேறுபாட்டில் படிக்கு இந்தப்புறம் நின்று அந்த லிங்கத்தை பார்க்கும் போது கொஞ்சம் உடம்பு ஜில்லென்று இருந்தது. இது நான் பார்ப்பது நான்காவது முறை, அப்பொழுது சிவா, சசி, மாமா முகம் கொஞ்சம் அச்சத்தோடு இருப்பதைக் காண முடிந்தது. சுமார் பத்து நிமிடங்கள் அந்த இடத்தில் நின்று விட்டு இதே இடத்திலிருந்து கிழபுறம் கதவை விஜயகுமார் திறந்தார். அது தொல்லியல் துறையினர் மட்டுமே உள்ளே செல்லும் வழி,
தரையிலிருந்து 216 அடிகள் விமான கோபுரம் வரை உயரம் கொண்டது ராஜராஜசோழன் கட்டிய கோபுரம். அந்த கர்ப்பக்கிரகம் , ஆவுடை, லிங்கம் என அனைத்தும் முதலில் உள்ளெ வைக்கப்பட்டு அதற்குப்பிறகு மணல் நிரப்பப்பட்டு யானைகளால் சாரப்பள்ளம் மூலம் மண் வேய்ந்து ஒவ்வொரு கல்லாக இண்டர்லாக் எனும் முறையில் ஒவ்வொரு கல்லும், இடையில் சிறு துளை ஏற்படுத்தப்பட்டு அதனை ஒன்றுக்குள் ஒன்றைச்செருகி லாக் போட்டுக்கொள்ளும் வசதியோடு இது அமைக்கப்பட்டது.
இவ்வாறுதான் இந்த முறையில்தான் கீழேயிருந்து மேல ஆகாய விமானம் வரை அனைத்துக்கற்களும் ஒவ்வொன்றாகக் கோர்த்து அமைக்கப்பட்டது. உண்மையில் பெரும் வியப்பாகத்தான் இருக்கின்றது. இதற்கு அடிபானம் என்பது வெறுமனே ஆறடிதான் என்பது இதைவிட வியப்பு.
மனிதனின் கால் பகுதி முதல் தலைப்பகுதி வரைக்குமான உடலமைப்பு இந்தக் கட்டிடக்கலை உணர்த்துவதாக இருப்பதாக அவர்தெரிவித்தார். கால் பகுதி ஆறு முதல் 10 அடி வரை இருப்பதாகவும், அதற்கு மேல் ஆவுடை இருக்கும் பகுதியிலிருந்து முதல் மாடி கோபுரம் வரை 32 அடிகளும், அதற்கு மேல் இருப்பது 20 அடிகள் வரை உயரமாக இருப்பதும், இந்த 41 அடியில் நம் உடற்பகுதி இணைவதும், அதற்கு இடுப்புப் பகுதி முதல் தலைப்பகுதி வரைக்குமான பகுதியை வயிற்றுப்பகுதி, நெஞ்சுப்பகுதி மனிதனின் முழுமையான செயல்பாடுகள் இருப்பதையும் இந்த கருவறை மேலான கட்டிடங்கள் உறுதிப்படுத்துகின்றன.
மேலே விமானத்திற்குக் கிழே காது போன்ற அமைப்பும், அதற்குக் கிழே கழுத்து போன்ற அமைப்பும் இருப்பதையும், தலைப்பகுதி என்பது 81 டன் கொண்ட நான்கு கற்களைக்கொண்டதெனவும் தெரிவித்தார். (ஓரே கல் என்பது பொய்)
நாம் வழிபாடு முடித்து முதற்தளத்தில் இருக்கும் சோழர் கால சிற்பங்களைப் பார்ப்பதற்கு உள்ளெ நுழைந்தபோது விஜயகுமார் உள்ளெ சென்று விளக்கு போட்டிருந்தார்.
ஒவ்வொரு சுற்றிலும், மூன்று மூன்று குழல் விளக்குகள், ஒன்றை அணைத்து அடுத்ததை போட்டு வந்தார். முதலில் இந்தக் கருவறை சுவருக்கும் வெளிப்புறம் இருக்கும் (நாம் அனைவரும் பார்க்கும்) வெளிப்புற சுவருக்கும் இடைவெளி என்பது ஆறடி இருக்கும். இந்த ஆறடி முழுமைக்கும் மணல் போட்டு நிரப்பப்பட்டே பணிகள் நடைபெற்றுள்ளது.
இந்த கட்டிடக்கலையின் சிறப்பை நாம் சொல்லிக்கொண்டே போகலாம். இருப்பினும் ஒரு சில செய்திகள் மட்டும் உங்களுக்காக ஆவுடை வடக்கு நோக்கி இருப்பதும், கிழக்கு தெற்கு மேற்கு என மூன்று பக்கமும் இருக்கும் சிற்பங்களை நாங்கள் பார்த்தோம். இதனை பொதுவாகஅனைவரும் பார்க்க இயலாது.
கிழக்குப்பக்கம் சிவன் உருவமாக ஒரேகல்லில் 25 டன் கொண்டதாக இருக்கின்றது. அந்த உருவத்தைப்பற்றி மிகவும் விரிவாகவும், விளக்கமாகவும் கருத்துரைத்தார்.
இந்தக்கல் இந்த உருவத்திற்கு முன்பு 50 டன் வரை இருந்ததையும், இங்கு கொண்டு வந்துதான் இந்த சிற்பம் செய்யப்பட்டதையும் உறுதிப்படுத்தினார். இதே போல் தெற்குப்பக்கத்தில் சிவன் சிலையும் மேற்குப் பக்கத்தில் லட்சுமி,சரஸ்வதி சிலையும் இருப்பதை விளக்கமாகச்சொன்னார்.
அப்போது கல்வியும், செல்வமும் இந்த சமூகத்திற்குத் தேவையானதென்பதை உணர்த்தும் அந்த லட்சுமி, சரஸ்வதி சிற்பம் இருப்பதையும், சரஸ்வதியின் கால்பகுதி மேற்பகுதியாக இருப்பதை சொல்லி தற்போது இவ்வாறு சமூகம் இல்லை எனவும், லட்சுமி கரமே எல்லாஇடத்தில் அதாவது செல்வமே முதன்மையாக இருப்பதையும், சரஸ்வதி பின்னால் இருப்பதையும் தெளிவுபடச் சொன்னார்.
அந்த லட்சுமி சரஸ்வதி சிலை பார்ப்பதற்கு ஒன்றாக இருந்தாலும் இரு வேறு அமைப்புகள் கொண்டதை அவர் சொல்லும்போதுதான் நமக்குத் தெரிய வருகிறது. லட்சுமியின் கண்கள் மையத்திலும், சரஸ்வதி கண்கள் ஓரத்திலும், கையில் தாமரை இலை, இன்னொரு கையில் புத்தகமும், கற் சிற்பங்களாக இருக்கின்றன.
இடையில் பெரிய நூலாக மார்புக்கச்சை இருப்பதும், இன்னொரு பக்கம் இல்லாமல் இருப்பதும், இடை ஒரு பக்கம் பெருத்தும், ஒரு பக்கம் சிறுத்தும் இருப்பதைக் குறிப்பிட்டுச் சொன்னார். மூக்கு, மார்பகங்கள், கை, கால் இவற்றின் பொருத்தப்பாடுகளையும் விளக்கி கூறினார் .
.
சோழர் கால ஓவியங்களாக சிதம்பரத்தில் தேவாரம் பாடிய மூவர் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என மூன்று பேரை அழைத்துச்சென்ற ஓலைச்சுவடிகள் எடுத்து வந்ததை ஓவியங்களாக இருந்தது, இது ஏடு தந்தானடி தில்லையிலே எனும் பாடலையும் நினைவு படுத்தி சென்றது.
இந்த ஓவியங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நினைத்துப் பார்க்கும் போது உடல் சிலிர்க்கத்தான் செய்யும். இப்போது அந்த ஓவியங்கள் மிகவும் தெளிவாக இருப்பதை பார்த்தாலே அவர்கள் எவ்வாறான பூச்சுகள், கலவைகள் பயன்படுத்தினர் எனக்கேட்டால் அனைத்தும் இயற்கையான மூலிகைச்செடிகளிலிருந்து இது வரையப்பட்டது எனக்கேட்கும்பொது நம்மவரின் திறமைகயை வியந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
சுமார் ஒரு மணிநேரத்திற்கும்மேலாக அந்த ஆவுடைக்கு மிக அருகில் சுவருக்கு அடுத்த பகுதியில் இத்தனை நேரமும் நின்றுகொண்டு இதனைப்பார்த்துக்கொண்டிருக்கிறோம். மீண்டும் வெளியே வந்தோம். வரும்போது,
அதே இடத்தில் நின்று அனைவரும் மீண்டும் வழிபட்டனர். நான்கூட இதுநாள் வரைக்கும்வழிபாடு செய்யாதவன் நமது நண்பர்களுக்காகவும், குறிப்பாக பத்மாவின் மகன் சீனுக்காகவும் அந்த இடத்தில் நின்று மனதளவில் சில நிமிடங்கள் வேண்டிக்கொண்டேன்.
இதற்காக ஒவ்வொருவருக்கும் பிரசாதம் தரவேண்டும் என்பதற்காக அசோக்கிடம் நூறு ருபாய், சசியிடம் நூறு ரூபாய், சிவாவிடம் நூறு ரூபாய் எனத் தனித்தனியாக பெற்று நம்மை அழைத்துச்சென்ற விஜயகுமாரிடம் வழங்கி சிறப்புப் பிரசாதம் பெற்றுத்தர வேண்டினேன். அவரும் ஒவ்வொருவருக்கும் ஒரு பை பெற்றுக்கொடுத்தார்.
கோயிலை விட்டு வெளியே வரும்போது தாம் பிறந்த பயனை அடைந்ததாக சசி சொன்னது உண்மையில் நெஞ்சை நெக்குருக வைத்தது. மாமாவும், மீண்டும் மீண்டும் வழிபாடு செய்து அவர்களின் பக்தியை வெளிப்படுத்தியது.
கோயிலின் மேற்குப்பகுதியாக வெளியேவந்து அனைவரும் செல்லும் முன்புறம் அர்த்த மண்டபத்தின் வழியாக மீண்டும் மேலே ஏறினோம். படிகள் குறுகலாம் இயல்பாக ஏற முடியாமல் குறுகலாகவும், கொஞ்சம் உயரமாகவும் இருந்தது. என்னால் இயல்பாக அவருடன் பேசிக்கொண்டே சென்றுவிட்டேன், சசி, மாமா, அசோக்,சிவா மெதுவாகவே வந்தனர்.
இன்னமும் அந்த கருவறை வழிபாட்டிலிருந்து அவர்கள்வரவில்லை.
மிகவும் சிரமப்பட்டு மேலே சென்றதும், முதல் தளம், அதாவது நாம் பார்க்கும் மூன்று விமானங்களில் முதல் விமானத் தளம், இது நிலத்திலிருந்து 31 அடி உயரத்தில் இருக்கிறது.
இது மூன்றாவது தளம், மண்டபத்திற்குள் செல்லும் போது ஒருவித அச்சத்துடன் அழைத்து சென்றார். யாரும் இல்லை நாங்கள் மட்டும்தான். சுமார் ஐந்து அல்லது எழு நிமிடங்கள் நடந்திருப்போம். முன்புறம் அர்த்த மண்டபத்தின் மேல் பகுதியில் நடந்துகொண்டிருப்பது தெரிந்தது. ஒரு பெரிய கதவை திறந்ததும், ஒரு கைப்பிடியுடன் இரும்புக்கம்பி தடுப்பு இருந்தது.
அதிலிருந்து மேலே பார்த்தால், யப்பா, வெறுமனே கூடாரம், உயரம், உயரமாக வெகு உயரத்தில் மிகவும் அழகாகவும், ஒரே சீராகவும், கட்டிடக்கலையின் உச்சத்தை வெளிப்படுத்தும் அற்புதமான ஒரு தோற்றத்தைக் கண்டதும், ஓஹோ . ஓஹோ இதுதான் நாம் வெளியிலிருந்து பார்க்கும் கோபுரத்தின் உட்பகுதி எனஅறிந்து கொண்டேன்.
ஒரு ஒலியைக் கொடுத்து அதன் பிறகு அந்த ஒலி எதிரொலிக்காமல் மேலே கோபுரம் செல்வதை அறிந்துணர முடிந்தது.
விஜயகுமாரும், அதற்குத்தகுந்தாற் நாம் நிற்கும் பகுதி, கீழே ஆவுடை லிங்கம் இருக்கும் பகுதியில் மேல் பகுதிஎன்றும், ஆவுடைக்கும் மேல் யாரும் செல்லக்கூடாது என்பதற்காக இந்த இரும்பு கைப்பிடிசுவர் என்றும் இந்தக்கட்டிட அமைப்பு 26 க்கு 26 அகலம் கொண்டதெனவும், லிங்கத்தின் உயரம் 18 அடி எனவும் அகலம் 12 அடி எனவும் தமிழ் எழுத்துக்களை நினைவுகூறும் வகையில் வடிவமைக்கப்பட்டதை கூறினார்.
கரூவூர் சித்தர்தான் இந்தக்கோயிலின் பொறியாளர் என்பதும், அவருடைய உருவச்சிலை கீழே இருப்பதையும் பார்த்தோம். மேலும் கருவறை கோபுரத்தில் கருவூர் சித்தர், ராஜராஜசோழன் ஓவியங்கள் இருப்பதும் இதனைஉறுதி செய்தது.
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளெ எனும் பாடலை திருவெண்ணெய் நல்லூரில் பாடியதையும், சம்பந்தர் சேரமான் பெருமாளுடன் வெள்ளை யானையில் இவர் செல்ல. சேரமாள் வெள்ளைக்குதிரையில் சென்றதையும் அங்கு பெண்கள் களியாட்டம் ஆடியதையும் ஓவியங்களாகப் பார்த்தோம்.
லிங்கத்தின் பகுதியிலிருந்து விமானப்பகுதி வரைக்கும் 216 அடிகள் என்றும் நிலத்திலிருந்து(வானத்திலிருந்து) 247 அடிகள் என்றும் தமிழ் எழுத்துக்களை நினைவு கூறும் இந்தக் கட்டிட அமைப்பு இருப்பதையும் நினைவுபடுத்தினார்.
மேலும் இந்தப்பகுதி கால் பகுதி என்றும் என்பதற்காக கோபுரப்பகுதியும் ,கருவறை சுவர்பகுதியும் பிரிந்திருப்பதும், இவ்விடத்தில் இணைவதும், இதிலிருந்து மேலே கழுத்துப்பகுதி சுமார் 174 அடிகள் அதாவது உடம்பின் பெரும்பகுதி இடுப்பிலிருந்து கழுத்துப் பகுதி வரை இணைந்திருப்பதாகவும் இதனைக் கூறினார் விஜயகுமார்.
இந்த சுற்றுப்பகுதியில் 108 சிவாலய நடனங்கள் பதிக்கப்பட்டிருப்பதும், அதில் ஒருசில வற்றைக் குறிப்பிட்டுச்சொன்னார். குறிப்பாக கட்டிடத்தில் கற்கள் முன்னமே அமைக்கப்பட்டு பிறகு செதுக்கப்பட்டதையும் கட்டிடக்கலையின் நுட்பத்தையும் அறிய முடிகிறது. குறிப்பாக இதில் 67 ஆவது சிற்பத்தில் நிழல் வெளிச்சத்தில் மூன்று விதமான தோற்றங்கள், கண்கள் மட்டும் பெரிதாகவும், பற்கள் மட்டும்பெரிதாகவும், மூக்கு சிறுத்தும், உதடுகள் பெரிதாகவும் இருப்பதை மூன்று இடங்களில் நின்று பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்பதை விஜயகுமார் செய்முறையாகக் காட்டினார்.
அனைவருக்கும் தெரிந்திருக்கும் எனக்குமட்டுமே அது அவ்வாறு தெரியவில்லை.
மேலும் இந்த 108 லிங்க நடனத்தில் 80 மட்டுமே இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 28 நடன அமைப்புகள் செய்யுமுன்னரே ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன் கங்கைகொண்ட சோழ புரம் அமைக்கச் சென்றதனால் இதனை செதுக்கிய பெருந்தச்சன் அங்கு செல்லாமல் தன் மகனை அனுப்பி விட்டதாகச்சொன்னார். மேலும் இந்த சிற்பப்பணிகள் அனைத்தும் ஒரே பெருந்தச்சனால் செய்யப்பட்டதென்றும் அவனுக்கு ராஜராஜ பெருந்தச்சன் எனும் பட்டம் கொடுக்கப்பட்டது என்பதையும்கூறினார்.
இவ்வாறு இங்கு பணி செய்து விட்டு அவரது மகனுக்கு செய்ய இவரது மனம் ஒப்பாமல் இருந்ததாகவும், இவரது மகன் அங்கு சென்றுவிட்டதால் இந்த சிற்பப்பணிகள் நின்றுவிட்டதாகவும் அவர் கூறினார். மேலும், எம்.ஜி.ஆர், இந்திராகாந்தி, கலைஞர் ஆகியோர் முயற்சி செய்தும் இதனை முழுமை அடைய செய்ய இயலவில்லை எனவும் கூறினார்.
ராஜராஜசோழனுக்குப்பிறகு யாரும் அவரைப்போல இல்லை என்பதையும், யாருக்கும் அந்தத் தகுதி இல்லையென்பதையும், இது காலத்தின் கட்டாயம் என்பதையும் அவர் சொல்லாமல் சொல்லிச் சென்றார். மேலிருந்து பார்க்கும் போது கீழே நடக்கும் மனிதர்கள் உருவம் கொஞ்சம் சிறுத்துத்தான் தெரிந்தது.
மேலிருந்து வரும்போது தொல்லியல் பணியாளர் விஜயகுமாரிடம் இவ்வாறு வாராஹி அம்மன் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் சசி கேட்டறிந்தார். அவரும் இந்த சிலை கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை மண்ணுக்குள் இருந்ததையும் நம்ம துறையினர் எடுத்து வெளியில் வைத்ததாகவும் கூறினார். உடனே சசி, இல்லெ ராஜராஜசோழன் எது செய்தாலும் வாராஹி அம்மனைக்கேட்டுத்தான் செய்வதாக ஒரு செய்தி உள்ளதே உண்மையா?எனக் கேட்டார் அவரும் அவ்வாறெல்லாம் இல்லை எனவும் அது பொய் செய்தி எனவும் கூறினார்.
கோபுரக்கருவறையிலிருந்து வெளியே வந்த பிறகு தென் கைலாயத்தைக் காட்டுவதாக கோபுரத்தில் இருக்கும் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் சிலைகளைக் காட்டினார் விஜயகுமார். கோபுரத்தின் மூன்றாவது தளத்தில் இருக்கும் இது கீழேயிருந்து பார்த்தால் தெரிவது கொஞ்சம் சிரமமாக இருக்கும். இந்த இடத்திலிருந்த அந்த சிற்பங்கள் மிக அழகாகத் தெரிந்தது.
புறாக்கள் எக்கச்சக்கமாக இருப்பதை பார்த்ததும், அப்துல் ரகுமானின் கவிதை நினைவுக்கு வந்தது. புறாக்களுக்கு மட்டும் சமயம் இல்லை, சர்ச்சிலும், பள்ளிவாசலிலும், கோயில்களிலும் எப்பொழுதும் எந்நேரமும் தங்கிச் செல்கிறது.
இது மனிதனால் முடியாதது, நான்தான் ஒரு புதிய இடத்திற்கு வரும்பொது அவர்கள் சொல்லும் செய்திகளை முழுமையாகக் கேளுங்கள். பிறகு நம்முடைய சந்தேகங்களை கேட்கலாம் என்றேன். மேலும்,வரலாறு சார்ந்த செய்திகளுக்கும் புராணம், நம்பிக்கை சார்ந்த செய்திகளுக்கும் நிரம்ப வேறுபாடுகள் உள்ளது.
வெறுமனே மக்கள் நம்பிக்கையை வைத்து காசு பார்க்கும் கூட்டத்தை இன்னமும் மக்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்பதன் வெளிப்பாடே இது
.
இவ்வாறு தஞ்சை கோபுரத்தின் மேல் நின்று ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்துப்பார்க்கும் போது நமது நண்பர்களையும் அழைத்துச்சென்று காட்டவேண்டும் என மன உந்துதல் ஏற்பட்டது.
பயணம் தொடரும் .......